ரெயில்வே அமைச்சகம்

ரயில்வே ஊழியர்களின் பிரச்னைகளை நேர வரம்புக்குள் தீர்த்துவைப்பதற்கான ஊழியர் சாசன அறிவிக்கை

ரயில் நிலையங்களின் விரைவான வளர்ச்சி மற்றும் ரயில்வே காலி நிலங்களை கண்காணித்தல் தொடர்பான ரயில்வே நிலங்கள் மேம்பாட்டுஆணையம் ( ஆர்.எல்.டி.ஏ.,) சீரமைப்பதற்கான குழு அமைப்பு

Posted On: 25 OCT 2017 6:20PM by PIB Chennai

ரயில்வே பணி இடங்கள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புகளை மேம்படுத்துவது தொடர்பான மூத்த அதிகாரிகளைக் கொண்ட  5 உறுப்பினர்கள் குழு அமைப்பு

மும்பையில் உள்ள ஒவ்வொரு புறநகர் ரயில் நிலையங்கள் குறித்த தணிக்கை அறிக்கை . புதிய நடைமேம்பாலங்கள், மற்றும் ஏற்கெனவே உள்ள நடை மேம்பாலங்களினை விரிவாக்கம் செய்தல், அல்லது மாற்றுதல், நகரும் படிக்கட்டுகள், கண்காணிப்பு காமிரக்கள், கூடுதல் வழிகள்,  மற்றும் இறங்குமிடங்கள் குறித்த முக்கியமான பரிந்துரைகள். மண்டல ரயில்வேக்கள் செயல் திட்டங்களை தயாரித்தல்.

ரயில்வே செயல்பாட்டுத்திறனை அதிகரிக்க அனைத்து ரயில்வே கோட்டங்களிலும் கூடுதல் கோட்ட மேலாளர்கள் பணியிடங்களை உருவாக்குதல்.

29-09-2017 அன்று எல்பின்ஸ்டோன் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தை தொடர்ந்து  ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் உத்தரவு படி ரயில்வே பொது மேலாளர்கள் , கோட்ட மேலாளர்கள் விரைவாக செயல்பட்டு ரயில்வே பணிகள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் அளித்தல் மற்றும்., நடைமுறைப்படுத்துதல்,  நிலையான முறையான ரயில்வே நிர்வாக மாற்றங்களுக்கான ஒரு படி.

ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ்கோயல் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்மை காலங்களில் இந்திய ரயில்வேயில் எடுக்கப்பட்ட பல்வேறு முக்கிய முடிவுகளின் விவரங்களை விவரித்தார்.  அதன் விவரம் வருமாறு –

ஊழியர்கள் சாசனம் (உரிமைகள்) :-

ரயில்வே ஊழியர்களின் குறைகள், பிரச்சனைகள், உரிமைகள் உள்ளிட்டவைகளுக்கு உடனுக்கு உடன் குறித்த கால வரம்புக்குள் தீர்வு காண்பதற்கு வகை செய்யும் ஊழியர் சாசனம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் கட்டமாக ரயில் பயணிகள் சாசனம் விரைவில் இறுதி செய்யப்பட்டு இன்னும் ஒருமாத காலத்திற்குள் வெளியிடப்படும்.

துரிதமான ரயில்நிலையங்கள் மறுசீரமைப்பு திட்டங்கள்

ரயில்வே வாரிய செயலாளரை தலைவராக கொண்ட ரயில்வே நிலங்கள் மேம்பாட்டு ஆணையத்தை ( ஆர்.எல்.டி.ஏ.,) சீரமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் துரிதமான மறுசீரமைப்பு பணிகள் , ரயில்வே நிலங்களை கண்காணித்தல், ஆகியவை தொடர்பான பணிகளுக்கான இந்த கமிட்டி தனது அறிக்கையை அரசிடம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும்.

