சுற்றுலா அமைச்சகம்

நாடு முழுவதும் முழுநேர நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்ட சுற்றுலா திருவிழா இன்றுடன் நிறைவு

Posted On: 25 OCT 2017 12:34PM by PIB Chennai

மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் பல்வேறு தரப்பினருடன் இணைந்து சுற்றுலாத் திருவிழாவை மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்தியது. 2017-ம் ஆண்டில் அக்டோபர் 5 முதல் 25-ம் தேதிவரை முழுமையான நிகழ்ச்சிகளுடன் ஒவ்வொரு நாளும் திருவிழா கொண்டாடப்பட்டது. சுற்றுலா திருவிழாவுக்கு மற்ற அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளிடமிருந்து மிகவும் சிறந்த வரவேற்பு கிடைத்தது. அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து நடத்த முன்வந்தனர். கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்த நிகழ்ச்சி, நாட்டின் அனைத்து பிராந்தியங்களுக்கும் பரவியது. இந்த நிகழ்ச்சிகளில் அதிக அளவிலானோர் கலந்துகொண்டனர்.

நாள் 1

புதுதில்லியில் இந்தியா கேட் பகுதியிலிருந்து குதுப் மினார் பகுதி வரை சைக்கிள் பந்தயம் நடத்தப்பட்டு சுற்றுலாத் திருவிழா தொடங்கியது. சைக்கிள் பந்தயத்தை சுற்றுலா அமைச்சகத்தின் செயலாளர் திருமதி.ரஷ்மி வர்மா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

சுற்றுலா விழிப்புணர்வு நடை மற்றும் ஓட்டங்கள் நடத்தப்பட்டன. இவை, ஷில்லாங், புவனேஸ்வர், கோவளம் (கேரளா), ஹாஜிப்பூர் (பீகார்), குருதாஸ்பூர், சென்னை, குவஹாத்தி, மும்பை, ஆமதாபாத், ஜெய்ப்பூர், இம்பால், லக்னோ, ஆக்ரா, ஹைதராபாத், குவாலியர், போபால், பனாஜி (கோவா), தில்லி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டன. இந்த நகரங்களில் சுற்றுலா நடை மற்றும் ஓட்டத்தில், ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான மாணவர்கள், உள்ளூர் மக்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

நாள் 2

 

தமிழ்நாடு சுற்றுலாத் துறையுடன் சென்னையில் உள்ள இந்திய சுற்றுலாத் துறை இணைந்து முழுமையான இந்திய பயண நிகழ்ச்சி”யை (“Absolute India Travel Bazaar”) நடத்தியது. இதில் கலந்துகொண்ட மாநில சுற்றுலாத் துறைகள், விமான நிறுவனங்கள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த ஆயிரத்து 500 பேருக்கு “சுற்றுலாவின் முக்கியத்துவம்” குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

 

ஹாஜிப்பூரில் சுற்றுலா திருவிழாவைக் கொண்டாடுவதன் அடையாளமாக சுற்றுலாவுக்கான பேரணி நடத்தப்பட்டது. ஹாஜிப்பூர் ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனத்திலிருந்து காந்தி சவுக் வரை சென்ற இந்தப் பேரணி, திரும்பவும் ஹாஜிப்பூர் ஹோட்டல் மேலாண்மைக் கல்வி நிறுவனம் வரை 5 கிலோமீட்டர் தொலைவுக்கு நடத்தப்பட்டது. இதில், ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். புதுதில்லியில் உள்ள புராணா குய்லா பகுதியில் முதல்முறையாக ஆசியான்-இந்தியா இசைத் திருவிழா நடத்தப்பட்டு, அதனுடன் அன்றைய நாள் நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன.

