பிரதமர் அலுவலகம்

கோகா மற்றும் தஹேஜ் பகுதி இடையே முதற்கட்ட பயணிகள் போக்குவரத்துக்கு ரோரோ படகு சேவையை பிரதமர் தொடங்கி வைத்து பயணித்தார்

Posted On: 22 OCT 2017 6:46PM by PIB Chennai

கோகா மற்றும் தஹேஜ் பகுதி இடையேயான பயணிகள் போக்குவரத்துக்கு ரோரோ படகு சேவையின் முதற்கட்ட போக்குவரத்தைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். சவுராஷ்டிராவில் உள்ள கோகா மற்றும் தெற்கு குஜராத்தில் உள்ள தஹேஜ் பகுதிக்கு சாலை வழியாக செல்ல ஏழு முதல் எட்டு மணி நேரம் தேவைப்படும். பயணிகள் போக்குவரத்துக்கு படகு சேவை அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் இது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. இன்று தொடங்கப்பட்டுள்ள முதற்கட்ட போக்குவரத்து, பயணிகளுக்கு பயன் அளிக்கும். முழுமையாக செயல்படுத்திய பின், இந்த படகின் மூலம் வாகனங்களையும் எடுத்துச்செல்ல முடியும்.

ஸ்ரீ பாவ்நகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மிக முக்கியமான கால்நடை தீவன தயாரிப்பு மையத்தை பிரதமர் துவக்கி வைத்தார்.

பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர், ”குஜராத்தில் உங்கள் அனைவரையும் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன்” என்றார். கோகா மற்றும் தஹேஜ் பகுதி இடையேயான பயணிகள் படகு போக்குவரத்தின் தொடக்க விழா மொத்த நாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உள்ளது. இந்த படகு வசதி பல்வேறு வகைகளில் முதன் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், குஜராத் மக்களின் கனவை இது நனவாக்கி உள்ளது என்றார்.

மனித நாகரீகத்தின் வரலாறு நதிகள் மற்றும் கடல்சார் வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. லோதலின் நிலமான குஜராத்தில், நாம் எப்படி நமது வரலாற்றை மறக்க முடியும் என்று பிரதமர் கூறினார். இந்த திட்டம் நமது சிறப்பான கடந்த காலத்தை மீட்டு, சவுராஷ்டிராவையும் தெற்கு குஜராத்தையும் இணைக்கும் என்றார். இந்த மண்டலங்களின் மக்கள், அடிக்கடி பயணம் மேற்கொள்கின்றனர். இந்த படகு போக்குவரத்து நேரத்தையும் எரிபொருளையும் மிச்சப்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.

கடந்த மூன்று ஆண்டுகளில், குஜராத்தின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குஜராத் நீண்ட கடல்வழி கொண்டுள்ளது. இது நமக்கு அளித்துள்ள வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். கடல் சார் உள்கட்டமைப்பினை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த படகு வசதியும் ஒரு வழியுடன் நிறுத்தப்படாது. மற்ற இடங்களும் படகு வசதி மூலம் இணைக்கப்படும். போக்குவரத்து துறையை ஒருங்கிணைத்து அதி நவீன மையமாக மாற்றுவதே மத்திய அரசின் இலட்சியமாகும் என்று பிரதமர் கூறினார்.

கோகா மற்றும் தஹேஜ் பகுதி இடையேயான முதல் படகு பயணத்தை பிரதமர் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது, கப்பல் மற்றும் படகு சேவை குறித்து பிரதமரிடம் விவரிக்கப்பட்டது. படகில் தன்னுடன் பயணித்த, மாற்று திறனாளி குழந்தைகளிடம் பிரதமர் கலந்துரையாடினார்.

தஹேஜ் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், செழிப்புக்கு வழிவகுக்கும் துறைமுகங்களை அமைப்பதே அரசின் கனவாகும் என்றார். சரியான இணைப்பு வசதி இல்லையென்றால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும். அதனால், அரசு துறைமுக உள்கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்துகிறது என்று பிரதமர் கூறினார்.

அரசு கடல்சார் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது புதிய இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர் கூறினார்.
 

***



(Release ID: 1506805) Visitor Counter : 176


Read this release in: English