மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தனியார் பல்கலைக்கழகங்களை கண்காணித்தல்
Posted On:
31 JUL 2017 3:50PM by PIB Chennai
நாட்டிலிருக்கும் அனைத்து உயர் கல்வி (தொழில்நுட்பம் சாராத) நிறுவனங்களுக்கும், தர அங்கீகாரம் அளிக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பாக தேசிய மதிப்பீடு மற்றும் தரஅங்கீகார கவுன்சில் (NAAC) இருக்கிறது. தரஅங்கீகாரம் பெறுவதற்கான நடைமுறைப்படி, நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்கள், தேசிய மதிப்பீடு மற்றும் தர கவுன்சிலுக்கு(NAAC), குறிப்பிட்ட படிவத்தில் தேவையான விவரங்களையும் தகவல்களையும் சமர்ப்பிக்கின்றன. NAACயால் நியமிக்கப்படும் ஒரு சக குழுவினால் இந்த விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அதன்பின் நிறுவனங்களின் தர அங்கீகாரத்திற்கு NAACக்கு அறிக்கை அளிக்கப்படுகிறது. சில நேரங்களில், NAAC, அதன் ஆய்வுக்குழு மூலமாகவோ அல்லது அதற்கு வரும் புகார்கள் மற்றும் தொடர்புடையோர்கள் தகவல் அறியும் உரிமையின் மூலம் கேட்கும் தகவல்கள் மூலமோ, பல்வேறு நிறுவனங்கள் தர உயர்நிலையை பெறுவதற்காக, தவறான விவரங்களை அளித்திருப்பதை கண்டறிந்திருக்கிறது. அந்த நிறுவனங்களின் இறுதி மதிப்பெண்களை சம்பந்தப்பட்ட மதிப்பீட்டுக் கூறுகளின் அடிப்படையில் முடிவு செய்வதற்குமுன், NAACஇன் ஆய்வுக்குழுவினால் இந்த புகார்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
தரஅங்கீகாரத்திற்காக, தவறான தகவல்களை நிறுவனங்கள் அளிப்பதை தவிர்ப்பதற்கு, NAAC பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுகிறது:
-
- நிறுவனங்கள், தங்களது இணையதளத்தில் NAAC க்கு வழங்கப்பட்ட தகவலை பதிவேற்றம் செய்ய வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது; தர அங்கீகாரத்திற்கான உரிய காலம் முடிவடையும் வரை, அவர்களது வலைத்தளத்தில் அந்தத் தகவல்களை நீக்காமல் வைத்திருக்க வேண்டும்; தொடர்புடையோர் அனைவரும் இந்த தகவலை அறிந்து கொள்வதற்கு வசதி செய்து தரவேண்டும்.
-
- மதிப்பீட்டிற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் வீடியோவாக எடுத்து அதனை NAACக்கு சமர்ப்பிக்க வேண்டும்; அதனை வலைப் பதிவேற்றம் செய்யவும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
- வந்திருக்கும் புகார்களைக் குறித்து ஆய்வு செய்திட, குறிப்பாக தர அங்கீகாரம் வழங்கப்பட்டதற்குப் பின் பெறப்பட்ட புகார்கள் குறித்து ஆய்ந்து தேவையான நடவடிக்கைகளை தொடங்குவதற்கு, புகார்கள் ஆய்வுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
- மதிப்பீடு மற்றும் தரஅங்கீகாரம் அளிப்பதற்கு, ஜூலை 2017 முதல், NAAC புதிய நடைமுறை ஒன்றைப் பின்பற்றுகிறது. கூடுதல் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி நிறுவனங்கள் அளிக்கும் விவரங்கள், சரிபார்ப்பு மற்றும் மதிப்பீடு செயல்முறைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த புதிய நடைமுறையில், தவறான விவரங்களை அளிக்கும் நிறுவனங்கள் மீது கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும்.
தனியார் பல்கலைக்கழகங்களின் செயல்திறனை கண்காணிப்பதற்காக ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை அமைக்கும் முன்மொழிவு எதுவும் அரசாங்கத்தின் பரிசீலணையில் இல்லை. தற்போது இயங்கி வரும் அனைத்து தனியார் பல்கலைக்கழகங்களும், அவை இயங்கும் மாநிலச் சட்டங்களின் அடிப்படையில் நிறுவப்பட்டவை. இந்தப் பல்கலைக் கழகங்கள், அந்தந்த மாநில அரசின் சட்டங்களாலும், 2003ம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக் குழு (யூ.ஜி.சி.) (தனியார் பல்கலைக்கழகங்களின் தரநிலைகளை நிறுவுதல் மற்றும் பராமரிப்பு) ஒழுங்குமுறை விதிகளாலும் நிர்வகிக்கப்பட்டு முறைப்படுத்தப்படுகின்றன. யூ.ஜி.சி.(நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்) ஒழுங்குமுறை விதிகள் 2016ஆல், தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் முறைப்படுத்தப்படுகின்றன.
ஒழுங்குமுறைவிதிகளின் படி, யுஜிசி இந்தப் பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆய்வு நடத்துகிறது. குறைபாடுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், சரி செய்யப்படுவதற்காக, அவை அந்தப் பல்கலைக்கழகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படும். இத்துடன், பார் கவுன்சில் ஆப் இந்தியா(BCI), இந்திய பல்மருத்துவக் கவுன்சில்(DCI), இந்திய செவிலியர் கவுன்சில் (INC), இந்திய மருத்துவக் கவுன்சில் (MCI), தேசிய ஆசிரியப் பயிற்சி கவுன்சில் (NCTE), பார்மசி கவுன்சில் ஆஃப் இந்தியா (PCI) போன்ற பல்வேறு தொழில்முறை ஒழுங்குமுறை கவுன்சில்களும், அந்தந்தப் பகுதியிலிருக்கும் பல்கலைக் கழகங்களை மதிப்பீட்டாய்வு செய்கின்றன. உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசை அரசாங்கத்தால் செய்யப்படுகிறது; இதற்கான, அடிப்படை செயல்திறன் குறியீடாக தேசிய நிறுவனங்களின் தரவரிசை கட்டமைப்பின் சட்டங்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே இந்த விவரங்களை தெரிவித்தார்.
(Release ID: 1507133)
Visitor Counter : 80