தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
நாட்டின் வீரர்களுக்கு தீபாவளி பரிசு
Posted On:
18 OCT 2017 4:12PM by PIB Chennai
ராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எப். , பி.எஸ்.எப்., பி.ஆர்.ஓ, ஐ.டி.பி.எப், உள்ளிட்ட துணை ராணுவப் படையினர் மற்றும் அதிகாரிகள் நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதற்காக தொலை தூரங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வீரர்களும், அதிகாரிகளும் பகல்,இரவு பாராமல்,கடினமான தட்ப,வெப்ப நிலைகளைப் பற்றிக் கவலைப்படாமல், சொந்த ஊரையும் ,குடும்பங்களையும் விட்டு விலகி கடமை ஆற்றி வருகின்றனர். அதனால் ஊரில் உள்ள குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளும் ஆவல் எப்போதும் அவர்களுக்கு உள்ளது. அவர்கள் பணி புரிந்துவரும் இடங்களில் தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத நிலையில், அவர்கள் பி.எஸ்.என்.எல் அளிக்கும் டி.எஸ்.பி.டி வசதியை வைத்தே குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியும்.
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஶ்ரீ மனோஜ் சின்ஹா, டி.எஸ்.பி.டி. வசதியைப் பயன்படுத்துவதால், அதிகாரிகளும் வீரர்களும் மாதாந்திர கட்டணமாக ரூ.500 –ம், நிமிடத்துக்கு ரூ.5 அழைப்புக் கட்டணமாகவும் செலுத்த வேண்டியுள்ளது என்றார். வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் தேவை மற்றும் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ,தீபாவளி நன்னாளில் அரசு மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது என்றார் அவர். தீபாவளி ( அக்டோபர் 19) முதல் டி.எஸ்.பி.டி.வசதியைப் பயன்படுத்த மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று திரு.சின்ஹா தெரிவித்துள்ளார். அதாவது, டி.எஸ்.பி.டி.க்கு தற்போது வசூலிக்கப்படும் ரூ.500 கட்டணம் இனி கிடையாது. அத்துடன் ,தற்போது நிமிடத்துக்கு வசூலிக்கப்படும் ரூ.5 அழைப்புக் கட்டணம் ரூ.1 ஆகக் குறைக்கப்படும்.
மத்திய அரசின் இந்த தீபாவளி பரிசின் மூலம் ,ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் தங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய கவலை இல்லாமல் பேசி மகிழலாம். இதை அறிவித்த அமைச்சர் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சிகரமான தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
(Release ID: 1506977)
Visitor Counter : 117