ரயில்வே பணியிடங்களில் பாதுகாப்பு

ரயில்வே பணி இடங்கள் குறிப்பாக  ரயில் தண்டவாளங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக ரயில்வே வாரியத்தின்  மூத்த அதிகாரிகளைக் கொண்ட  5 உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டு ரயில்வே அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த குழு ரயில்வே கட்டமைப்பில், மற்றும் பணியிடங்களில் ரயில்வே ஊழியர்களின் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்த பரிந்துரைகளை வழங்கும். இந்த குழு சம்பவங்கள் நிகழாமல் தடுத்தல் பற்றி 2 விதமான பரிந்துரைகளை அளிக்கும்.  குறுகிய காலத்தில் அதாவது 3 மாதங்களில் நிறைவேற்ற வேண்டிய பரிந்துரைகள் மற்றும் ஒரு வருடத்திற்குள் நிறைவேற்ற வேண்டிய பரிந்துரைகள் பற்றி இதில் இடம்பெறும்.  இந்த குழு தனது அறிக்கையை டிசம்பர் 2017 இரண்டாவது வாரத்திற்குள் அளிக்கும்.

மும்பை புறநகர் தணிக்கை அறிக்கை-

29-09-2017 அன்று மும்பை எல்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட துரதிருஷ்டமான  நிகழ்வை அடுத்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவுபடி, மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் ஒவ்வொன்றிலும் உள்ள அடிப்படை கட்டமைப்புகள் பயணிகள் வருகை, தேவைப்படும் வசதிகள், மத்திய மற்றும் மேற்கு ரயில்வேக்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பல்முனை தணிக்கை குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ரயில் நிலையங்களின் நடைமேம்பாலங்களை புதிதாக அமைத்தல், ஏற்கெனவே உள்ள நடை மேம்பாலங்களை மாற்றுதல் அல்லது விரிவாக்கம் செய்தல், நகரும் படிக்கட்டு வசதிகளை செய்து கொடுத்தல்,கூடுதலாக நுழைவு மற்றும் வெளியே செல்லும் பாதைகளை அமைத்துக் கொடுத்தல், தேவைப்படும் இடங்களில் சுரங்கபாதைகளை அமைத்தல், நடைமேம்பாலங்கள், நுழைவு மற்றும் வெளிவாசல்களில் இருக்கும் வியாபாரிகளை அப்புறப்படுத்துதல், கூட்டத்தினை கட்டுப்படுத்துவதற்காக காவலர்களை நியமித்தல், சிசிடிவி எனப்படும் கண்காணிப்பு கேமிராக்களை அதிகரித்தல் பற்றிய பரிந்துரைகளை மண்டல ரயில்வேக்கள் விரிவான செயல் திட்டத்தினை தயாரித்து நடைமுறைப்படுத்தும்.

கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர்கள் பணியிடங்களை அதிகரித்தல்-

கண்காணிப்பு பணிகளை அதிகரிப்பதற்காக அனைத்து ரயில்வே கோட்டங்களிலும் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர்கள் பணியிடங்களை உருவாக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. பெரும்பாலான பணியிடங்கள்  ஒன்று என்பது இரண்டாக்கப்படும். டெல்லி போன்ற முக்கியமான கோட்டங்களில் தற்போது உள்ள 2 கூடுதல் கோட்ட மேலாளர் பணியிடம் 3 ஆக அதிகரிக்கப்படம். மும்பையில் உள்ள 2 கோட்டங்களிலும் மேற்கு மற்றும் மத்திய ரயில்வேக்களிலும் உள்ள கூடுதல் கோட்ட மேலாளர்கள் பணியிடங்கள் தற்போதைய 2 இடங்கள் என்பதில் இருந்து 4 ஆக உயர்த்தப்படும். மும்பை கோட்டத்தில் உள்ள ஒரு கூடுதல் கோட்ட மேலாளர் பணியிடம் புறநகர் ரயில்நிலைய சேவைகளுக்காக மட்டும் ஒதுக்கப்படும்.

இந்திய ரயில்வேயில் உள்ள பொதுமேலாளர்கள், கோட்ட மேலாளர்கள், கள அலுவலர்களின் அதிகாரங்கள் -(  நிலையான முறையான ரயில்வே நிர்வாக மாற்றங்களுக்கான ஒரு படி.)

