ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஊரக வளர்ச்சிக்காக மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு

Posted On: 07 NOV 2017 5:03PM by PIB Chennai

MGNREGA திட்டத்தில் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்) 2017-18 ஆம் ஆண்டுக்கு அரசு இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச அளவாக ரூ.48,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்தத் துறையில் அனைத்து திட்டங்களுக்கும் சேர்த்து ரூ.1,05,442 கோடி ஒதுக்கியதன் மூலம், மொத்த ஒதுக்கீடு ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்தப் பணிகளில் 85 சதவீதம் 15 நாட்களுக்குள் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதை ஊரக வளர்ச்சி அமைச்சகம் உறுதி செய்திருக்கிறது. இது 2015-16 ஆம் ஆண்டில் 37 சதவீத பணிகளுக்கும், 2016-17ல் 42 சதவீத பணிகளுக்கும் என ஊதியம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது நிதி நிலையில் இந்தத் திட்டத்துக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப் பட்டுள்ளதால் 85 சதவீத பணிகளுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய நிதியாண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட அறிக்கை தாக்கல் உள்பட, முழுமையான நிதிநிலை பரிசீலனை தொடர்பாக, பொது நிதிநிலை விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுவதைப் பொருத்து மாநிலங்களுக்கான இரண்டாவது பகுதி நிதி ஒதுக்கீடு செப்டம்பர் மாதம் தொடங்கப்படும். கடந்த சில மாதங்களாக இதை அரசாங்கம் திரும்பத் திரும்ப மாநிலங்களிடம் வற்புறுத்தி வருகிறது. 2016 - 17 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளை சமர்ப்பித்துள்ள மாநிலங்களுக்கு இந்தத் திட்டத்தில் ஊதியம் மற்றும் பொருட்களுக்கு பட்டுவாடா செய்வதற்கான இரண்டாவது தவணைத் தொகையை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் ஏற்கெனவே விடுவித்துவிட்டது. கடந்த பத்து நாட்களில் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், குஜராத், மத்தியப்பிரதேசம், சிக்கிம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்கு நிதி விடுவிக்கப் பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கான மாநிலங்களுக்கு முன்மொழிவுகள் மிக அண்மையில் பெறப்பட்டதால், அவற்றுக்கான நிதி விடுவிப்பது குறித்த பணிகள் நடந்து வருகின்றன. கணக்குகளின் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகள் பெறப்பட்டதும், அவை உரிய வகையில் இருப்பதாக கண்டறியப்பட்டவுடன்  அந்த மாநிலங்களுக்குத் தேவையான ஊதியம் வழங்குதல் மற்றும் இதர செயல்பாடுகளுக்கான நிதி விடுவிக்கப் படுகிறது. பருவமழை நன்கு அமைந்துள்ள ஆண்டில் ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில்  வேலைக்கான தேவை குறைந்துள்ளது. மழை பற்றாக்குறையாக உள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு நித கிடைப்பதை உறுதி செய்ய உரிய கவனம் எடுக்கப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் பணம் பட்டுவாடா செய்வது மற்றும் தேவை இருந்தால், இந்தத் திட்டத்துக்கு  துணை நிலை பட்ஜெட்களில் கூடுதல் நிதி வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது.

கிராமப் பகுதிகளில் ஒட்டுமொத்தமாக வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு DAY-NRLM, PMGSY, PMAY(G) மற்றும் இதர செயல்பாடுகளின் கீழ் வரும் ஒதுக்கீடுகளை மத்திய அரசு கணிசமாக ஒதுக்கியுள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டியது முக்கியமாகிறது. 2018 டிசம்பர் மாதத்துக்குள் PMAY(G) திட்டத்தின் கீழ் சாதனை எண்ணிக்கையாக ஒரு கோடி புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட உள்ளன. 2018 மார்ச் மாதத்திற்குள் 51 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிடும். ஏற்கெனவே சுமார் எட்டு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. மீதி 43 லட்சம் வீடுகளின் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. PMGSY-யில் மாநிலங்களின் பங்கையும்சேர்த்து ஆண்டுக்கு சுமார் ரூ.29,000 கோடி செலவிடப்படுகிறது. திட்ட அமலாக்கத்தை கணிசமாக விரைவுபடுத்துவதன் மூலம், தகுதியுடைய குடியிருப்புகளில் (சமவெளிப் பகுதியில் 500 மக்கள் தொகை, மலைப் பகுதியில் 250 மக்கள் தொகை கொண்டவை)  சுமார் 85 சதவீத பகுதிகள் அனைத்து பருவநிலையையும் தாங்கும் சாலையால் இணைக்கப் பட்டுள்ளன. இது மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 57 சதவீதமாக இருந்தது. 2019 மார்ச் மாதத்திற்குள் 100 சதவீத இணைப்பு வசதி ஏற்படுத்தித் தருதல் என்ற இலக்கை எட்டுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பெரும்பாலும் இந்த இலக்கு எட்டப்பட்டுவிடும். DAY-NRLM திட்டத்தின் கீழ், வாழ்வாதார வாய்ப்புகளைப் பெருக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தற்போது சுய உதவிக் குழுக்கள் (SHG) வங்கி பிணைப்பு ரூ.47 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இது இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும். மற்ற ஊரக வளர்ச்சி முயற்சிகளும், கிராமப் பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. இந்த காரணத்தால்தான் கிராமப் பகுதியில் உண்மையான ஊதிய அளவு கணிசமாக உயர்ந்திருக்கிறது. தூய்மை பாரதம் திட்டம், 14வது நிதிக் குழு மற்றும் ஊரகப் பகுதிகளுக்கான வேறு பல திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ஆதார வசதிகள், கிராமப் பகுதிகளில் வேலையாட்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கச் செய்வதில் பங்களிப்பு செய்கின்றன.

 

 

<><><><><>

 

 



(Release ID: 1508655) Visitor Counter : 92


Read this release in: English