பிரதமர் அலுவலகம்

உலக உணவு இந்தியா 2017 கண்காட்சி தொடக்கவிழாவில் பிரதமரின் உரை

Posted On: 03 NOV 2017 12:04PM by PIB Chennai

பெருந்தகைகளே,

வணிகம் மற்றும் தொழிற்துறை தலைவர்களே,

சகோதர, சகோதரிகளே.

உணவு உற்பத்தித் துறையின் ஜாம்பவான்கள் பங்குபெறும் இந்த மதிப்பு மிக்க சந்திப்பில் நானும் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைவரையும் உலக உணவு இந்தியா 2017 கண்காட்சிக்கு வரவேற்கிறேன்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் இந்தியாவில் உங்களுக்காக காத்திருக்கும் ஏராளமான வாய்ப்புகளை நீங்கள் அறிந்துகொள்ளலாம். உணவு உற்பத்தி/பதப்படுத்தும் துறையில் இந்தியாவின் ஆற்றலை இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இத்துறையில் உள்ள பல்வேறு பங்குதாரர்களுடன் தொடர்புகொள்ளவும், பரஸ்பர வளர்ச்சியைப் பெறவும் இது ஒரு நல்ல மேடையாக அமையும். உலகமெங்கும் புகழ்பெற்று விளங்கும் எங்கள் நாட்டின் சில முக்கியமான உணவு வகைகளையும் நீங்கள் சுவைத்து மகிழலாம்.

நண்பர்களே,

விவாசாயத்துறையில் இந்தியாவின் ஆற்றல் என்பது பரந்து விரிந்தது. உலகின் இரண்டாவது பெரிய விவசாய நிலமாக இருப்பதாலும், 127க்கும் மேற்பட்ட விவசாய தட்பவெட்ப சூழல்கள் நிலவுவதாலும் மாம்பழம், வாழைப்பழம், கொய்யாப்பழம், பப்பாளி, வெண்டைக்காய் என பல்வேறு வகையான பழம் மற்றும் காய்கறி விளைச்சலில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. அரிசி, கோதுமை, மீன், பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தியில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராகவும் இந்தியா விளங்குகிறது. எங்கள் நாட்டின் தோட்டத்தொழில்துறை கடந்த பத்து ஆண்டுகளாக ஆண்டுக்கு சராசரியாக 5.5 சதவிகிதம் வளர்ச்சியைக் காட்டியிருக்கிறது.

பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் இருக்கும் பல்வேறுபட்ட மசாலா பொருட்களைத் தேடி கடல் கடந்து வரும் வணிகர்களை இந்தியா வரவேற்றிருக்கிறது. அவர்களின் இந்தியப் பயணங்கள்தான் பல சூழல்களில் வரலாற்றையே வடிவமைத்திருக்கிறது. ஐரோப்பா, தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளுடனான இந்தியாவின் மசாலாப்பொருள் வணிகம் உலகப்பிரசித்தி பெற்றது. கொலம்பஸ் கூட இந்தியாவின் மசாலா பொருட்களை தேடி வரும்போது, வேறு கடல்பாதையை தேர்ந்தெடுத்ததால்தான் அமெரிக்காவில் இறங்கினார்.

உணவு பதப்படுத்துதல் என்பது இந்தியாவின் வாழ்க்கை முறைகளில் ஒன்று. எளியவர்களின் வீடுகளில் கூட பல நூற்றாண்டுகளாக இது புழக்கத்தில் உண்டு. புளிக்கவைத்தல் போன்ற எளிய வீடுசார் வழிமுறைகளின் மூலம்தான் ஊறுகாய், அப்பளம், சட்னி போன்ற புகழ்பெற்ற இந்திய உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நண்பர்களே,

உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று. சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஒன்றுக்கு மேற்பட்ட வரிகள் என்றிருந்த நிலைமையை மாற்றியுள்ளது. உலக வங்கியின் வணிகம் செய்யத்தக்க நாடுகளின் வரிசையில் முப்பது இடங்கள் முன்னேறியுள்ளது இந்தியா. இதுவரையில் இந்தியாவின் மிக அதிகபட்சமான முன்னேற்றம் இது. மேலும் வேறெந்த நாடும் இந்த ஆண்டு இத்தனை இடங்கள் முன்னேறவில்லை. 2014ல் 142வது இடத்தில் இருந்து முதல் 100 இடங்களுக்குள் வந்துவிட்டோம்.