 

நாள் 3

மும்பையில் உள்ள இந்திய சுற்றுலாத் துறையும், கைவால்யதம் (யோகா பயிற்சி நிறுவனம்) இணைந்து “யோகா செயல் விளக்கம்” செய்து அன்றைய நாள் நிகழ்ச்சிகள் தொடங்கின. மும்பையில் நேப்பியன் கடல் சாலையில் உள்ள பிரியதர்ஷினி பூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அதிகாலையில் மெதுவான ஓட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் முன்னிலையில், 30-க்கும் மேற்பட்ட யோகா பயிற்சியாளர்கள், பொதுவான யோகா பயிற்சிகளை செய்து காண்பித்தனர். “சுற்றுலா திருவிழா”வின் ஒரு அங்கமாக “தேசிய கலாச்சார விழாவை, குஜராத் மாநிலத்தில் ஒரே பாரதம் வளமான பாரதம் திட்டத்தின்கீழ், கலாச்சார அமைச்சகம் நடத்தியது.

 

நாள் 4

 

வடகிழக்கு பிராந்தியங்களின் வளர்ச்சிக்கான அமைச்சகம், வடகிழக்கு சுற்றுலா வளர்ச்சி கவுன்சில், மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநில அரசுகள் ஆகியவற்றுடன் இணைந்து உள்ளூர் உணவு வகைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிப் பொருட்களை காட்சிப்படுத்தும் வகையிலான பல்வேறு நிகழ்ச்சிகளை இந்திய சுற்றுலாத் துறை நடத்தியது.

 

சுற்றுலாத் திருவிழாவின் ஒரு அங்கமாக, நர்மதா விழாவை மத்தியப்பிரதேச மாநில அரசு நடத்தியது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு பாரம்பரிய இடங்களில் மக்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த கலாச்சாரத் திருவிழா நடத்தப்பட்டது. சுற்றுலாத் திருவிழாவின் நோக்கம் சிதையாத வகையில், இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 

உத்தராகண்ட் மாநில அரசு, மலையேற்ற நிகழ்ச்சியை நடத்தியது. அதேநேரம், சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிப்பதில் இளைஞர்களின் பங்களிப்பை உணர்த்தும் வகையில், இளையோர் நாடாளுமன்றத்தை ஹிமாச்சலப்பிரதேச அரசு நடத்தியது. நடனப் போட்டிக்கு உத்தரப்பிரதேச அரசு ஏற்பாடு செய்தது.

 

நாள் 5

 

சுற்றுலா செல்லும் இடங்களில் தங்கியிருத்தல் மற்றும் நீடித்த சுற்றுலா குறித்த கருத்தரங்குகள்/பணிமனைகளை இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்கள் நடத்தின. இதன்மூலம், நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர்களை ஊக்குவிப்பதில் முன்னிலை வகித்தன. இந்த நிகழ்ச்சிகளை மாநில அரசுகளுடன் இணைந்து அக்டோபர் 9-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை, வடகிழக்குப் பிராந்தியங்களின் மேம்பாட்டு அமைச்சகம் நடத்தியது.

 

வடகிழக்குப் பிராந்தியத்தில் மாணவர்கள், சுற்றுலாவாசிகள், உள்ளூர் தொழில்முனைவோர், சுற்றுலாத் துறையைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் பங்கேற்று ஆன்லைன் வீடியோ தயாரிப்புப் பணிகளை அக்டோபர் 9-ல் தொடங்கினர். நகர்லாகுன், கும்டோ ஆகிய பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் மாணவர்கள், ரயில்வே மற்றும் சுற்றுலா அதிகாரிகள் இணைந்து மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச்சூழல் சுற்றுலா முயற்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

 

சுற்றுலாத் திருவிழாவின் ஒரு அங்கமாக வசந்த கண்காட்சிக்கு (அக்டோபர் 13 வரை) மிசோராம் மாநில அரசு ஏற்பாடு செய்தது.

