குடியரசுத் தலைவர் செயலகம்

கேரளா வரலாற்று ரீதியாக ஆன்மிக பூமியாக திகழ்வதாக குடியரசுத் தலைவர் உரை

Posted On: 27 OCT 2017 8:00PM by PIB Chennai

வரலாற்று ரீதியாக கேரளா ஆன்மிக பூமியாக விளங்குகிறது என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.

 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தாகூர் திரையரங்கில் அக்டோபர் 27-ம் தேதி பொது மக்கள் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றிய போது இதைத் தெரிவித்தார்.

 

மேலும் பேசிய அவர், ஆதிசங்கரரில் தொடங்கி  நாராயண குரு, அய்யங்கலி உள்ளிட்ட பல ஆன்மிகத் தலைவர்கள் தோன்றிய இந்த பூமி ஆன்மிகத் தலைவர்களின் பாரம்பரியம் மிக்க மண்ணாக விளங்குகிறது என்றும் குறிப்பிட்டார். அவர்களின் மூலம் சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திடப்பட்டது என்றும் அவர் விளக்கினார்.

 

கேரளாவின் பாரம்பரியங்கள் மற்றும் சிந்தனைகள் மனித நேயமிக்க, மக்கள் நலன் சார்ந்த, ஜனநாயக ரீதியிலானது. கேரளாவில் கல்வி வளர்ச்சி, உடல் நலம் பேணுதல், மனித வள மேம்பாடு ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் நாட்டில் உள்ள மற்றப் பகுதிகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. சுகாதாரத்தைப் பொருத்தவரை கேரளா பாராட்டப்பட வேண்டிய மாநிலம் ஆகும். கேரளாவின் உள்ளாட்சி, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் இந்திய ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

 

கேரள மக்கள் தாங்கள் கற்ற கல்வி, பெற்ற அறிவை தங்கள் மாநிலத்துக்கு மாத்திரம் பயன்படுத்தாமல் இந்த தேசத்தை கட்டமைப்பதற்கும் நாட்டின் மற்ற பகுதியினருக்கும் பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றனர் என்றார் அவர்.

 

கேரள மாநிலம் சர்வதேச சமூகத்தால் இன்றுவரை தொடர்ந்து ஈர்க்கப்படுகிறது.  இந்த அழகிய மாநிலம் இந்தியாவின் முன்னணி சுற்றுலா தலமாக திகழ்கிறது. கேரள மாநிலத்துக்கு வெளியிலிருந்து அதிகம் பேர் வருகின்றனர் என்றாலும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மாநிலத்தை விட்டு வெளியே சென்று உலக அளவில் தங்களின் பங்களிப்பை அளிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார். வளைகுடா நாடுகள் பலவற்றில் ஏராளமான கேரளமக்கள் பணியாற்றி அந்த நாட்டின் பல்வேறு பணிகளின் முதுகெலும்பாக திகழ்கின்றனர். அத்தோடு அங்கு பெற்ற அனுபவங்களையும் நிதியையும் கேரள, இந்திய மக்களின் வளர்ச்சிக்காக உண்மையுடன் திரும்ப அளிக்கின்றனர் என்றும் திரு ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.

 

முன்னதாக திருவனந்தபுரத்தில் உள்ள சமூக சீர்திருத்த வாதி அய்யங்கலியின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அரசு சார்பிலான முதலாவது தொழில்நுட்ப  நகரத்துக்கான அடிக்கல்லையும்  குடியரசுத் தலைவர் நாட்டினார்.

 

இதைத் தொடர்ந்து அடுத்த நாள் கொச்சியில் உள்ள உயர் நீதிமன்றத்தின் பவள விழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தில்லி திரும்பினார்.

 

 

 

*****



(Release ID: 1508501) Visitor Counter : 220


Read this release in: English