பிரதமர் அலுவலகம்

தினத்தந்தி நாளேட்டின் 75ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 06 NOV 2017 12:07PM by PIB Chennai

சென்னை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தினால் தங்களது அன்பான உறவினர்களை இழந்து, கடும் இன்னல்களுக்கு ஆளாகிய குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

அத்துடன், மூத்த பத்திரிகையாளர் திரு. ஆர். மோகன் மறைவுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அனைவருக்கும் வணக்கம். தந்தி 75வது ஆண்டு விழாவில் உங்களுடன் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

தினத்தந்தி 75 பிரகாசமான ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்த வெற்றிகரமான பயணத்துக்காக திரு. சி.பா. ஆதித்தனர், திரு. எஸ்.டி. ஆதித்தனார், திரு. பாலசுப்பிரமணியம் ஆகியோர் செலுத்திய பங்களிப்பைப் பாராட்டுகிறேன். அவர்கள் கடந்த 75 ஆண்டுகள் காட்டிய உறுதியான முயற்சிகள் தந்தியை மிகப்பெரிய ஊடகங்களில் ஒன்றாக உருவாக்கியிருக்கிறது. இது, தமிழ்நாட்டில் மட்டுமின்றி, நாடு முழுவதும் அமைந்திருக்கிறது. இந்த வெற்றிக்காக தந்தி குழுமத்தின் நிர்வாகிகள், பணியாளர்களைப் பாராட்டுகிறேன்.

தற்போது, 24 மணி நேர செய்தி தொலைக்காட்சி அலைவரிசை சேவை பல லட்சம் இந்தியர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இருந்தாலும், பலருக்கு ஒரு கோப்பை தேநீர் அல்லது காபி ஒரு கையிலும்  ஒரு நாளேடு இன்னொரு கையிலும் என்ற நிலையில்தான் அன்றைய நாள் தொடங்குகிறது. தினத்தந்தி தமிழ்நாட்டில் மட்டுமின்றி பெங்களூரு, மும்பை, துபாய் உள்பட தற்போது 17 பதிப்புகளைக் கொண்டு வெளியிடப்படுகிறது என்று அறிகிறேன். 75 ஆண்டுகளாக இப்படிக் குறிப்பிடத் தக்க வகையில் விரிவடைந்திருப்பது 1942 ஆம் ஆண்டு தொலைநோக்குடன் செயல்பட்டு பத்திரிகை தொடங்கிய அமரர் திரு. சி.பா. ஆதித்தனாருக்குச் செலுத்தும் அஞ்சலியாகும்.  அந்த காலத்தில் செய்தித்தாள் கிடைப்பது அரிதானது. ஆனால், ஆதித்தனார் வைக்கோல் முதலியவற்றிலிருந்து கைகளில் தயாரிக்கப்பட்ட தாளில் அச்சிட்டு நாளேட்டை நடத்தி வந்தார். 

செய்தித் தாளில் இடம்பெறும் எழுத்துரு அளவு, எளிய மொழி, எளிதில் புரியும்படியான செய்தி ஆகியவை மக்களிடையில் தினந்தந்தி நாளேட்டை மிகப் பிரபலமாக்கின. அக்காலத்தில், அரசியல் விழிப்புணர்வு, தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தியது. இந்த நாளேட்டைப் படிப்பதற்காக மக்கள் தேநீர்க் கடைகளை மொய்த்தனர். அந்தப் பயணம் தொடர்கிறது. அதன் நடுநிலையான செய்திகளினால், சாதாரண கூலித் தொழிலாளி முதல் அரசியல் பிரமுகர்கள் வரையில் பிரபலமாகி, அந்தப் பயணம் இன்றும் தொடர்கிறது. 

தினத் தந்தி என்ற சொல்லுக்கு தினந்தோறும் அனுப்பப்படும் தந்தி என்பது பொருள் என்று தெரிந்து கொண்டேன். ஆனால், கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வந்த தந்தி சேவை இப்போது காலாவதியாகிவிட்டது, வழக்கத்தில் இல்லை. ஆனால், இந்தத் தந்தி (தினத்தந்தி) தினந்தோறும் வளர்ந்து வருகிறது. அதுதான் கடும் உழைப்பு, கடப்பாடு ஆகியவற்றின் பின்னணியில் அமைந்த சிறந்த  சிந்தனையின் சக்தியாகும். 

