மத்திய அமைச்சரவை

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் சட்டம், 1993-ல் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 01 NOV 2017 1:26PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் சட்டம், 1993-ல் திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதாவை, நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (திருத்த) மசோதா 2017 என அழைக்கப்படும் இந்த மசோதாவில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் அனுமதியின்றி, ஆசிரியர் கல்வி பாடப் பிரிவுகளை நடத்திவருவதாக கண்டறியப்பட்டுள்ள மத்திய/மாநில/பல்கலைக் கழகங்களுக்கு முன்தேதியிட்டு அங்கீகாரம் அளிக்க வழிவகை செய்யப்படுகிறது.

இந்த சட்டத் திருத்தத்தில், தேசிய ஆசிரியல் கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் இல்லாமல் ஆசிரியர் கல்வி பாடப் பிரிவுகளை நடத்திவரும் மத்திய/மாநில/யூனியன் பிரதேசங்களின் நிதியுதவியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள்/பல்கலைக் கழகங்களுக்கு 2017-18-ம் கல்வியாண்டு வரை, முன்கூட்டிய அனுமதி வழங்க வழிவகை செய்யப்படுகிறது. முன்கூட்டிய அனுமதி என்பது, ஒரு முறை நடவடிக்கையாக இருக்கும். இதன்மூலம், இந்தக் கல்வி நிறுவனங்களில் தேர்ச்சிபெற்றுள்ள/பதிவுசெய்துள்ள மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருப்பது உறுதிசெய்யப்படும்.

இந்தக் கல்வி நிறுவனங்கள்/பல்கலைக் கழகங்களில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் அல்லது ஏற்கனவே தேர்ச்சிபெற்றவர்கள், ஆசிரியராக வேலைவாய்ப்பு பெறுவதற்கு தகுதியுடைவர்களாக சட்டத் திருத்தம் மாற்றும். மேற்கண்ட பலன்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு, இந்த சட்டத் திருத்தத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் கல்வியறிவுத் துறை கொண்டுவந்துள்ளது.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் சட்டத்தின் 14-வது பிரிவின்படி, பி.எட். டி.இஎல்.எட் (D.El.Ed) போன்ற ஆசிரியர் கல்வி படிப்புகளை நடத்திவரும் அனைத்து கல்வி நிறுவனங்களும், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலிடம் அங்கீகாரம் பெற வேண்டும். மேலும், இந்த அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்/பல்கலைக் கழகங்களில் நடத்தப்படும் பாடப் பிரிவுகளுக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் சட்டத்தின் 15-வது பிரிவுப்படி அனுமதி அளிக்கப்படுகிறது.

ஆசிரியர் கல்விக்கான பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கு முன்கூட்டியே அனுமதி பெறுவதை கட்டாயமாக்கும் சட்ட வழிமுறைகள் குறித்து தெரிவிக்கும் வகையில், அனைத்து மத்திய பல்கலைக்கழங்கள் மற்றும் மாநில அரசுகள்/மாநில பல்கலைக் கழகங்கள்/ மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி கல்வி நிறுவனங்கள் (DIETs) ஆகியவற்றுக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் கடிதம் எழுதியிருந்தது. ஏதாவது கல்வி நிறுவனங்கள்/பல்கலைக் கழகங்களில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் அனுமதியின்றி பாடங்களை நடத்திவந்தால், அதுகுறித்து மார்ச் 31, 2017-க்குள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன்மூலம், கடந்தகால பிரச்சினைகளுக்கு ஒரு முறை தீர்வை ஏற்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னணி:

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் சட்டம், 1993, ஜூலை 1, 1995-ல் அமலுக்கு வந்தது. இது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைத் தவிர, நாட்டின் மற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் பொருந்தும். இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம், ஆசிரியர் கல்வி வழிமுறையை திட்டமிடுவதும், ஒருங்கிணைந்து மேம்படுத்துவதும் ஆகும். இதேபோல, இந்த ஆசிரியர் கல்வி வழிமுறையை ஒழுங்குபடுத்துவதும், விதிகள் மற்றும் தரநிலையை உரிய முறையில் பின்பற்றுவதை உறுதிப்படுத்துவதும் நோக்கமாகும்.  இதனை நிறைவேற்றும் வகையில், ஆசிரியர் கல்விப் பாடப் பிரிவுகளை அங்கீகரிப்பதற்காக சட்டத்தில் தனி வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்/பல்கலைக் கழகங்கள் பின்பற்றுவதற்கான வழிமுறைகளும் கொண்டுவரப்பட்டன.

******



(Release ID: 1507883) Visitor Counter : 211


Read this release in: English