தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 65 –வது நிறுவன நாள் கொண்டாட்டங்களை புதுதில்லியில் திருமதி சுமித்ரா மகாஜன் தொடக்கி வைத்தார்.

புதிய வேலைவாய்ப்பு வழிவகைகளை உருவாக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது: திரு சந்தோஷ் குமார் கங்குவார்

Posted On: 01 NOV 2017 7:31PM by PIB Chennai

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ பி எஃப் ஒ) தனது பயனாளிகளின் வருங்கால வைப்பு நிதி, ஓய்வு ஊதியம், காப்பீடு தொகை பெறுவதற்கான கோரிக்கைகளை விரைந்து பரிசீலனை செய்வதற்கென தனது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி வருவதற்கு மக்களவை தலைவர்  திருமதி சுமித்ரா மகாஜன் பாராட்டுத் தெரிவித்தார். புது தில்லியில் இன்று (2017, நவம்பர் 1) இ பி எஃப் ஒ –வின் 65 –வது நிறுவன நாள் கொண்டாட்டங்களைத் தொடக்கி வைத்த அவர் இதைத் தெரிவித்தார்.

     நிகழ்ச்சியில் பேசிய மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத் துறை (தனிபொறுப்பு) இணை அமைச்சர் திரு சந்தோஷ் குமார் கங்குவார், 1952 ஆம் ஆண்டு இ பி எஃப் ஒ உருவாக்கப்பட்டதற்கு பிறகு பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்றார். கடந்த 65 ஆண்டுகளில் இ பி எஃப் ஒ பல சாதனைகளை நிகழ்த்தியிருப்பதாக அவர் கூறினார். தொடக்கத்தில் 5.5 லட்சம் பயனாளிகளை மட்டுமே கொண்டிருந்த இ பி எஃப் ஒ தற்போது 4.5 கோடி ஊழியர்களை தன்வசம் கொண்டுள்ளது என்றார். இ பி எஃப் ஒ தொடக்கத்தில் 1267 நிறுவனங்களுக்கு மட்டுமே சேவை புரிந்ததாகவும் தற்போது அந்நிறுவனம் 10 லட்சத்துக்கும் கூடுதலான நிறுவனங்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
     ஊழியர்கள் இ பி எஃப் ஒ –வில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் நடைமுறையை விரைவுப்படுத்த பல புதிய செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார். தற்போது இ பி எஃப் ஒ தனது சேவையை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் விரிவாக்கியுள்ளது என்றார் அவர்.

     பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் புதிய வேலை வாய்ப்புகளையும், சுய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க மத்திய அரசு மனப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்று திரு கங்குவார் கூறினார். முத்ரா திட்டம் அதிக அளவில் சுய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் இத்திட்டத்தில் 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன்களை 9.5 கோடி மக்களுக்கு  வழங்கியதால் இது சாத்தியமானது என்றும் அவர் தெரிவித்தார்

     நிகழ்ச்சியல் பேசிய தொழிலாளர் நலன் வேலைவாய்ப்பு அமைச்சக செயலாளர் திருமதி சத்தியவதி, 2017 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான 6 மாத காலத்தில் கூடுதலாக ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்த்து இ பி எஃப் ஒ அமைப்பு சாதனை புரிந்துள்ளதாகத் தெரிவித்தார்.

     டிஜிட்டல் இந்தியா முயற்சிகளை கடைபிடிக்க இ பி எஃப் ஒ உறுதி பூண்டிருப்பதாக இந்த அமைப்பின் ஆணையாளர் டாக்டர் வி பி ஜாய்  தெரிவித்தார். 2018 ஆகஸ்ட் 15 –ம் தேதி வாக்கில் இ பி எஃப் ஒ முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, காகித ஆவணம் இல்லாத அலுவலகமாக மாறிவிடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

*****

 



(Release ID: 1508136) Visitor Counter : 73


Read this release in: English