குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
துயர் துடைக்கும் கரங்களாக
ஹரிஜன் சேவா சங்கம் போன்ற அமைப்புகள் சேவை செய்கின்றன..!
-குடியரசு துணைத் தலைவர் பாராட்டு
Posted On:
17 OCT 2017 3:55PM by PIB Chennai
நன்கொடையாளர்கள், தனியார் பெருநிறுவனங்கள் மற்றும் சேவையாளர்களிடம் இருந்து பொருளுதவி, நிதியுதவிகளைப் பெற்று, ஹரிஜன் சேவா சங்கம் போன்ற அமைப்புகள், உதவி தேவைப்படும் நபர்களின் துயர் துடைக்கும் கரங்களாக சேவை செய்கின்றன என்று இந்தியக் குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கய்யா நாயுடு பாராட்டு தெரிவித்தார்.
இன்று தமிழக தலைநகர் சென்னையில் தக்கர் பாபா வித்யாலயாவில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட இந்திய குடியரசு துணைத் தலைவர், புதுப்பிக்கப்பட்ட தக்கர் பாபா சிலைக்கு திறப்பு விழா நடத்தினார். மேலும், நிர்மலா தேஷ்பாண்டே நிலையம் மகளிர் விடுதிக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித், மீன் வளத்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் திரு. டி. ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய குடியரசு துணைத் தலைவர், ‘இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த சகோதரி நிர்மலா தேஷ்பாண்டே, தன் வாழ்நாளின் கடைசி மூச்சு வரை காந்தியின் கொள்கைகளுக்காக பாடுபட்டார். அவர் பல்லாயிரக்கணக்கான இந்திய மக்களுக்கு மட்டுமின்றி, உலகிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தார். பூமிதான இயக்கத்தில் பங்கேற்று, 40,000 கிலோமீட்டர் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டு காந்திஜியின் கிராம சுவராஜ்யம் திட்டத்தைப் பரப்பினார். அவர் உண்மையான சமாதானத் தூதராகவும், இனவாத எதிர்ப்பாளராகவும் இருந்தார்’ என்று குறிப்பிட்டார்.
ஶ்ரீ கீதா பவன் அறக்கட்டளையின் மிகச்சிறந்த பங்களிப்புக்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார் குடியரசு துணைத் தலைவர். மேலும், நலத் திட்டங்களுக்கு உதவியவர்களுக்கு பாராட்டி, விருது வழங்கிய குடியரசு துணைத் தலைவர், அனைவரும் மகாத்மா காந்தியடிகள் பாதையில் சேவையை தொடரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பாரதப் பிரதமர் அறிமுகப்படுத்திய, தூய்மையான இந்தியா திட்டத்திற்கு ஹரிஜன் சேவா சங்கம் சிறந்த வகையில் பங்களிப்பு செய்தமைக்கு பாராட்டினார். மேலும், இந்த உன்னத இயக்கத்தில் உற்சாகமாக கலந்து கொண்டதற்கு தனது பாராட்டை குடியரசு துணைத் தலைவர் தெரிவித்துக் கொண்டார்.
*****
(Release ID: 1507131)
Visitor Counter : 156