எரிசக்தி அமைச்சகம்
மின்சாரம் மற்றும் ஜவுளி அமைச்சகம் இணைந்து செயல்படுத்தும் புதிய ‘ஸாதி’ (SAATHI) திட்டம்
Posted On:
24 OCT 2017 1:07PM by PIB Chennai
மின்சாரம் மற்றும் ஜவுளி அமைச்சகம் இணைந்து, ஸாதி (SAATHI - சிறிய தொழிற்சாலைகளுக்கு திறமையான ஜவுளி தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, அதனை நிலையாக செயல்படுத்த தீவிரப்படுத்துதல்) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் மின்சாரம் சேமிக்கும் விசைத்தறி, மின் மோட்டார் மற்றும் தளவாடங்கள் போன்றவற்றை மின்சாரத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் எரிசக்தித் திறன் சேவை அமைப்பு (EESL), சிறு மற்றும் குறு விசைத்தறி தொழிற்சாலைகளுக்கு வெளிப்படையான விலையில் வழங்குகிறது.
ஸாதி திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அரசு எரிசக்தி திறன் சேவை அமைப்புடன் இணைந்து ஜவுளி ஆணையாளர் அலுவலகம் மூலம், ஒரே நேரத்தில் பல இடங்களிலும் பான்-இந்தியா முறையில் செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அறிமுகத் திட்டங்கள், பயிற்சி வகுப்புகள் போன்றவை ஈரோடு, சூரத், இச்சல்காரஞ்சி போன்ற பல இடங்களில் நடத்தப்பட உள்ளன..
திறனுள்ள உபகரணங்களை பயன்படுத்துவதன் மூலம் மின்சார சேமிப்பு, உற்பத்தி விலையில் சேமிப்பு உண்டாவதால், 4 அல்லது 5 வருடங்களில் திருப்பிக் கட்டவேண்டிய தொகையை, எளிதாக கட்டிவிட முடியும். எல்.இ.டி. மின்விளக்கு, மின்சார மீட்டர்கள், மின்சார வாகனங்கள் போன்ற பொருட்களை எரிசக்தித் திறன் சேவை அமைப்பு மூலம் மொத்தமாக கொள்முதல் செய்வதற்கும் இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்படுகிறது. தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் தளவாடங்கள் வாங்குவதற்கு முழுமையாக முதல் போடவேண்டிய அவசியம் இல்லாமல், தவணை முறையில் எரிசக்தித் திறன் சேவை அமைப்பு வழங்குகிறது. திறன் சேமிப்புத் தொகையில் இருந்தே பணம் எடுத்து கடன் தவணையைக் கட்டிவிட முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு. தேவை மற்றும் மொத்தக் கொள்முதல் ஒருங்கிணைப்பும் மூலதனச் செலவை குறைப்பதற்கு வழி வகுக்கிறது, இதனால் கிடைக்கும் நன்மையாக விசைத்தறி தொழிற்சாலைகள் திருப்பிச்செலுத்தும் தொகையும், தவணை காலமும் குறைகிறது.
விசைத்தறி அமைப்பானது, இந்தியாவின் முக்கியமான வகைப்படுத்தப்படாத துறையாக இருந்தாலும், சின்னஞ்சிறு மற்றும் சிறிய தொழிற்சாலைகள் மூலம் நாட்டின் 57% ஜவுளி உற்பத்தி செய்யப்படுகிறது. இப்போது நாட்டில் 24.86 லட்சம் விசைத்தறி தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பழைய தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. இந்த சாதாரண தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் திட்டத்தை இந்திய அரசு, இன்ஸ்டியூ (INSITU) மூலம் செயல்படுத்துகிறது. சாதாரண விசைத்தறியை கூடுதல் தொழில்நுட்பத்துடன் மாற்றி செயல் படுத்தும்போது அதிக உற்பத்தி, நல்ல தரம் மற்றும் 50% கூடுதல் மதிப்புத் திறன் போன்றவற்றை அடைய முடியும். இதுவரை 1.70 லட்ச சாதாரண விசைத்தறிகள், இந்தத் திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசு மானியமாக ரூ.186 கோடி வழங்கியுள்ளது.
RM/VM
(Release ID: 1507745)
Visitor Counter : 258