குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பெரிதாகக் கனவு கண்டு, கடினமாக உழைத்து வெற்றி பெருவீர்; குடியரசுத் துணைத் தலைவர்:
அதர்வா குழு நிறுவனங்களின் மாணவர்களிடையே கலந்துரையாடினார்.
Posted On:
28 OCT 2017 7:49PM by PIB Chennai
மாணாக்கர் தாங்கள் தேர்ந்தெடுத்தத் தொழில்களில் வெற்றி பெறவும் தங்களது நோக்கங்களை அடைவதற்கும் பெரிய அளவில் கனவு கண்டு உயரிய நோக்கங்களுடன் கடுமையாக உழைக்க வேண்டுமென்று குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு கூறியிருக்கிறார். மும்பையில் இன்று (அக்டோபர் 28, 2017) ஆளுநர் மாளிகையில் அதர்வா குழு நிறுவனங்களை சேர்ந்த மாணவர்களிடையே அவர் கலந்துரையாடினார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ பி ஜெ அப்துல்கலாம், பிரதமர் திரு நரேந்திரமோடி ஆகியோர் எளிமையான பின்னணியிலிருந்து உயர்ந்து, மிக உயரிய நிலைமைகளை அடைந்ததற்கு கடுமையான உழைப்பும், ஒழுக்கமும் உறுதிப்பாடுமே காரணம் என்று அவர் கூறினார். விரைவாக மாறிவரும் இன்றைய உலகில் கல்விப்பாடத் திட்டங்கள் மாணவர்கள் உரிய வேலைவாய்ப்பு பெறுவதற்கும் அல்லது சுயமாக தொழில் தொடங்குவதற்கும் ஏற்ற திறன்களை வழங்குவதாக அமைய வேண்டுமென்று குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார். பட்டங்களை பெறுவது மட்டுமே போதாது, கல்வி, இளைஞர்களை ஞானமும், அதிகாரமும் பெற்றவர்களாக மாற்ற வேண்டும் என்று அவர் கூறினார். இந்தியர்களுக்கு இயல்பாகவே இருக்கும் திறன்களை, திறன் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நாட்டின் பண்பாடு, வரலாறு, பாரம்பரியம் ஆகியவற்றை நன்கு அறிந்து கொள்ள வேண்டுமென்று அவர் மாணவர்களை கேட்டுக்கொண்டார். சமயங்களுடன் பண்பாட்டுக்கு தொடர்பு ஏதுமில்லை என்றும், பண்பாடு என்பது ஒரு வாழ்க்கைமுறை எனில் சமயம் என்பது வழிபாடுமுறை என்பதை புரிந்து கொள்ள வேண்டுமென்றும் அவர் கூறினார். துரதிருஷ்டவசமாக ஒரு சிலர் இரண்டையும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்றார். இந்து என்பது ஒரு சமயமல்ல, அது ஒரு பண்பாட்டுக் குறியீடு என்று அவர் விளக்கினார்.
மாணவர்கள் முதலில் தங்களது தாய்மொழியில் திறன் பெற வேண்டும் என்று வலியுறுத்திய திரு வெங்கையா நாயுடு, அதன் பின்னர் ஆங்கிலம் உள்ளிட்ட பலவேறு மொழிகளை கற்கலாம் என்றார். ஆங்கிலத்தின் மேல் உள்ள மோகம் காரணமாக நமது தாய்மொழியை மறந்து விடுகிறோம் என்றும் தாய்மொழியில்தான் நாம் நமது கருத்துகளை தெளிவாக எடுத்துரைக்க முடியும் என்றும் அவர் கூறினார். அனைத்துப் பள்ளகளிலும் தாய்மொழியை பயிற்று மொழியாக இல்லாவிட்டாலும், ஒரு பாடமாக மட்டுமாவது கற்பிப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டுமென்று குடியரசுத் துணைத் தலைவர் கேட்டுக் கொண்டார்.
சமயம், மண்டலம், சாதி ஆகியவற்றின் பெயரால் வேறுபாடுகளை உருவாக்கும் முயற்சிகளை குறை கூறிய அவர், இத்தகைய முயற்சிகள் முட்டாள்தனமானவை என்றார். நாட்டின் முன்னேற்றத்திற்கு விவசாயமும் தொழில்துறையும் சம அளவில் முக்கியமானவை என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப்பேரவைகளிலும் அலுவல் நடைபெறாமல் நடவடிக்கைகள் முடங்குவது குறித்து கவலை தெரிவித்த மக்களவை தலைவருமான குடியரசுத் தலைவர், ஆக்கப்பூர்வமான விவாதங்களின் அவசியத்தை வலியுறுத்தினார். விவாதம், வலியுறுத்துதல், முடிவெடுத்தல் ஊக்குவிக்கப்பட்டு இடையூறு செய்யும் போக்கு தவிர்க்கப்பட வேண்டுமென்று அவர் மக்கள் பிரதிநிதிகளை கேட்டுக்கொண்டார். மேம்பாட்டு அலுவல் பட்டியலை முன்னெடுத்துச் செல்ல அரசியல் கட்சிகளின் மீது நிர்பந்தம் கொண்டுவர வேண்டும் என்று திரு வெங்கையா நாயுடு கூறினார்.
*****
(Release ID: 1508050)
Visitor Counter : 167