2016ஆம் ஆண்டில் க்ரீன்ஃபீல்ட் முதலீட்டில் முதல் இடத்துக்கு வந்தது இந்தியா. உலகளாவிய கண்டுபிடிப்புகள் தரவரிசை, உலகளாவிய போக்குவரத்து தரவரிசை, உலகளாவிய போட்டி தரவரிசைகளில் இந்தியா முன்னேறி வருகிறது.

இந்தியாவில் புதிய தொழில் ஆரம்பிப்பது முன்னைவிட இப்போது எளிமையாக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் ஒப்புதல் வாங்குவதும் எளிமையாக்கப்பட்டுள்ளது. பழைய விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது.

இப்போது உணவு பதப்படுத்தும் துறை பற்றி மட்டும் சொல்கிறேன்.

பல சீரமைப்பு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டுவருகிறது. இந்தத் துறையில் முதலீடு செய்ய பலரும் விரும்பும் நாடாக இந்தியா திகழ்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்திலும் உணவு பதப்படுத்துதல் துறைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி மற்றும் தயார் செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு மின் வணிகம் உட்பட அனைத்து வகையான வணிகங்களிலும் 100% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஒருங்கிணைக்க ஒற்றைச்சாளர ஒருங்கிணைப்பு ஆணையம் செயல்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து வருடாந்திர ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. உணவு உற்பத்தி, பதப்படுத்தும் மையங்கள், குளிரூட்டப்படும் மையங்கள் ஆகியவை முக்கியத்துவ அடிப்படையில் விரைவாக கடன் பெறும் வகையில் ஆவன செய்யப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களின் நண்பன் என அழைக்கப்படும் பிரத்யேக போர்ட்டலான நிவேஷ் பந்து சமீபத்தில் துவக்கப்பட்டுள்ளது. அதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் விதிகளுடன், உணவு பதப்படுத்தும் துறையில் வழங்கப்படும் ஊக்கத்தொகைகள் பற்றிய தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தொழிலுக்கு தேவையான அடித்தட்டு தகவல்களில் இருந்து, உபகரண தகவல்கள் வரையில் தரப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது வணிகத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயிகள், பதப்படுத்தும் தொழில் செய்கின்றவர்கள், வணிகர்கள், போக்குவரத்து உரிமையாளர்களை ஒருங்கிணைக்கவும் செய்கிறது.

மதிப்புச் சந்தையில் தனியாரின் பங்கு அதிகரித்து வருகிறது. ஒப்பந்த விவசாயம், மூலப்பொருள், விவசாய தொடர்புகள் ஆகிய துறைகளில் இன்னும் அதிகமான முதலீடு தேவைப்படுகிறது. ஒப்பந்த விவசாயத்தை பொறுத்தவரை பல சர்வதேச நிறுவனங்கள் முன்னெடுப்புகளை செய்துள்ளன. சர்வதேச சந்தைகள் இந்தியாவை வெளிக்கொள்முதலுக்கு பயன்படுத்திக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.

உணவு பாதுகாப்பு, உட்கட்டமைப்பு, குளிரூட்டல் என அறுவடைக்கு பின்பான மேலாண்மையில் ஒருபக்கம் நல்ல வாய்ப்புகள் இருந்தாலும், மற்றொரு பக்கம் உணவு பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டல் என பசுமை மற்றும் ஊட்டச்சத்து அதிகரிக்கப்பட்ட உணவுத்துறைகளிலும் வாய்ப்புள்ளது.