தமிழ் இலக்கியத்திற்குச் சிறந்த சேவையாற்றி வருவோருக்கு நிறுவனர் திரு. ஆதித்தனாரின் பெயரில் தந்தி குழுமம் விருதுகள் வழங்குவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது, விருது பெறும் திரு. தமிழன்பன், டாக்டர். இறையன்பு, திரு. வி.ஜி. சந்தோஷம் ஆகியோரை மனமாரப் பாராட்டுகிறேன். இத்தகைய அங்கீகாரம், எழுத்துப் பணியை உன்னதமாகக் கருதி சேவையாற்றுபவர்களுக்குத் தூண்டுகோலாக என உறுதியாக நம்புகிறேன். 

சகோதர, சகோதரிகளே, 

மனிதகுலத்தின் அறிவுத் தேடல் நமது வரலாற்றைப் போல் மிகப் பழமையானது. அந்தத் தாகத்தைத் தணிக்க இதழியல் துறை துணை புரிகிறது. இன்று, செய்தித்தாள்கள் வெறும் செய்திகளை மட்டும் தந்துவிடுவதில்லை. நமது சிந்தனையைச் செதுக்கி, உலகைப் பார்ப்பதற்கான ஜன்னலைத் திறந்துவிடுகின்றன. விரிவாகச் சொன்னால், ஊடகம் என்பது சமுதாயத்தை மாற்றும் வழியாகும். அதனால்தான், ஊடகத்தை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கூறுகிறோம். பேனாவின் ஆற்றலை வெளிப்படுத்தி, அது எப்படி வாழ்க்கையின் முக்கிய சக்தியாகவும் சமுதாயத்தின் மனசாட்சியாகவும் இருக்கிறது என்று காட்டுபவர்களின் மத்தியில் இன்று இங்கு இருப்பது எனது பாக்கியம். 

காலனி ஆதிக்கத்தின் இருண்ட ஆட்சியின்போது, ராஜாராம் மோகன் ராய் நடத்திய சம்பத் கவுமுதி, லோகமான்ய திலகர் நடத்திய கேசரி, மகாத்மா காந்தி நடத்தி வந்த நவஜீன் ஆகிய பத்திரிகைகள் மக்களுக்குக் கலங்கரை விளக்கங்களாக இருந்து, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு உந்துதலாக இருந்தன. தங்கள் வாழ்க்கை வசதிகளைத் துறந்த இதழியலின் முன்னோடிகள் நாடு முழுவதும் வாழ்ந்தனர். அவர்கள்  தங்களது செய்தித் தாள்களின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தத் துணைபுரிந்தனர். அந்த முன்னோடிகளின் உயர்ந்த லட்சியங்களின் காரணமாகத்தான் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட பல செய்தித் தாள்கள் இன்றும் சிறப்பாக

நடத்தப்பட்டு வருகின்றன. 

நண்பர்களே, 

அவர்களுக்குப் பின்னால் வந்த தலைமுறையினரும் தங்களது கடமைகளை சமூகத்துக்கும் நாட்டுக்கும் ஆற்றி வந்தனர். அதனால்தான் நாம் விடுதலை பெற்றோம். சுதந்திரம் பெற்ற பிறகு, குடிமக்களின் உரிமைகளுக்கு பொதுமக்களிடையே முக்கியத்துவம் கிடைத்தது. துரதிருஷ்டவசமாக காலம் செல்லச் செல்ல, தனிப்பட்ட மற்றும் ஒட்டுமொத்த கடமை உணர்வுகளைக் கைவிட்டதாகத் தோன்றுகிறது. இது ஏதோ சில காரணங்களால் நமது சமூகத்தைப் பீடித்திருக்கும் துயரங்களுக்கு வித்திட்டுவிட்டது. தொண்டாற்றும், பொறுப்புள்ள, விழிப்புள்ள குடிமக்களாக்கும் வகையில் ஒட்டுமொத்த விழிப்புணர்வை உருவாக்குவதே காலத்தின் தேவையாகும். குடிமக்களின் உரிமைகள் அவர்களது கடமைகளுடன் சமமாகவே அமைந்திருக்க வேண்டும். இது நமது கல்வி முறையாலும் தலைவர்களின் நடத்தைகளாலும் ஏற்பட வேண்டும். ஆனால், ஊடகங்களுக்கும் இதில் மிகப் பெரிய பங்கு இருக்கிறது.


சகோதர, சகோதரிகளே… 

பல செய்தித்தாள்கள் சுதந்திரப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்திய பல செய்தித் தாள்கள் இந்திய மொழிகளில்தான் வெளியாகியிருக்கின்றன.  உண்மையில் சொல்லப் போனால், ஆங்கிலேய அரசாங்கம் இந்திய மொழி இதழ்களைப் பார்த்துதான் அச்சமடைந்தன. அதனால், இந்திய பிராந்திய மொழிச் செய்தித்தாள்களின் கழுத்தை நெரிப்பதற்காக மொழிச் செய்திதாள்கள் சட்டம் 1878ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. 