 

நாள் 6

வழிகாட்டி பயிற்சி வகுப்புகளை மும்பை, நாக்பூர், அவுரங்காபாத், புனே ஆகிய பகுதிகளில் மகாராஷ்டிர மாநில அரசு தொடங்கிவைத்தது. மாவட்ட அளவிலான கலாச்சார நிகழ்ச்சிகளை அவுரங்காபாத் மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் இளைஞர் நல அமைச்சகம் நடத்தியது. தாஜ்மகால் பகுதியில் சுற்றுலா அமைச்சகம், கலாச்சார அமைச்சகம் மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசு இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தன. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, பாரம்பரிய முறையில் கதை சொல்லும் தஸ்தான்-இ-அமிர் குஸ்ராவை (Dastan-e-Amir Khusrau) டாக்டர் சையதா ஹமீத், ஜாக்கியா ஜகீர் மற்றும் ரெனி சிங் ஆகியோர் தாஸ் கேமா மவுண்ட் பகுதியில் நடத்தினர்.

                

நாள் 7

 

சுற்றுலாத் திருவிழாவின் 7-வது நாளின் முக்கியத்துவமாக, தமிழகத்தின் பொள்ளாச்சி பகுதியில் கிராமப்புற சுற்றுலா என்ற கருத்துரு அடிப்படையில், வண்ணமயமான மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி, இந்திய கிராமப்புறங்களின் வாழ்க்கை மற்றும் கிராமப்புறங்களில் உள்ள இடங்களை எவ்வாறு சுற்றுலாப் பகுதிகளாக மேம்படுத்தலாம் என்பது குறித்த புரிதலை ஏற்படுத்தியது.

 

பழங்குடி இளைஞர் பரிமாற்றத் திட்டம், ஒரே இந்தியா, வளமான இந்தியா – மாநிலங்களுக்கு இடையே இளைஞர் பரிமாற்றத் திட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசின் இளைஞர் நலத் துறை ஏற்பாடு செய்தது.

 

நாள் 8

 

தேசிய ரூர்பன் (ஊரகம் மற்றும் நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ், ஸ்பிட்டுக் ரர்பன் தொகுப்பில் சுற்றுலாத் திட்டங்களை ஊரக வளர்ச்சி அமைச்சகம் தொடங்கியது. இதன்படி, லே நகரின் ஸ்பிட்டுக் கோம்பா பகுதியில் சுற்றுலா கட்டமைப்பு, சுற்றுலா தகவல் மையம், கேளிக்கைப் பூங்கா மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.

 

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் நடத்தியது. இதன்படி, இட்டா நகரில் சுற்றுலாவாசிகள் தங்குவதற்கான வசதிகள், படுக்கை மற்றும் காலை உணவு வசதிகள் குறித்து போக்குவரத்து துறையினர், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், ஹோட்டல் நடத்துவோர், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு சமூக விழிப்புணர்வு பணிமனைகள் நடத்தப்பட்டன.

 

நாள் 9

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்களுக்கு வினாடி வினா, ஓவியம் வரைதல், கட்டுரை எழுதுதல் ஆகிய போட்டிகளை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடத்தியது. மேலும், பழமையான சுற்றுலாப் பகுதிகளுக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வது போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. சுற்றுலாத் துறையில் திறன் மேம்பாடு குறித்த பணிமனைகள் மற்றும் சேவை வழங்குவோரை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளில் திறன் மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து செயல்பட்டது.

 

நாள் 10

 

தேசிய ருர்பன் திட்டத்தின் கீழ், மூரங் ருர்பன் பகுதியில் சுற்றுலாத் திட்டங்களை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியது. ஹிமாச்சலப்பிரதேசத்தின் கின்னார் பகுதியில் யாத்திரை மற்றும் ஆன்மீக சுற்றுலா, சாகச சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

 

ருத்ரபிரயாக் பகுதியில் கேதார்நாத் விழாவை உத்தராகண்ட் மாநில அரசு நடத்தியது. அல்மோராவில் உள்ள ஜகேஷ்வர் ஆலயத்தில் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன.

