பிரதமர் அலுவலகம்
குரேஸ் பள்ளத்தாக்கில், இந்திய ராணுவம் மற்றும் பி.எஸ்.எப். வீரர்களுடன் பிரதமர் தீபாவளி கொண்டாடினார்
Posted On:
19 OCT 2017 2:33PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே குரேஸ் பள்ளத்தாக்கில், இந்திய ராணுவம் மற்றும் பி.எஸ்.எப். வீரர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார் அவர் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் அங்கிருந்தார். எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் தொடர்ந்து நான்காவது ஆண்டாக பிரதமர் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி வருகிறார்.
வீரர்களுக்கு பிரதமர் இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர், மற்றவர்களைப் போல தாமும் தனது குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாட விரும்புவதாகத் தெரிவித்தார். அதனால் `தனது குடும்பத்தினராகக்' கருதும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதற்கு வந்திருப்பதாக அவர் கூறினார்.
ராணுவப் படை வீரர்களுடன் நேரத்தை செலவிடும் போது தமக்கு புதிய சக்தி கிடைப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். கடுமையான பருவநிலைகளிலும் ராணுவ வீரர்கள் ஆற்றும் தவம் மற்றும் செய்யும் தியாகத்தைப் பாராட்டுவதாக அவர் கூறினார்.
ராணுவ வீரர்கள் யோகா செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதாக தமக்குச் சொல்லப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். நிச்சயமாக இது அவர்களுடைய திறன்களை மேம்படுத்தி, அமைதியான உணர்வைத் தரும் என்று அவர் குறிப்பிட்டார்.
தங்களுடைய சேவைக்காலம் முடிந்து ராணுவ சேவையில் இருந்து ஓய்வுபெறும் வீரர்கள், அதன்பிறகு அருமையான யோகா பயிற்சியாளர்களாக மாறலாம் என்றும் பிரதமர் கூறினார்.
நாட்டின் 75வது சுதந்திர ஆண்டான 2022 ஆம் ஆண்டுக்கு ஒவ்வொரு இந்தியக் குடிமக்களும் புதிய உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி பிரதமர் பேசினார். ராணுவ வீரர்களின் வழக்கமான பணிகளும் கடமைகளும் எளிதானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும் வகையில் புதிய சிந்தனைகளை உருவாக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். புதிய சிந்தனைகள் எந்த அளவுக்கு சிறப்பாக அங்கீகரிக்கப்பட்டு, ராணுவ தினம், கடற்படை தினம் மற்றும் விமானப்படை தினங்களில் விருதுகள் அளிக்கப்படுகின்றன என்பதைப் பற்றி பிரதமர் குறிப்பிட்டார்.
சாத்தியமான அனைத்து வகைகளிலும் ராணுவத்தினரின் நலன் மற்றும் நல்வாழ்வுக்கான அனைத்தையும் செய்து தருவதற்கு மத்திய அரசு உறுதிபூண்டிருக்கிறது என்று அவர் கூறினார். பல பத்தாண்டுகளாக நிலுவையில் இருந்த, ஒரு பதவி அந்தஸ்தில் இருந்து ஓய்வுபெற்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம், என்ற திட்டம் இப்போது அமல் செய்யப்பட்டிருப்பதை அவர் நினைவுபடுத்தினார்.
ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் பின்வருமாறு எழுதியுள்ளார் :
``நேசத்துக்கு உரியவர்களை விட்டு வெகுதூரம் வந்து, தேசத்தின் எல்லையில் தாய்மண்ணைப் பாதுகாத்து, தியாகம் என்ற மிக உயர்ந்த பாரம்பரியத்தைக் காட்டும் அனைத்து ராணுவ வீரர்களும் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளச் சின்னங்களாக இருக்கிறார்கள்.
தீபாவளிப் பண்டிகை சமயத்தை உங்களுடன் கழிப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இந்த திருவிழா சமயத்தில், எல்லையில் தைரியமான வீரர்கள் இருப்பது, நம்பிக்கையின் ஒளியை ஏற்றுவதாக இருக்கிறது. கோடிக்கணக்கான இந்தியர்களிடம் புதிய சக்தியை அது உருவாக்குகிறது.
``புதிய இந்தியா'' என்ற கனவை நனவாக்குவதில், நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவதற்கு இது பொன்னான வாய்ப்பு. ராணுவமும் இதில் ஓர் அங்கமாக இருக்கிறது.
தீபாவளி நன்னாளில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.''
****
(Release ID: 1506598)
Visitor Counter : 147