பன்முகத் தன்மை கொண்ட நம் நாட்டில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் செய்தித் தாள்களின் பங்கு முன்பு இருந்ததைப் போலவே இப்போதும் முக்கியமானதாக உள்ளது. மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் மொழியில் செய்திகளை வெளியிடுகின்றன. மேலும், பாதிக்கப்படக் கூடிய, வலிமையில்லாத பிரிவினருக்குத் தேவையான தகவல்களைக் கொண்டு சேர்க்கின்றன. அவற்றின் வலிமை, தாக்கம், பொறுப்புணர்வு ஆகியவற்றை குறைத்து மதிப்பிட முடியாது. மூலை முடுக்குகளுக்கும் அரசின் கொள்கைகள், குறிக்கோள்களை எடுத்துச் செல்லும் தூதர்களாகவும் அவை இருக்கின்றன. அதைப் போல மக்களின் எண்ணங்கள், உணர்வுகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும் இருக்கின்றன.

இந்நிலையில், இன்றைக்கு துடிப்புள்ள அச்சு ஊடகங்களின் மத்தியில் அதிக அளவில் விற்பனையாகும் சில செய்தித்தாள்கள் மாநில மொழிகளில்தான் வெளியாவது மன மகிழ்ச்சியைத் தருகிறது. தினத்தந்தி அத்தகையவற்றுள் ஒன்றாகும்.


நண்பர்களே, 

உலகில் நடக்கும் நிகழ்வுகள் அப்படியே செய்திகளாக ஏடுகளில் வெளியாகின்றன என்பதைக் கண்டு மக்கள் வியப்படைவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 

உண்மையைச் சொல்லப் போனால், தினமும் ஏதாவது உலகில் நடந்துகொண்டேயிருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவற்றில் எது முக்கியம் என்பதை இதழின் ஆசிரியர்கள்தான் தேர்ந்தெடுத்து முடிவு செய்கிறார்கள். அவர்கள்தான் எது முதல் பக்கத்தில் இடம் பெற வேண்டும். எச்செய்திக்குப் பெரிய அளவில் இடம் ஒதுக்க வேண்டும், எதைக் கைவிட வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். 

இதற்கு மிகப் பெரிய பொறுப்பு தேவைப்படுகிறது. ஆசிரியர்களுக்கான சுதந்திரம் மக்கள் நலனுக்காக புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தப்படவேண்டும். அதே சமயம் எழுத்துரிமையும் எதை எழுதவேண்டும் என்று முடிவெடுப்பதும் துல்லியம் இல்லாததையோ தகவல் பிழையுள்ளவற்றையோ எழுதுவதற்கான சுதந்திரம் ஆகாது. 

மகாத்மா காந்தியே ஒரு முறை கூறியதுபோல, “பத்திரிகை என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என அழைக்கப்படுகிறது. அது சக்தி மிக்கது என்பது நிச்சயம். ஆனால், அதைத் தவறாகப் பயன்படுத்துவது குற்றமாகும்” 

ஊடகங்கள் தனியாருக்குச் சொந்தமானவை என்றபோதும், அவை மக்களுக்குச் சேவையாற்றுகின்றன. சான்றோர்கள் கூறுவதைப் போல் அது வன்முறை மூலமாக அன்றி, அமைதியாக சீர்திருத்தம் கொண்டுவருவதற்கான தூண்டுகோலாகச் செயல்படுகிறது. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையோ, நீதித்துறையையோ போல பத்திரிகைக்கும் சமூகக் கடப்பாடு உள்ளது. அதன் செயல்பாடும் உயர்ந்ததாகவும் இருக்க வேண்டும்.அதனால்தான், தெய்வப் புலவர் திருவள்ளுவர், “உலகில் அறத்தைக் கடைப்பிடிப்பதைப் போல் சிறப்பையும் செல்வத்தையும் தருவது வேறு ஒன்றுமில்லை” என்ற கருத்தை வலியுறுத்தி,

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு”

என்று குறிப்பிட்டிருக்கிறார். 

நண்பர்களே, 

ஊடகத்துறையில் தொழில்நுட்பம் மகத்தான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. ஒரு காலத்தில், கிராமத்தில் கரும்பலகையில் எழுதப்படும் செய்தித் தலைப்புகள் நம்பகத் தன்மை வாய்ந்தவையாக இருந்தன. இன்று, ஊடகம் விரிவடைந்துவிட்டது. கிராமங்களின் கரும்பலகையிலிருந்து இணையத்தில் ஓடும் செய்தி வரிகளாகிவிட்டன. 