நடுத்தர வர்க்கம் வளர்ந்துவருவதும், நகரமயமாக்கலும் சரிவிகித, பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களுக்கான தேவையை அதிகரித்து வருகிறது. ஒருநாளில் ரயிலில் பத்து லட்சம் பயணிகளுக்கும் மேல் உணவு உட்கொள்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவமே உணவு தயாரிக்கும் துறைக்கு வாடிக்கையாளர்கள்தான். இவ்வளவு பிரம்மாண்டமான வாய்ப்பு இந்தியாவில் இருக்கிறது.

நண்பர்களே

உலக அளவில் வாழ்வியல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வரும் சூழலில் உண்ணும் உணவு குறித்த கவனம் முக்கியத்துவம் பெறத் துவங்கியிருக்கிறது. செயற்கையான வண்ணங்கள், ரசாயனங்கள், பதப்படுத்தும் பொருட்களின் மேல் வெறுப்பு உண்டாகியிருக்கிறது. இதற்கு அனைவரும் பயனளிக்கும் வகையில் இந்தியாவினால் தீர்வளிக்க முடியும்.

நவீன தொழில்நுட்பம், பதப்படுத்துதல் மற்றும் இந்திய பாரம்பரிய உணவுகளை ஒன்றிணைப்பதன் மூலம், மஞ்சள், இஞ்சி, துளசி போன்ற உணவுப்பொருட்களின் நற்குணத்தை நாம் உலகறியச் செய்யலாம். ஆரோக்கியமான, சத்தான, சுவையான உணவுவகைகளை குறைந்த செலவிலேயே நம்மால் இந்தியாவில் தயாரிக்க முடியும்.

இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுவகைகள் உலகத்தரத்தில் உள்ளதை உறுதி செய்கிறது. கோடக்ஸ் தரக்கட்டுப்பாட்டுடன் இணைந்து செயல்படுதல், தரமான தர சோதனை ஆய்வகம் ஆகியவற்றை உருவாக்குவது இந்தியாவில் உணவுத்தொழிலுக்கு நல்லதொரு சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

நண்பர்களே,

உணவு உற்பத்தியை பொறுத்தவரையில் நமக்கு கடவுள்களாக விளங்குகின்றவர்கள் விவசாயிகளே. விவசாய வருமானத்தை ஐந்தாண்டுகளுக்குள் இருமடங்கு உயர்த்தும்வகையில் ஒரு குறிக்கோளுடன் இந்த அரசு செயல்படுகிறது. சமீபத்தில் பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா என்கிற திட்டத்தை உலகத்தரத்தில் உணவு உற்பத்தி செய்யும் உட்கட்டமைப்பை உருவாக்கும் வகையில் துவக்கி வைத்திருக்கிறோம். இதன்மூலம் ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடாக கிடைக்கும். மேலும் இருபது லட்சம் விவசாயிகள் இதன்மூலம் பலனடைவதோடு, அடுத்த மூன்று ஆண்டுகளில் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

மிகப்பெரிய உணவுப்பூங்காக்களை படைப்பதும் இத்திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும். இந்த பூங்காக்களின் மூலம் விவசாய உற்பத்திகளை பதப்படுத்தும் மையங்களை இணைத்து உற்பத்தியை பெருக்கலாம். உருளை, அண்ணாச்சிப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள் போன்றவற்றுக்கு மதிப்பு கூட்டலாம். இந்த பூங்காக்களில் மையங்களை திறக்கவைக்க விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். இதன்மூலம் போக்குவரத்து செலவு குறைவதோடு, உணவு வீணாவதும் தடுக்கப்படும், புதிய வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். ஏற்கனவே இப்படியான ஒன்பது பூங்காக்கங்கள் செயல்பாட்டில் உள்ளது. முப்பது பூங்காக்கள் நாடெங்கும் திறக்கப்பட உள்ளது.