முன்னிலை  அதிகாரிகளின் அதிகாரங்கள்

ரயில்வேயின் சிறப்பான பணிக்கு நிதி மற்றும் நிர்வாக பணி அதிகாரங்கள் இந்திய ரயில்வேயின் பொதுமேலாளர்கள், கோட்ட மேலாளர்கள், கள அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த 29.09.2017 அன்று எல்பின்ஸ்டோன் ரயில்நிலையத்தில் நிகழ்ந்த சம்பவத்தை தொடர்ந்து ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் மேற்கொண்ட ஆய்வுக்குப் பிறகு ரயில்வே பொது மேலாளர்கள், கோட்ட மேலாளர்கள், மற்றும் கள அலுவலர்களுக்கான அதிகாரங்களை வரையறுத்துள்ளார்.  அதன் மூலம் பணிகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் ரயில்வே பணிகள் தொடர்பாக அவர்கள் விரைவாக முடிவுகளை மேற்கொள்ள முடியும். சம்மந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் பணியாளர்களுடன் கலந்தாலோசித்து இந்த பணி வரம்புகள் விரைவில் நடைமுறைக்குள்ளாகும்.

நிலையான, நீடித்த ரயில்வே துறையின் மாற்றத்திற்கான விரிவான 10 கொள்கைகள்,  -

ரயில்வே நிர்வாகத்தின் வெற்றிக்காக ரயில்வே அமைச்சர் திரு. பியுஷ்கோயல் அதிகார பகிர்வுடன் கூடிய  பத்து கொள்கைகளை அறிவித்துள்ளார். இந்த கொள்கைள் அரசின் செயல்பாட்டிற்கும் பொருந்தும் . அதாவது முடிவெடுக்கும் திறன் கொண்ட தலைமை, முடிவு சார்ந்த செயல்பாடு, பிரச்னைகளை அடித்தளம் வரை ஆராய்தல், நேரம் சார்ந்த நடைமுறை, பிரிச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல். நவீன, நிதி , தொழில்நுட்பத்தில் கவனம், பொறுப்புத்தன்மை, உன்னிப்பாக கவனித்தல்,  அனைவருடனும் பங்களிப்பு செய்தல்,சட்டத்தினை மதித்தல், வெளிப்படைத்தன்மை ஆகியவை இதில் அடங்கும். மேலும் இதன் விரிவான அம்சம் என்னவென்றால் வர்த்தக, பொறியியல் பணிகள், ரயில் தடங்கள் மேலாண்மை, இயந்திரவியல், நிதித்துறை, நிர்மானங்கள், கொள்முதல் மற்றும் மருத்துவம் சார்ந்த விரிவான செயல்பாட்டிற்கு  அதிகார பகிர்வு அளிக்கப்படும். . அதன் மூலம் ரயில்வேயில் பாதுகாப்பு மற்றும் சேவைகளை விரைவு படுத்த முடியும்.

விரிவாக்கப்பட்ட அதிகாரங்கள் . –

பாதுகாப்பை உயர்த்துதல் –  பாதுகாப்பு சார்ந்த பணிகளில் பொது மேலாளர்கள் ரயில்வே நிர்வாகம் அனுமதித்துள்ள நிதி வரம்புக்கு உட்பட்டு  உச்ச வரம்பும் இன்றி முடிவு எடுக்க அதிகாரம் அளிக்கப்படுகிறது. ரயில்வே துறையில் உள்ள காலி பணியிடங்களை 62 வயதுக்கு  உள்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்களை கொண்டு நிரப்ப கோட்ட மேலாளர்கள், முதன்மை பணிமனை மேலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. ரயில்வே தண்டவாளங்களில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த பணிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப உயர் முன்னுரிமை அளிக்கப்படும். பாதுகாப்பு கருதி  தண்டவாள பராமரிப்பு எந்திரங்களின் பழுதுகளை தாமதமின்றி சரிசெய்ய கள அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகளுக்கு தேவையான உதிரிபாகங்களை வாங்க கொள்முதல் விதிகள் எளிமைப்படுத்தப்படும்.