 

நாள் 11

 

மத்தியப்பிரதேசத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உணவுத் திருவிழாக்கள், இயற்கை நடைபயணங்கள், ஊக்குவிப்புத் திட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை மாநில அரசு நடத்தியது. இடுக்கி மாவட்டத்தில் மாணவர்களுக்காக கட்டுரை எழுதுதல் மற்றும் ஓவியம் வரைதல் போட்டிகளை கேரள மாநில அரசு நடத்தியது. உதய்ப்பூரில் விளக்குத் திருவிழாவுக்கு ராஜஸ்தான் மாநில அரசு ஏற்பாடு செய்தது.

 

கயா நகரில் தூய்மை குறித்த விழிப்புணர்வு, கலாச்சார மாலை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை பீகார் மாநில அரசு நடத்தியது. வைஷாலியில் சுற்றுலாத் துறையின் முக்கியத்துவம் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பு குறித்த சொற்பொழிவு மற்றும் விவாதங்களுக்காக இளைஞர் நாடாளுமன்றத்தை நேரு இளைஞர் மையம் நடத்தியது.

நாள் 12

 

கலாச்சார மாலை, ஊக்குவிப்புத் திட்டங்கள், போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை கேரளா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகள் நடத்தின.

 

நாள் 13

 

13-வது நாளின் முக்கியத்துவமாக, சுற்றுலாத் துறையில் முன்னாள் ராணுவ வீரர்களின் சேவைகளைப் பயன்படுத்துவது குறித்த பணிமனை நடத்தப்பட்டது. இதனை முன்னாள் ராணுவ வீரர்கள் நலத் துறை, போக்குவரத்து வர்த்தக சங்கங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து சுற்றுலா அமைச்சகம் நடத்தியது.

 

கலாச்சார அமைச்சகமும், கலைக்கான இந்திராகாந்தி தேசிய மையமும் இணைந்து சென்னையில் உள்ள லலித் கலா அகாடமியில் குறை ஒன்றும் இல்லை, எம்எஸ்: இசையில் ஒரு வாழ்க்கை என்ற தலைப்பில் கண்காட்சியை நடத்தின.

 

நாள் 14

குஜராத் மாநில அரசு, மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது. குஜராத்தின் சுற்றுலா இடங்கள் குறித்த கண்காட்சி ரிவர் பிரன்ட் மற்றும் கன்காரியா, ஆமதாபாத் மற்றும் போர்பந்தர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன. வனவிலங்குகள் வாழ்க்கை குறித்த கண்காட்சி துவாரகா மற்றும் சோம்நாத்திலும், கடற்கரை சுற்றுலா குறித்த கண்காட்சி, சபுத்தாரா-விலும் நடத்தப்பட்டன. ஹரித்துவார் படித்துறைகளில் தேவ் தீபாவளி நிகழ்ச்சியை உத்தராகண்ட் மாநில அரசு நடத்தியது. அயோத்திக்கு ராமர் திரும்பி வந்ததை நினைவுகூரும் வகையில், தீபாவளி நிகழ்ச்சியை உத்தரப்பிரதேச மாநில அரசு நடத்தியது.

 

நாள் 16

சுற்றுலாத் திருவிழாவின் 16-வது நாளில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக, அய்பாக் ருர்பன் தொகுப்பில் சுற்றுலாத் திட்டங்களை ஊரக வளர்ச்சி அமைச்சகம் தொடங்கியது. இதன்படி, மிசோராமின் அய்ஸ்வால் நகரில் சைக்கிள் சவாரிக்கு பாதை அமைத்தல், 3 கிலோமீட்டர் தூர சாலை மற்றும் நடைபாதைகள் கட்டுமானம், வரலாற்றுப்பூர்வமான பகுதிகளுக்கு அழகூட்டுதல், ஆர்க்கிட் மலர் ஆய்வு மையம் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். அய்ஸ்வால் நகரில் மற்ற நிகழ்ச்சிகளாக, உள்ளூர் சமூகத்தினரிடையே விழிப்புணர்வுத் திட்டம், குழந்தைகளுக்கான ஓவியம் வரைதல் போட்டி, கலாச்சார கண்காட்சி, சுற்றுச்சூழல் பாதை ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