கடைக்கோடி வரை பொருட்கள் சென்றுசேரும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, நிர்வாகத்தை சீரமைத்து வருகிறோம். அதிவேக இணைய சேவை மூலம் கிராமங்களை இணைக்க திட்டமிட்டு வருகிறோம். நில ஆவணங்களை டிஜிட்டல்மயப்படுத்துவதுடன், செயலிகளின் மூலம் மக்கள் சேவைகளை வழங்கவும் ஆவன செய்யப்படுகின்றது. உடனுக்குடன் தகவல்களையும், திறன்களையும் பரிமாறிக்கொள்ள இம்முயற்சிகள் உதவும். ஈ-நாம் எனப்படும் தேசிய விவசாய மின் சந்தை தேசம் முழுதும் இருக்கும் விவசாய சந்தைகளை இணைக்கிறது. இதன்மூலம் நம் விவசாயிகளுக்கு சிறந்த விலையும், யாரிடம் விற்கலாம் என்கிற சுதந்திரமான தேர்வும் கிடைக்கிறது.

சுமூகமான கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில், நம் மாநில அரசுகளும் மத்திய அரசின் இம்முயற்சிகளுக்கு கைகொடுத்துள்ளன. பல மாநிலங்கள் உணவு உற்பத்தியில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் கவர்ச்சிகரமான திட்டங்களை கொணர்ந்துள்ளன. அனைத்து மாநிலங்களையும் குறைந்தது ஒரு உணவு வகையிலேனும் பிரத்யேக கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல ஒவ்வொரு மாவட்டமும் ஒரு வகையை உற்பத்திக்கு எடுத்துக்கொள்ளலாம்.

நண்பர்களே,

இன்றும் நம் பலமான விவசாய பின்னணி நன்றாக செயல்படும் உணவு உற்பத்தித் துறையை அமைக்க முதுகெலும்பாக இருக்கிறது. பரவலான நமது வாடிக்கையாளர்கள், வளர்ந்து வரும் வருமானம், ஆதரவான முதலீட்டு சூழல் மற்றும் வணிகத்தை எளிமையாக்க அரசு எடுக்கும் முயற்சிகள் என எல்லாம் சேர்ந்து இந்தியாவை உணவு உற்பத்தி தொழிலுக்கு மிகவும் உகந்த நாடாக மாற்றியுள்ளது.

கிராமப்புற பொருளாதாரத்தில் பால்துறை பெரும் பங்கு வகிக்கிறது. பால் சார்ந்த பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதன்மூலம் இதில் அடுத்த கட்டத்தை எட்ட இருக்கிறோம்.

தேன் இயற்கையின் கொடை. தேனில் இருந்து பல்வேறு உப பொருட்களை தயாரிக்க முடியும். விவசாய வருமானத்தை பெருக்கவும் தேன் உதவுகிறது. உலக அளவில் தேன் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. இந்தியா இப்போது இத்துறையில் ஒரு புரட்சிக்கு தயாராக உள்ளது.

அதேபோல உலக அளவில் மீன் உற்பத்தியில் ஆறு சதவிகிதத்தை இந்தியா அளிக்கிறது. இறால் ஏற்றுமதியில் உலகின் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. மீன் மற்றும் மீன் சார்ந்த பொருட்கள் இந்தியாவில் இருந்து 95 நாடுகளுக்கு செல்கிறது. இத்துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் வண்ணம் நீலப் புரட்சியை எதிர்நோக்கி இந்தியா காத்திருக்கிறது. அலங்கார மீன்கள் மற்றும் ட்ரவுட் மீன் வளர்ப்பு, முத்துச்சிப்பி உற்பத்தி என இதுவரை அதிகமாக கவனம் செலுத்தாத துறைகளிலும் இனி கவனம் செலுத்த இந்தியா முடிவுசெய்துள்ளது.

