புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

SDG கண்காணிப்பு சட்டகம் குறித்த பிரதேச அளவிலான பயிற்சி முகாம்

நிலைத்திருக்கும் முன்னேற்ற இலக்குகளுக்கான (SDGs)

Posted On: 03 NOV 2017 4:43PM by PIB Chennai

பிரதேச அளவிலான இரண்டு நாள் பயிற்சிமுகாம் ஒன்றை, யுனிசெப் அமைப்புடன் இணைந்து, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI),  நவம்பர் 2017,  2-3 ஆம் தேதிகளில் கௌகாத்தியில் ஏற்பாடு செய்தது. SDG கண்காணிப்பு சட்டகம் குறித்த உணர்திறன் கொண்டவையாக மாநிலங்களை மாற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்படும் பிரதேச அளவிலான  ஐந்து பயிற்சி முகாம்கள் வரிசையில் இது நான்காவதாகும்.

       தொடக்க நிகழ்வில் பேசிய இந்தியாவின் முதன்மைப் புள்ளியியலாளரும், MoSPI செயலருமான  டாக்டர் TCA அனந்த்,   SDG களின் முக்கிய அம்சங்கள் குறித்தும், அவற்றை தொடர்ச்சியாக, முழுமையாக கண்காணிப்பது குறித்தும் தனது கருத்துகளை  பகிர்ந்துகொண்டார்.  இந்தியப் புள்ளியியலாளர்களுக்கு இவை புதிய பொறுப்புகளையும் சவால்களையும் கொண்டு வந்துள்ளதாக வலியுறுத்தினார். ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய கண்காணிப்புடன்,  தேசிய,  மாநில அளவிலான கண்காணிப்புகளும் SDGக்களுக்குத் தேவை. SDGக்களை செயல்படுத்துவதிலும் கண்காணிப்பதிலும் மாநிலங்கள் பின்பற்றும் நல்ல நடைமுறைகளை கண்டறிவதற்கு இந்த பயிற்சிமுகாம் உதவும். மற்ற மாநிலங்கள் இந்த நடைமுறைகளை பின்பற்றவும் / அதே பாணியில் தொடரவும் இது உதவும். SDG முன்னேற்றத்தை அளப்பதற்கும், கண்காணிப்பதற்கும் உள்ள அமைப்புமுறையை வலுப்படுத்த, மாநில அரசாங்கங்களுடன் நெருக்கமாக இணைந்து MoSPI ஒத்துழைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

       நடந்து கொண்டிருக்கும் பணிகள் குறித்து மாநிலங்களுக்கு டாக்டர் அனந்த் தெரிவித்தார். "மத்திய மாநில அரசுகளின் அமைச்சகங்கள், தொடர்புடைய மற்றவர்களுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து SDGக்கான தேசிய அளவிலான குறியீடுகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. இது அடிக்கடி மாறக்கூடிய சட்டகமாகும். இதனை அவ்வப்போது மேம்படுத்துவதற்கான அமைப்பு ஒன்றும் உருவாக்கப்படும்” என்று அவர் கூறினார். SDGக்களை கண்காணிப்பதில் தகவல் தேவை புதிதாக எழுந்திருப்பதால்,  தகவல் உள்கட்டமைப்பில் அதிக முதலீடு செய்யப்பட வேண்டியதன் தேவையும் அவர் வலியுறுத்தினார்.


       பயிற்சி முகாமில் பேசிய அஸ்ஸாம் மாநில அரசாங்கத்தின் கூடுதல் தலைமைச் செயலர், திரு வி.பி. பியாரிலால்,   மாநிலத்தின் முன்னேற்றத் திட்டங்களுக்கு SDG களை பின்பற்றுவதை  கொள்கையாக முதலில் ஏற்றுக்கொண்ட மாநிலங்களில்  அஸ்ஸாம் மாநிலமும் ஒன்று என்றார். அடிமட்ட அளவிலும் SDGக்களை செயல்படுத்திட விரிவான திட்டங்கள் இங்கு உள்ளன. மாநில அளவில் SDG நடவடிக்கைகளை ஒருங்கிணைத்திடவும், புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து இது குறித்த ஆய்வுகளை வளர்க்கவும், SDG களுக்கான மையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 
       MoSPI யின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் திரு பிரவீன் ஸ்ரீவஸ்தவா, தேசிய கண்காணிப்பு சட்டகத்தின் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தார். தங்களது முன்னேற்றத் திட்டங்களை SDG இலக்குகளுடன் ஒருங்கிணைக்க  தேசிய SDG குறியீடுகள் மாநிலங்களுக்கு உதவும் என்று அவர் கூறினார். தேசிய அளவிலான  குறியீடுகளின் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்கான திறன் மேம்படுத்துதலை கட்டமைக்கவும் உதவும் என்றும் கூறினார். வெளிப்படையான தரநிலைகளை பயன்படுத்தி  மாநிலங்களில் புள்ளியியல் அமைப்புமுறையை வலிமைப்படுத்தும் தேவைக்கு அவர் அழுத்தம் தந்தார்.  இதனால் மாநிலங்களில் இருந்து தொடர்ச்சியான தகவல் பரிமாற்றம் இருக்கும். தொழில்நுட்ப தீர்வுகளைப் பயன்படுத்தி SDGக்களை கண்காணிக்க முடியும். SDGக்ளை நோக்கமாக கொண்ட தகவல் புரட்சியை சரியான பாதையில் செலுத்த இது உதவும் என்றார்.

 
       யுனிசெப் டெல்லியின்,  கொள்கை, திட்டமிடல், மதிப்பிடல் நிபுணர் திரு கே.டி.மைத்தி,  இத்தகைய பிரதேச அளவிலான பயிற்சி முகாம்களில், கௌகாத்தியில் நடைபெறும் இந்த முகாம் நான்காவதாகும் என்றார். "இந்த பயிற்சி முகாம்கள், தேசிய, மாநில அளவில்  SDG முன்னேற்றத்தை கண்காணிப்பதில் பொதுவான அமைப்பு ஒன்றை உருவாக்குவதில் உதவியாக இருக்கும்”  என்று" அவர் மேலும் கூறினார்.

     அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் முதுநிலை அதிகாரிகள் இந்த இரண்டு நாள் பயிற்சிமுகாமில் கலந்து கொண்டனர்.  SDG செயலாக்கம் நோக்கிய திசையில்,  மாநிலங்களில் எடுக்கப்பட்ட பல்வேறு முன்முயற்சிகளை ஆவணப்படுத்துவது, சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வது என்பதாக பயிற்சிமுகாமின் பயன்பாட்டு வெளிப்பாடு அமையும்

*****



(Release ID: 1508468) Visitor Counter : 137


Read this release in: English