 

நாள் 17

கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து ஹம்பி நகரில் கலாச்சார மாலை நிகழ்ச்சியை சுற்றுலா அமைச்சகம் நடத்தியது. மணிப்பூர் மாநில அரசுடன் வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சி அமைச்சகம் இணைந்து, இம்பால் மாலை, கங்லா மோட்-டில் படகு சவாரி, பொம்மை சந்தை, உணவுக் கடைகள், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் கடை ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்தன.

 

ஜார்க்கண்ட் மாநில அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தது. அதாவது, கலாச்சாரத் திட்டம், ஜார்க்கண்ட் மாநில சுற்றுலாப் பகுதிகள் குறித்த ஓவியம் வரைதல் போட்டி, சுற்றுலா குறித்து கேள்வி பதில் நிகழ்ச்சிகள், சுற்றுலாப் பகுதிகளில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், புகைப்படம் எடுத்தல் போட்டி ஆகியவை ஹுண்ட்ரு பகுதியில் நடத்தப்பட்டன.

 

நாள் 18

 

பல்வேறு நிகழ்ச்சிகளை பீகார் மாநில அரசு நடத்தியது. அதாவது, பீகார் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையிலான கலாச்சார மாலை, சுற்றுலாப் பகுதிகளில் தூய்மை விழிப்புணர்வுத் திட்டங்கள், சுற்றுலா தொடர்பான கருத்துக்கள் அடிப்படையில் ஓவியம் வரைதல் போட்டிகள், வினாடி வினா நிகழ்ச்சிகள் ஆகியவை பாவாபுரி மற்றும் நாளந்தா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டன. உத்தராகண்ட் மாநில அரசு, பித்தோராகர் பகுதியில் ஏரோ விளையாட்டு (Aerosports) நிகழ்ச்சிகளை நடத்தியது. மத்தியப்பிரதேச மாநில அரசு, குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் (Children’s theatre),  குழுப் பாடல் நிகழ்ச்சி, மரங்கள் மற்றும் விலங்குகள் குறித்த ஓவியம் வரைதல் போட்டி ஆகியவற்றை பெஞ்ச் தேசிய பூங்காவில் நடத்தியது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளுக்கு கேரள மாநில அரசு ஏற்பாடு செய்தது.

 

நாள் 19

 

தொழில் துறை கொள்கை மற்றும் சுற்றுலாத் துறையின் கீழ் உள்ள இந்தியாவில் முதலீடு பிரிவு சார்பில் சுற்றுலாத் துறை குறித்த தலைமை செயல் அதிகாரிகளின் வட்ட மேஜை கருத்தரங்கு நடத்தப்பட்டது.

 

21 நாள் சுற்றுலாத் திருவிழாவின் மாபெரும் இறுதிச்சுற்றான, மூன்று நாள் நிகழ்ச்சி, புதுதில்லியில் உள்ள ராஜபாதை புல்வெளியில் (ரஃபி மார்க் மற்றும் ஜன்பத் இடையே) அக்டோபர் 23 முதல் அக்டோபர் 25 வரை நடத்தப்பட்டது.

 

புதுதில்லியில் உள்ள ராஜபாதை புல்வெளியில் சுற்றுலாத் திருவிழா மாபெரும் இறுதிச்சுற்றுநிகழ்ச்சியை மத்திய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் இன்று தொடங்கிவைத்தார். தொடக்க விழாவுக்கு சுற்றுலாத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.கே.ஜே.அல்போன்ஸ் தலைமை வகித்தார்.