துரிதமான பணி மற்றும் பழுது ஏற்பட்ட இடங்களுக்கு விரைதல்

விபத்து , பழுது காரணமான சூழ்நிலைகளில் நிகழ்விடத்திற்கு நேர விரையம் இன்றி விரைவாக செல்ல ஏதுவாக இளநிலை அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள், பொறுப்பாளர்கள் பல்முனை பயன்பாட்டு வாகனங்களை அமர்த்திக்கொள்ள நிகழ்வுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை அனுமதி அளிக்கப்படும்.  தடங்கல் ஏற்பட்ட ரயில் சேவை தொடரவும், தாமதமின்றி ரயில்களை இயக்கவும், ரயில்களின் பாதுகாப்புக்கும்  இந்த திட்டம் உதவும்.

ரயில் நிலையங்கள் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல்-  ரயில் நிலையங்களில் பயணியர் கூடங்கள் அமைத்தல்,மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள், மின்னணு தகவல் பலகைகள், ரயில்கள், ரயில் பெட்டிகளில் ஒளிர்பான்கள், போன்ற பணிகளை மேற்கொள்ள ரயில்வே கோட்ட மேலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி ஒப்பளிப்பு அதிகாரம் தற்போதைய 1 கோடி ரூபாய் என்பது இரண்டரை கோடி ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குமிடம் (யு.டி.எஸ்.) பயணியர் முன்பதிவு மையங்கள்(பி.ஆர்.எஸ்) ஆகியவற்றில் பழுது காரணமாக பயணிகளுக்கு அசவுகரியங்கள் ஏற்படுவதை தவிர்க்க அங்கு உள்ள கணிப்பொறிகள், அச்சுக்கருவிகள் உள்ளிட்ட கருவிகளை  பழுது பார்க்க நிகழ்வு ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய் வரை  ரயில்வே கோட்ட மேலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.  ரயில்வே தலைமையிட முனையங்கள் இல்லாத இடங்களில் கூட இத்தகைய பயணச்சீட்டு மையத்திற்கான இடங்களை வாடகைக்கு அமர்த்தவும் அதிகாரம் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தொலை தூரப்பகுதிகளில் உள்ள பயணிகள் ரயில்டிக்கெட்டுகளை எளிதாக பெற முடியும். பிரதான ரயில் நிலையங்களில் உள்ள நிலைய இயக்குனர்களுக்கு  நிலையப்பணிகள் சுமூகமாக நடைபெற ஏதுவாக முடிவுகளை எடுக்க கோட்ட கிளை அலுவலர்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்படும். 75 முக்கிய ரயில் நிலையங்களில் இளமையான மற்றும் துடிப்பு மிக்க நிலைய இயக்குனர்களை நியமிக்க அறிவுரைகள் பிறப்பிக்கப்படும்.

கொள்முதல் நடவடிக்கையில் எளிமை-

அரசின் மின்னணு கொள்முதல் இடங்களில் இருந்து  நேரடியாக 25 ஆயிரம் ரூபாய் வரையில் கொள்முதல் செய்யவும், கோட்டம் ஒன்றுக்கு துறை ரீதியாக 10 லட்சம் ருபாய் வரையில் கொள்முதல் செய்யவும் அனுமதி

நிதிஅளிப்பில் புதுமை மற்றும் திறமையான திட்ட செயலாக்கம்

கட்டி பராமரித்து ஒப்படைத்தல் (பி.ஓஒ,.டி,,) முறைப்படி ரயில்வே திட்டங்களை குறிப்பாக லாண்டிரிகள் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்பளிப்பு வழங்க ரயில்வே கோட்ட மேலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. அவசியத் தேவை வசதிகளை அளிப்பதில் கால விரையத்தை குறைக்க இது உதவும்.