இப்போது கல்வி கற்றல் நடைமுறையில் அதிக கவனம் செலுத்துவதைப் போல், உள்ளடகத்தை அறிந்து கொள்வதிலும் மாற்றம் வந்துவிட்டது. இன்று ஒவ்வொரு குடிமகனும் தன்னை வந்தடையும் செய்திகளை பல வழிகளில் அலசி, விவாதித்து, சரிபார்த்து, உறுதி செய்கிறான். எனவே, ஊடகங்கள் நம்பகத் தன்மையைச் சீராகக் கடைப்பிடிப்பதற்கு, கூடுதலாக முயற்சி மேற்கொள்ள வேண்டும். நம்பகத் தன்மை வாய்ந்த ஊடக தளங்களில் ஆரோக்கியமான போட்டி இருப்பது  ஜனநாயக நலனுக்கு நல்லது. 

நம்பகத் தன்மை குறித்து மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது நம்மை சுயபரிசோதனைக்கு உள்ளாக்கும். எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ சீர்திருத்தத்தை ஊடகங்களில் தங்களுக்குள்ளேயே கொண்டு வர இயலும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சில சமயங்களில் அத்தகைய சுய பரிசோதனை முறையைக் கண்டிருக்கிறோம். மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்த செய்தி சேகரிப்பு முறையின்போது மேற்கொண்ட நடவடிக்கையைக் குறிப்பிடலாம். இது போன்ற செயல் அடிக்கடி நடக்கவேண்டும். 

நண்பர்களே, 

நமது அன்புக்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் மேற்கோளை நினைவு கூர்கிறேன். அவர், “நாம் மிகச் சிறந்த நாடு. ஏராளமான வியக்கத் தக்க வெற்றிக் கதைகளைக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவற்றை அங்கீகரிப்பதில்லை. ஏன்?” என்று கேள்வி எழுப்புகிறார்.


இன்றைய ஊடகங்கள் அரசியல் செய்திகளுடனே இயங்குகின்றன. ஜனநாயக நாட்டில் அரசியல் குறித்து விரிவாகப் பேசுவது நல்லதுதான். எனினும், இந்தியா அரசியல்வாதிகளை மட்டும் கொண்ட நாடல்ல. 125 கோடி இந்தியர்களைக் கொண்ட நாடாகும். அதுதான் இந்தியாவை அமைக்கிறது. அவர்களது வாழ்க்கை, அவர்களது சாதனைகள் ஆகியவற்றில் ஊடகங்கள் கூடுதலான பார்வையைச் செலுத்தினால் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைவேன்.

 
இந்த முயற்சியில் கைபேசி வைத்திருக்கும் ஒவ்வொரு குடிமகனும் உங்களது சகாதான். தனி நபர்களின் வெற்றித் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதிலும் வெளியிடுவதிலும் மக்களின் செய்திப் பணி மிக முக்கியமான கருவியாக இருக்கிறது. அது சிக்கலான சமயங்களிலோ இயற்கைச் சீற்றங்களிலோ  நிவாரண, மீட்புப் பணிகளில் வழிகாட்டுவதற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.


இயற்கைச் சீற்றங்களின்போது, ஊடகங்கள் நிகழ்வுகளைத் தங்களால் இயன்ற வரையில் செய்திகளைச் சேகரிக்கின்றன என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். உலக அளவில் இயற்கைச் சீற்றங்கள் நிகழ்வது அதிகரித்து வருகிறது, அதன் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. பருவநிலை மாற்றம் நம் ஒவ்வொருவருக்கும் சவாலாக இருக்கிறது. அதைச் சமாளிக்கும் போராட்டத்துக்கு ஊடகங்கள் தலைமை வகிக்க இயலுமா?  பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு என்ன செய்யலாம் என்று சிறிய அளவில் இடத்தையோ தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியோ செய்திகளைப் பகிர்ந்துகொள்ளவும், விவாதிக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இயலுமா? 

இந்தச் சூழ்நிலையில், தூய்மை இந்தியா இயக்கத்திற்கு ஆதரவாக இருக்கும் ஊடகங்களைப் பாராட்டுகிறேன். தூய்மை இந்தியா இயக்கம்  மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு விழாவையொட்டி 2019ஆம் ஆண்டு நிறைவடைகிறது. தூய்மைப் பணி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் ஒட்டுமொத்த உணர்வைத் தூண்டுவதிலும் ஊடகங்கள் செலுத்தும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு குறித்து நெகிழ்ச்சி அடைகிறேன். நமது இலக்கினை அடைவதற்கு முன்பாக என்னென்ன இன்னும் செய்ய வேண்டியிருக்கிறது என்றும் ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன. 