 

 

நாள் 20

 

புதுதில்லியில் உள்ள ராஜபாதை புல்வெளியில் நடைபெற்ற சுற்றுலா திருவிழா மாபெரும் இறுதிச்சுற்றுநிகழ்ச்சியின் 2-ம் நாளில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.நிதின் கட்காரி பார்வையிட்டார். அப்போது, சுற்றுலாத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.கே.ஜே.அல்போன்ஸ் உடனிருந்தார்.

 

மாபெரும் இறுதிச்சுற்றின் இரண்டாம் நாளில் நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலிருந்து குழுக்கள் கலந்துகொண்டு வியக்கவைக்கும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தின. மதிய நேரத்தில், ஜக்காலிஜ் (Jaggalige) நிகழ்ச்சியை கர்நாடகா நடத்தியது; ராஸ் லீலா, தோல் சோலோன் (Ras Lila, Dhol Cholon) ஆகியவற்றை மணிப்பூர் வெளிப்படுத்தியது; பூபாலி தே பைரவி-யை (Bhupali te Bhairavi) மகாராஷ்டிரா வெளிப்படுத்தியது; சத்தீஷ்கர் மாநிலத்தின் சார்பில் பண்ட்வானி (Pandwani) நடத்தப்பட்டது; உத்தரப்பிரதேச கலைஞர்கள் அவாதி/போஜ்புரி லோக் கீத் (Awadhi/Bhojpuri Lok Geet) நடத்திக் காட்டினர்; பங்ரா-வை (Bhangra) பஞ்சாப் நிகழ்த்தியது. மாலை நேரத்தில், ஸ்வதேஷ் தர்சனுக்கான பாதையோர வசதிகளான ராமாயணா மற்றும் புத்த சுற்றுப் பயணம் தொடங்கப்பட்டன. பிரசாந்த் மற்றும் நிஷாந்த் மாலிக் (மாலிக் சகோதரர்கள்) “துருபத் வாய்ப்பாட்டை” (“Dhrupad Vocal”) நடத்தினர். வடக்கு மண்டல கலாச்சார மையம் சார்பில் நடன கலாச்சார நிகழ்ச்சி நடத்திக் காட்டப்பட்டது.

 

நாள் 21

புதுதில்லியில் ராஜபாதை புல்வெளியில் நடத்தப்பட்ட சுற்றுலாத்  திருவிழாவின் அதிகாரப்பூர்வ நிறைவு நிகழ்ச்சியில் மத்திய நிதி மற்றும் நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் திரு.அருண் ஜெட்லி, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது, சுற்றுலாத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.கே.ஜே.அல்போன்ஸ் உடனிருந்தார்.

 

பிற்பகலில், பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், தங்களது கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டின. அதாவது, பிகு நிகழ்ச்சியை அஸ்ஸாம் வழங்கியது; டாமன் மற்றும் டையூ சார்பில் மச்சி நடனம் நடத்தப்பட்டது; ஆந்திரப்பிரதேச மாநிலம், குச்சிப்புடி நடனத்தை நடத்தியது; ஜாரி மற்றும் கூமரை ராஜஸ்தான் வெளிப்படுத்தியது; தமிழ்நாட்டின் சார்பில் கரகாட்டம் தப்பாட்டம் நிகழ்த்திக் காட்டப்பட்டது; ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சார்பில் காஷ்மீரி நடனங்கள் நிகழ்த்தப்பட்டன; தெலுங்கானா மாநிலத்தின் சார்பில் பெரினி செய்துகாண்பிக்கப்பட்டது. “பனாரஸ் கரானாவின் புரப் ஆங் காயகி”-யை திருமதி சவீதா தேவி நடத்தினார். இதனைத் தொடர்ந்து, கலாச்சார நடன நிகழ்ச்சியை வடக்கு மண்ட கலாச்சார மையம் வழங்கியது.

*****


(Release ID: 1507735) Visitor Counter : 882
Read this release in: English