தளவாடங்களை பராமரிப்பதில் மேம்பாடு-

முக்கியமான கருவிகள், தளவாடங்களை பராமரித்து தடையில்லா சேவை அளிக்க, உண்மையான உற்பத்தியாளர்களுடன் ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் செய்துகொள்ள கோட்ட மேலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

தூய்மை பாரதம் – ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் தூய்மையை பராமரித்தல்

ரயில் நிலையங்கள், ரயில்களில் சுத்தம் மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்ள சேவை ஒப்பந்தங்களை வழங்க ரயில்வே கோட்ட மேலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பளிப்பு நிதி உச்ச வரம்பு 20 லட்சம் ரூபாயில் இருந்து 1 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.  அதாவது நீண்டகால ஒப்பந்தம் அளிப்பது மற்றும் தரமான  ஒப்பந்ததாரர்களை நியமிக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. ஒப்பந்தம் செயல்படாமை அல்லது தோல்வி அடைந்ததன் காரணமாக முக்கியமான சேவைகள் தடைபடக்கூடாது. அதுபோன்ற காலங்களில் உடனடியாக புதிய அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரரை முன்மொழிவு கேட்டு நியமிக்கவும் அனுமதி.

சுற்றுச்சூழல் சார்ந்த  பணிகளான அதாவது சூரிய மின்தகடுகள், மழைநீர் சேகரிப்பு பணிகள், நீர் கிணறுகள், நீர் மறு சுழற்சி போன்ற பணிகளை மேற்கொள்ள கோட்ட மேலாளர்களுக்கு முழு அதிகாரம்.

வருவாயை அதிகரித்தல்-

பார்சல் இடங்கள், பிரேக்வேன், வாகன நிறுத்துமிடம், விளம்பரப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள கோட்ட மேலாளர்களுக்கு முழு அதிகாரம்.  அதன் மூலம் ரயில்வேயின் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். தனியார் பங்களிப்புகளை  அதிகரிக்க உரிமம் வழங்குவதற்கான அதிகாரங்களும் அளிக்கப்படும்.

பாதுகாப்பை பலப்படுத்துதல் –

ரயில்வே பாதுகாப்பிற்காக ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இரண்டு இரு சக்கர வாகனங்கள் வாங்க பொது மேலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

டிஜிட்டல் இந்தியாவை நோக்கிய நகர்வு –

மென்பொருள் தயாரிப்புக்கான செலவுக்கு ஒரு நிகழ்வுக்கு இரண்டரை கோடி ரூபாய் வரை பொது மேலாளர்கள் ஒப்பளிப்பு வழங்க அனுமதி. அதுபோல கோட்ட மேலாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அனுமதி. திறமையான செயல்பாட்டுக்கு உதவ தொழில் நுட்ப தன்மயமாக்கலுக்கு இந்த  திட்டம் உதவும்

பயிற்சியை அதிகரித்தல் மற்றும் ஊழியர்களின் திறனை வளர்த்தல் –

புதிய தொழில் நுட்பங்கள் குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு கோட்ட மேலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.  அதன் மூலம் ஊழியர்களின் திறனும், பணித்திறமையும் அதிகரிக்கும்.  இதற்கான பயிற்சிக்கு ஒரு நபருக்கு முன்பு 10 ஆயிரம் ரூபாயாக இருந்தது இப்போது 40 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

மண்டல ரயில்வேக்களில் முன்னேற்றத்திற்கான மாதிரி அட்டவணை –

அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் சிறந்த நடைமுறைகளை உருவாக்க ஏதுவாக மாதிரி அதிகார அட்டவணை (எஸ்.ஓ.பி.) விரைவில் தயாரித்து வெளியிடப்படும். அதன்மூலம் பொது மேலாளர்கள், கோட்ட மேலாளர்கள் மற்றும் கள பணியாளர்கள்  வரையிலான அதிகாரிகளின் அதிகாரம் குறித்த விவரங்கள் இடம்பெறும்.  எனினும் பொதுமேலாளரின் அதிகார வரம்மை இது குறைக்காது.  அதே நேரத்தில் அது உள்ளுர் நிலைமைக்கு ஏற்ப செயல்பட வழி வகுக்கும்.    



(Release ID: 1507739) Visitor Counter : 223


Read this release in: English