பாதுகாப்பு அமைச்சகம்

`நிர்பய்' நடுத்தர ரக ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது DRDO

Posted On: 07 NOV 2017 5:13PM by PIB Chennai

`நிர்பய்' என்ற நடுத்தர ரக ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) இன்று மேலும் ஒரு மையில்கல்லை எட்டியுள்ளது. இது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நீண்ட தொலைவு நடுத்தர ரக ஏவுகணையாகும். பலவகை தளங்களில் இதைப் பயன்படுத்த முடியும். ஒடிசா மாநிலம் சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனைப் பகுதியில் (ITR) இருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இது 100 மீட்டர் போன்ற குறைவான உயரத்தில் வெடிபொருள் சுமையை தாங்கியவாறு 0.7 மேக் (ஒரு மேக் என்பது ஒரு மணி நேரத்துக்கு 1235 கிலோ மீட்டர் தொலைவு பறப்பதைக் குறிக்கும்)அளவு வேகத்தில் பறந்து செல்லும் திறன் கொண்டது. ஏவுகணை புறப்பட்டதில் இருந்து இலக்கை அடையும் வரையில், திட்டமிட்டவாறு அனைத்து அம்சங்களையும் பூர்த்தி செய்தது. இந்தப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ள அனைத்து விஞ்ஞானிகளின் நம்பிக்கைக்கும் உத்வேகம் அளிப்பதாக இந்த சோதனை அமைந்திருந்தது.

முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டவாறு ஏவுகணை புறப்பட்டு, ஏவுதல் காலம், வேகம் அதிகரித்தல், என்ஜின் செயல்பட தொடங்குதல், இறக்கை செயல்பாடு மற்றும் இதர செயல்பாட்டு அம்சங்கள் தன்னிச்சயான முறையில் செயல்பட்டன. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ரிங் லேசர் கைரோஸ்கோப் (RLG) மற்றும் MEMS -ஐ அடிப்படையாகக் கொண்ட Inertial Navigation System (INS) மற்றும் GPS முறையுடன் கூடியதாக, வழிநடத்துதல், கட்டுப்பாடு மற்றும் பயண முறைமைகள் உருவாக்கப்பட்டிருந்தன. இந்த ஏவுகணை கம்பீரமாக மொத்தம் 50 நிமிடங்கள் பறந்து, 647 கிலோ மீட்டர் தொலைவை எட்டியது. தரைக் கட்டுப்பாட்டு ரேடார் உதவியுடன் இந்த ஏவுகணை கண்காணிக்கப்பட்டது. செயல்பாட்டுக் குறியீடுகள் DRDO-வால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு டெலிமெட்ரி நிலையங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன.

DRDO விஞ்ஞானிகளின் வெற்றிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் பாராட்டு தெரிவித்தார். உத்வேகத்துடன் கூடிய சாதனையை அவர் பாராட்டினார். இந்த சிக்கலான தொழில்நுட்பமும் நடுத்தர செயல்பாட்டுத் திறனும் கொண்ட இந்த ஏவுகணை வைத்திருக்கும், குறிப்பிட்ட சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்க்கும் வகையில், இந்த வெற்றிகரமான சோதனை அமைந்திருக்கிறது என்று அவர் கூறினார்.

DRDO தலைவர் மற்றும் பாதுகாப்பு (ஆராய்ச்சி & மேம்பாடு) துறை செயலாளர் டாக்டர் எஸ். கிறிஸ்டோபர், டைரக்டர் ஜெனரல் (Aero) டாக்டர் சி.பி. ராமநாராயணன், ADE, RCI, ITR மற்றும் CEMILAC இயக்குநர் மற்றும் DRDO மூத்த விஞ்ஞானிகளும், ராணுவத்தில் இதைப் பயன்படுத்தும் பிரிவுகளின் பிரதிநிதிகளும், ஏவுகணை செலுத்தப்படுவதை நேரில் பார்த்தனர். நீண்டகாலமாக காத்திருந்த இந்த சாதனையை DRDO பெருமையுடன் நிகழ்த்தியதற்காக `நிர்பய்' குழுவினரை அனைவரும் பாராட்டினர்.

 

******

 


(Release ID: 1508654) Visitor Counter : 160
Read this release in: English