நிலைநிறுத்தத்தக்க வளர்ச்சியை மனதில் வைத்தே இயற்கை விவசாயத்துறையில் கவனம் செலுத்துகிறோம். வடகிழக்கு இந்தியாவில் உள்ள சிக்கிம் மாநிலம் இந்தியாவின் முதல் முழு இயற்கை விவசாய மாநிலமாக மாறியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பகுதி முழுவதுமே இயற்கை விவசாய உற்பத்திக்கு நல்ல வாய்ப்புகளை வழங்குகிறது.

இந்திய சந்தையில் வெற்றிபெற இந்திய உணவுப்பழக்கத்தையும், சுவையுணர்வுகளையும் அறிந்துகொள்ளுதல் அத்தியாவசியம். உதாரணத்திற்கு பால் சார்ந்த உணவுகளும், பழச்சாறு சார்ந்த பானங்களும் இந்திய உணவுப்பழக்கத்தில் அத்தியாவசியமானவை. அதனால்தான் குளிர்பான தயாரிப்பாளர்களிடம் ஐந்து சதவிகிதம் பழச்சாற்றை அவர்கள் தயாரிப்புகளில் சேர்க்கச் சொல்லி நான் வலியுறுத்துகிறேன்.

உணவு உற்பத்தி ஊட்டச்சத்து பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. உதாரணத்திற்கு தானியங்கள் மற்றும் வரகுகளில் அதிக ஊட்டச்சத்து உண்டு. அதேபோல மோசமான தட்பவெட்ப நிலையிலும் அவற்றால் தாக்குப்பிடிக்க முடியும். எனவே ஊட்டச்சத்து மிக்க, தட்பவெட்ப சூழலை தாக்குபிடிக்கும் பயிர்கள் என இவற்றை நாம் அழைக்கலாம் அல்லவா? இவை சார்ந்த தொழில்களை ஆரம்பிக்கலாம் அல்லவா? ஏழை விவசாயிகளின் வருமானத்தை இது பெருக்கும் அதே நேரத்தில், ஊட்டச்சத்தையும் உறுதி செய்யும். இதுபோன்ற தயாரிப்புகளுக்கு உலகெங்கும் தேவையும் இருக்கும். நம் ஆற்றலை உலகின் தேவைகளோடு தொடர்புபடுத்தலாம் அல்லவா? இந்திய பாரம்பரியத்தை மனித இனத்தின் வருங்காலத் தேவையாகக் கொள்ளலாம் அல்லவா? இந்திய விவசாயிகளை உலக சந்தையோடு இணைக்கலாம் அல்லவா? இந்த கேள்விகளுக்கான பதில்களை நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

உலக உணவு இந்தியா 2017 கண்காட்சி நிகழ்ச்சி நம் குறிக்கோள்களை அடைய வழிசெய்யும் என உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது. அதேநேரம் நம் வளமான உணவு பாரம்பரியத்தையும், பல்லாண்டுகால உணவு உற்பத்தி அறிவையும் எடுத்துக்காட்டுவதாகவும் அமையும்.

இந்நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையில் இந்திய தபால் துறை இந்திய உணவுகளின் பரந்த தன்மையை குறிக்கும் 24 நினைவு தபால்தலைகளை வெளியிட்டுள்ளது என்பதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இந்தியாவின் உணவுத்துறை வளர்ச்சியில் பங்காற்ற உங்கள் ஒவ்வொருவரையும் நான் அழைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் ஆதரவு உண்டு என்பதையும் உறுதியாகக் கூறுகிறேன்.

வாருங்கள். இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்.

இங்கே உணவுப்பொருட்களை விளைவிப்பதில் இருந்து, தட்டில் சாப்பிடும் வரையில் பல்வேறு தொழில் வாய்ப்புகள் இருக்கிறது இந்தியா உலகிற்கான உணவை உற்பத்தி செய்யவும், பதப்படுத்தவும், அதன்மூலம் வளம் கொழிக்கவும் உகந்த நாடு.

நன்றி.
 

***



(Release ID: 1508305) Visitor Counter : 718


Read this release in: English