குடியரசுத் தலைவர் செயலகம்

அறிவுத் திறன், கண்டுபிடிப்பு, புத்தாக்க சிந்தனை ஆகியவையே நாட்டை முன்னேற்றும் சக்கரங்கள்..!

Posted On: 24 OCT 2017 9:02PM by PIB Chennai

இந்திய குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந், இன்று (அக்டோபர் 24, 2017) பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) சோதனைக்கூடம் மற்றும் அதிநுண்ணியில் எனப்படும் நானோ அறிவியல் மற்றும் பொறியியல் மையத்தை பார்வையிட்டார்.

அதன்பின்னர் குடியரசுத் தலைவர், பெங்களூரு ..எஸ். விஞ்ஞானிகளுடன் வட்ட மேஜை கலந்துரையாடல் நடத்தினார். விஞ்ஞானிகளிடம் பேசுகையில், அறிவுத் திறன், கண்டுபிடிப்பு, புத்தாக்க சிந்தனை ஆகிய மூன்றும்தான், நாட்டை முன்னேற்றும் நான்கு சக்கரங்கள் என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு சக்கரமும் மற்ற சக்கரங்களுடன் ஒருங்கிணைந்து, சரியான திசையில் பயணிக்க வேண்டும். ஒரு சக்கரத்தின் சிறிய தடுமாற்றம்கூட, நம்மை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும். இந்த பயணத்தின் முழு பொறுப்பும் விஞ்ஞானிகளிடம்தான் இருக்கிறது. அவர்கள்தான் மூன்று சக்கரங்களுக்கும் நேரடி பொறுப்பாளர்கள். அவர்கள் நான்காவது சக்கரத்துடன் ஒருங்கிணைந்து பயணிக்கவில்லை என்றால் நமக்கும், சமூகத்திற்கும் எதிர்காலம் கிடையாது என்று சொன்னார்.

குடியரசுத் தலைவர் மேலும் பேசுகையில், ‘’நாட்டிற்கு ஏராளமான சவால்கள் உள்ளன. வறுமையில் இருந்து நம் மக்களை விடுவித்து, ஆரோக்கியம், உணவு மற்றும் ஆற்றல் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்னைகளுக்கு சமுதாயம் சரியான தீர்வை எதிர்நோக்குகிறது. அதே நேரம் விஞ்ஞானிகள் தங்கள் அறிவுத் தேடலுக்கு, அது அணு முதல் அண்டம் வரையிலான எதுவாக இருந்தாலும், எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் முயற்சிக்க வேண்டும். இந்த இரண்டு முயற்சிகளும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை அல்ல.

மறைந்த டாக்டர் சதீஷ் தவான் காட்டிய பாதையில், இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) விவசாயிகளுக்கு உதவும் வகையில் எத்தகைய சிறப்பான அறிவியல் சாதனை படைத்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். இஸ்ரோவின் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளுடன் இணைந்து செயலாற்ற ..எஸ். முன்வர வேண்டும். இந்த நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவதும், கூட்டு சாதனை மேற்கொள்வதும் சவால் நிரம்பியது ஆகும்.

பெங்களூருவில் உள்ள அனைத்து அறிவியல் கழகங்களும் இணைந்து செயல்படும்போது, விஞ்ஞானிகளுக்கு, அறிவியல் புரட்சி உருவாக்குவதற்கான நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் நம்மை எத்தனை உயரத்துக்கு கொண்டுசெல்ல முடியும் என்பதில் விஞ்ஞானிகள் தங்கள் திறமையை எடுத்துக்காட்ட வேண்டும். பெங்களூருவில் தோன்றும் நெருப்புப் பொறியின் வெளிச்சம் நாடு முழுவதும்  பரவ வேண்டும். இந்த அறிவியல் கலாச்சார மாற்றத்தை ஆழமாகவும் அகலமாகவும் பள்ளி வகுப்பறை, வியாபார தலங்கள் வரையிலும் கொண்டுசெல்ல முடியும்.  

பெங்களூருவைச் சேர்ந்த முன்னணி விஞ்ஞானிகள் ஒரு முன் மாதிரியான  ஒருங்கிணைக்கப்பட்ட, ஆற்றல்மிகு திட்டத்தை வழங்கியுள்ளார்கள். ..எஸ். விஞ்ஞானிகள், ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள், இன்ஸ்டம் எனப்படும் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்டெம் செல் பயாலஜி ரிஜெனரேடிவ் மெடிசின், நேஷனல் சென்டர் ஃபார் பயாலஜிகல் சென்டர், தி ராமன் இன்ஸ்டிடியூட் மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அஸ்ட்ரானமி போன்ற அமைப்புகளுடன் இணைந்து மெகா இயற்பியல் மற்றும் பொருட்கள் ஆராய்ச்சி நடைபெறுகிறது. உயிர் தொழில்நுட்பத் துறையிலும் நமது ஆராய்ச்சி உலகத் தரத்திற்கு இருக்கிறது. அறிவியல் தலைவர்கள் சொல்லியிருப்பது போன்று, ஒருங்கிணைப்பு மூலம் புதிய சவால்களை எதிர்கொள்ளவும், 2022ம் ஆண்டில் புதிய இந்தியா என்ற சாதனை படைக்கவும் முடியும்’’ என்று கூறினார்.

குடியரசுத் தலைவருடன் வட்ட மேஜை கலந்துரையாடலில், இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் .சிதம்பரம், இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குனர் பேராசிரியர் அனுராக் குமார், உயிர் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் டாக்டர் கே.விஜயராகவன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் டாக்டர் அஷுதோஷ் சர்மா,  உயர் கல்வி, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு.கே.கே.சர்மா, இஸ்ரோ நிறுவனத் தலைவர் திரு. கிரண் குமார், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் தலைவர் டாக்டர் எஸ்.கிறிஸ்டோபர் மற்றும் பல விஞ்ஞானிகளும் கலந்துகொண்டு பேசினார்கள்.


(Release ID: 1507744)
Read this release in: English