வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை

கட்டுமான அதிபர்கள் உயர்த்தவேண்டும்..!

Posted On: 17 OCT 2017 4:24PM by PIB Chennai
  • வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்
  • அமைச்சர் வேண்டுகோள்

ஏராளமான கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் தீவிர கவலை அளிக்கும் நிலையில் இருப்பதால், அவர்களுக்குப் போதுமான அடிப்படை வசதிகள் நிரம்பிய வாழ்க்கைத் தரம் அமைய கட்டுமான அதிபர்கள் முன்வர வேண்டும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. ஹர்திப் சிங் புரி கேட்டுக்கொண்டார். இந்தியன் பில்டர்ஸ் காங்கிரஸின் 25-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர், நினைவு தபால் தலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

பொது ஒப்பந்தம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் (ஒழுங்குமுறை) சட்டப்பிரிவு 19 H படி, கட்டுமானம் நடக்கும் இடங்களில் தொழிலாளர்களுக்கு சமையல், குளியல், கழிவறை போன்ற வசதிகள் செய்து தருவதற்கான பொறுப்பை 5,100 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியன் பில்டர்ஸ் காங்கிரஸ், ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில் உடன்பாடு இல்லாததை ஏற்க முடியாது என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கட்டுமானத் தொழிலாளர்கள் மிகப்பெரிய பங்களிப்பு வழங்குகிறார்கள் என்பதால், அவர்களுக்கு உரிய மதிப்பு கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் அமைச்சர் பேசினார்.

கட்டிடத்தை ஒட்டிய சுற்றுச்சூழல் சிறப்பாக இருக்கவேண்டும் என்று இந்திய பில்டர்ஸ் காங்கிரஸ் விரும்புவதுபோல், கட்டுமானம் நடக்கும் இடத்தின் சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் ஹர்திப் சிங் புரி மேலும் பேசுகையில், ‘பொருளாதார சீர்திருத்தம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் கட்டுமானத் துறை முழு பயன் அடையமுடியாமல் போனதற்கு, சுயகட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை செயல்திட்டம் உருவாக்கப்படாததுதான் காரணம். அதனாலே 8 ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழியப்பட்ட ரியல் எஸ்டேட் சட்டத்தை இப்போது அரசு பரிந்துரை செய்துள்ளது. இப்போது கட்டுமானத்துறை கரடுமுரடான பாதையில் போய்க்கொண்டு இருந்தாலும், துறை சார்ந்த அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் வகையில் நல்ல மாற்றம் வரும்என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

 


(Release ID: 1508452) Visitor Counter : 143


Read this release in: English