குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

கர்நாடக இசையின் இணையற்ற சகாப்தம் டாக்டர் எம்.எஸ்.சுப்புலட்சுமி..!

பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் குடியரசு துணைத் தலைவர் புகழாரம்

Posted On: 17 OCT 2017 4:40PM by PIB Chennai

கர்நாடக இசையின் ஈடுஇணையற்ற சகாப்தமாக டாக்டர் எம்.எஸ்.சுப்புலட்சுமி திகழ்கிறார் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம்.வெங்கய்ய நாயுடு புகழாரம் சூட்டினார். அவர் இன்று, தமிழக தலைநகர் சென்னையில் நடைபெற்ற, டாக்டர் எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித், மீன் வளத்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் திரு. டி. ஜெயக்குமார், டாக்டர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்..

குடியரசு துணைத் தலைவர் பேசுகையில், ‘பல்லாண்டுகளாக இந்திய கர்நாடக இசையின் முகமாகத் திகழ்ந்த டாக்டர் எம்.எஸ். சுப்புலட்சுமியை, எம்.எஸ். அம்மா என்று அனைவரும் வாஞ்சையோடு அழைத்தார்கள். தமிழகம், தென்னிந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை அவர் பெற்றிருந்தார். அலங்காரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கர்நாடக இசையின் ஆத்மாவைத் தொட்டு, இசை பொக்கிஷத்தை பண்டிதர்கள், மேல்மட்டத்தினர் மட்டுமின்றி எளிய மக்களுக்கும் அன்போடும் அவர் வழங்கினார்என்று தெரிவித்தார்.

எவ்வித வேறுபாடுகளும் இல்லாத இசை உலகத்தின் உச்சத்திற்கு சென்றது மட்டுமின்றி, அவர் நம்மையும் உடன் அழைத்துச் சென்றார். ஐக்கிய நாடுகள் சபையில் அவர் பாடியபோது, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து நின்றன. அவருடைய இசைக்கு முன், ஜாதி, இனம் மற்றும் தேசிய வேறுபாடுகள் அனைத்தும் மறைந்து ஆனந்தம் மட்டுமே இருந்ததுஎன்றும் குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய, ‘வைஷ்ணவ ஜனதோபாடலைக் கேட்டு மகாத்மா காந்தி மெய் மறந்து நின்றதையும் குடியரசு துணைத் தலைவர் நினைவு கூர்ந்தார். தான் விரும்பும் பாடலை அவரால் பாடமுடியாது என்பதை மகாத்மா காந்தி அறிந்ததும், ‘வேறு ஒருவர் பாடலைக் கேட்பதைவிட, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் புரியாத வரிகளை ரசிப்பேன்என்று சொன்னார்..

கொள்கையில் எதிரும் புதிருமாக இருந்த ஜவஹர்லால் நேருவும், ராஜாஜியும்கூட, இவரது தேனினும் இனிய குரலை பாராட்டுவதில் ஒன்றுபட்டு நின்றார்கள். தவ வாழ்க்கை வாழ்ந்த புனித காஞ்சி பரமாச்சாரியாரும், இவரது இசைக்கு தப்பவில்லை என்றும் தெரிவித்தார் குடியரசு துணைத் தலைவர்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி கருணையின் உருவமாக இருந்ததால் அனைத்து மக்களாலும் மதிக்கப்பட்டார். அவர் ஒரு பாடகியாக மட்டுமின்றி நடிகையாகவும் புகழ் பெற்று விளங்கினார். பக்தமீரா, சாகுந்தலா போன்ற திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்றிருக்கிறார் எனவும் குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ‘எம்.எஸ்.சுப்புலட்சுமியிடம் ஒரு ஒளி அதாவது தெய்வீக ஒளி இருந்தது. தத்துவ ஞானியும், குடியரசுத் தலைவருமாக இருந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், தெய்வங்களின் முகத்தில் பிரகாசிக்கும் பிரம்ம தேஜஸ் எம்.எஸ்.சுப்புலட்சுமியிடம் இருந்தது என்று தெரிவித்ததை நினைவு கூர்ந்தார்.

கவிதை வரிகளுக்காக இந்தியாவின் கவிக்குயில் என்று டாக்டர் சரோஜினி நாயுடு போற்றப்படுவது போல், இசைக் குரலுக்கு இந்தியாவின் கவிக்குயில் டாக்டர் எம்.எஸ்.சுப்புலட்சுமி என்று பாராட்டினார் குடியரசு துணைத் தலைவர்.      



(Release ID: 1507130) Visitor Counter : 261


Read this release in: English