சகோதர, சகோதரிகளே,

ஊடகங்கள் செயல்படுவதற்கு இன்னொரு முக்கியமானதும் உண்டு. ஒரே பாரதம், உன்னதமான பாரதம் என்ற முனைப்புகளும் உள்ளன. அது குறித்து விவரிக்கிறேன்.

செய்தித் தாள்கள் தினந்தோறும் சில பத்திகளை ஒதுக்க இயலுமா?

செய்தித் தாள்கள் தங்களது மொழியில் வெளியிடும் ஏதாவது ஒரு சொற்றொடரை எல்லா இந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்தும், அவற்றின் ஒலி வடிவங்களில் அமைத்தும் பிரசுரிக்கலாம்.


அப்படிச் செய்தால், ஆண்டு இறுதியில், செய்தித் தாளைப் படிக்கும் வாசகர்கள் எல்லா இந்திய மொழிகளிலும் 365 சொற்றொடர்களை அறிந்து கொள்ளலாம். இந்த எளிய முறை ஏற்படுத்தும் சாதகமான விளைவைக் கற்பனை செய்து பாருங்கள். மேலும், பள்ளிகள் தங்களது வகுப்பறைகளில் தினமும் சில நிமிடங்கள் விவாதிப்பதை ஊக்குவிக்கலாம். இதன் மூலம் நம் நாட்டின் பன்முகத் தன்மையின் வளத்தையும் வலிமையையும் புரிந்து கொள்ளலாம். இது உன்னதமான பணிக்கான சேவை மட்டுமின்றி, பத்திரிகைகளையும் வலுப்படுத்தும்.

சகோதர சகோதரிகளே,

75 ஆண்டு என்பது மனித வாழ்க்கையின் குறிப்பிடத் தக்க காலமாகும். ஆனால், ஒரு தேசத்திற்கோ நிறுவனத்திற்கோ குறிப்பிடத் தக்க மைல் கல்லாக அமைகிறது. சில மாதங்களுக்கு முன் “வெள்ளியனே வெளியேறு” இயக்கத்தின் 75ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடினோம். தினத்தந்தியின் பயணம் இந்தியாவின் எழுச்சி உத்வேகமானது இளமையானது என்பதைப் பிரதிபலிக்கிறது. 

நாடாளுமன்றத்தில் ஒரு முறை பேசியபோது, “புதிய இந்தியா, 2022” உருவாக்குவது குறித்து அழைப்பு விடுத்தேன். ஊழல், சாதீயவாதம், வகுப்புவாதம், மதவாதம், வறுமை, எழுத்தறிவின்மை, பிணி அற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான அழைப்பு அது. அடுத்த ஐந்து ஆண்டுகள் உறுதிபூண்டு அதை நிறைவேற்றுவதற்கானது. அப்போதுதான் விடுதலைப் போராட்ட தியாகிகள் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க இயலும்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் கண்ட போது உருவான செய்தித்தாள் என்ற வகையில், இது விஷயத்தில் தனிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தினத்தந்திக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அடுத்த ஐந்தாண்டுகளில் உங்களது வாசகர்களிடமோ இந்திய மக்களிடமோ தாக்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

ஐந்தாண்டு கழித்து, தினத்தந்தி அடுத்த 75ஆவது ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்திக்கவேண்டும். சிறந்த வழி என்ன என்று காண வேண்டும். 

எக்காலத்திற்கும் பொருந்தும் நிலை தொடர்வதற்கும், மக்களுக்கு சேவை புரிவதற்கும், கைவிரலில் செய்திகள் கிடைக்கும் நிலையில் தேசம் இருப்பதற்கும் நிலையை அடைய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் உயர் தரமான தொழில்முறை, நெறிகள், குறிக்கோள் ஆகியவற்றைத் தொடர்ந்து கையாள இயலும். 

தமிழ்நாட்டு மக்களுக்கு தினத்தந்தி வெளியீட்டாளர்கள் ஆற்றி வரும் அரும் பணிகளை நான் மீண்டும் பாராட்டுகிறேன். நமது நாட்டின் இலக்கை அடைவதற்கான செயல்களில் அந்நிறுவனத்தினர் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகத் துணைபுரிவர் என்று உறுதியாகக் கருதுகிறேன். 

வணக்கம்.

****



(Release ID: 1508397) Visitor Counter : 659


Read this release in: English , Telugu