பிரதமர் அலுவலகம்

பீகார் மோகமாவில் “நமாமி கங்கா” திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குமான அடிக்கற்களை நாட்டி பிரதமர் ஆற்றிய பேருரையின் தமிழ் வடிவம்

Posted On: 14 OCT 2017 5:35PM by PIB Chennai

“பாரத் மாதாகீ ஜெய்” (இந்தியத் தாய்க்கு வெற்றி) - “பாரத் மாதாகீ ஜெய்” (இந்தியத் தாய்க்கு வெற்றி).

இங்கு ஏராளமாகக் கூடியுள்ள எனது அன்பான சகோதர சகோதரிகளே,

மோகாமா நகர மக்களுக்கு என் மரியாதைகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பரசுராமர் தோன்றிய இந்தப் புனித மண்ணைப் பெரிதும் மதிக்கிறேன். மோகாமா நகருக்கு வருகை புரிந்தது எனது பாக்கியம்.

நாடு தீபாவளித் திருநாளைக் கொண்டாட நாடே தயாராகிவிட்டது. அதைப் போல் “சத் பூஜை” விழாவுக்கான ஏற்பாடுகளும் தயாராகி வருகின்றன. தீபாவளித் திருநாள் மற்றும் சத் பூஜையை முன்னிட்டு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புனிதத் திருநாளை ஒட்டி, சுமார் ரூ. 4,000 கோடி மதிப்பிலான “பரிசுகள்” பீகார் மாநிலத்திற்குத் தரப்பட்டுள்ளன.

சிறிது நேரத்திற்கு முன்புதான், மத்திய அரசு எத்தனை சாலைத் திட்டங்களையும், நெடுஞ்சாலைத்  திட்டங்களையும் தொடங்கியுள்ளது என்பதை திரு. நிதின் கட்கரி விவரித்தார். அந்த விவரிப்பு மிக நீண்டது. ஆனால், பீகார் மாநிலத்திற்கு வளம் சேர்க்கும் வகையில் குறுகிய காலத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது கண்டு நீங்களே வியப்படைவீர்கள்.

மத்திய அரசின் திட்டங்கள் நிறைவேற அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு அளித்து வரும் மாநில முதலமைச்சர் நிதீஷ்ஜிக்கும் அவரது அனைத்து சகாக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படும்போதெல்லாம் அவர்கள் (மாநில அரசு) அவற்றைத் தீர்த்துவைக்கிறார்கள். பீகார் மாநிலத்தின் கனவுகளை நிறைவேற்றுவதில்   ஒரு வகையில் மத்திய அரசும் மாநில அரசும் தோளோடு தோள்நின்று செயல்படுகின்றன. அதன் பலன்களை நீங்களே பார்ப்பீர்கள்.

நிதீஷ்ஜி மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பதால் பல்வேறு விஷயங்களைச் சுட்டிக் காட்டினார்.  ஆனால், இதே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். எனவே, உங்களது மக்களுடன் உணர்வுபூர்மான பந்தம் இருப்பது இயற்கையே. அந்த உணர்வுள்ள பந்தம் இருப்பதால், இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்யவேண்டும் என்ற பதைப்பு இருக்கிறது.  அவரது மன உணர்வுகளை நான் மதிக்கிறேன். அத்துடன், பீகார் மாநிலத்தின் கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் ஈடேற மத்திய அரசு அவருடன் தோளோடு தோள் நின்று நடைபோடும். மேலும், இது மாநில வளர்ச்சிக்கான பயணத்தில் புதிய எல்லையை அடையும்.

சகோதர, சகோதரிகளே,  இன்று இந்த மொகாமா மண்ணுக்கு வருவதற்கான வாய்ப்பைப் பெற்றேன். இங்கு வருவதற்கு முன் இன்று அடிக்கல் நாட்டப்பட்ட பாலத்தின் வடிவமைப்பை முதலமைச்சர் நிதீஷ்குமார்ஜி எனக்குக் காட்டினார். மாதிரியைக் காட்டினார். இத்தகைய பாலம் ஒட்டுமொத்த பீகார் மாநிலத்தின் பிரதான அடையாளமாகத் திகழும். மேலும், இந்தப் பாலம் பீகார் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சர் டாக்டர் ஸ்ரீ கிருஷ்ணாவின் நகரான பெகுசராய் நகரையும் மாநிலத் தலைநகரான பாட்னாவையு் இணைக்கும். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, உரத் தொழிற்சாலை, அனல்மின் நிலையம் மற்றும் பரோனியில் உள்ள பால் பண்ணை ஆகியவற்றை நிறுவியதன் மூலம் பகுசராயை தொழில்நகரமாக மாற்றிய  ஸ்ரீ கிருஷ்ணாவை இன்று கூட தலைவணங்குகிறேன்.

தேசிய கவிஞர் தின்கர்ஜியின் இளமைப் பருவத்தில் அவருக்கு விழுமியங்களை உணர்த்திய கல்விக் ஆலயத்துக்குச் சில நூறு மீட்டர்கள் தொலைவில் உள்ள இடத்திற்கு இன்று வந்துள்ளேன். தின்கரின் உணர்வுகள் இன்றும் நமக்கு உத்வேகம் ஊட்டுகின்றன. அந்த உணர்வுகள் குருட்டு நம்பிக்கையிலிருந்து நமக்கு விடுதலைப் பாதையைக் காட்டுகின்றன. ஒடுக்கப்பட்டவர்களோ, துன்பப்படுபவர்களோ, சுரண்டப்படுவோரோ, ஏழைகளோ, எல்லாவற்றையும் பறிகொடுத்தவர்களோ, கிராமத்தினரோ விவசாயிகளோ தொழிலாளர்களோ தின்கர்ஜி வெளிப்படுத்திய உணர்வுகளை அறிந்ததால், அவர்களை மதிக்க வேண்டும் என்ற உத்வேகதத்தைப்பெறுகிறோம். இந்த மண்தான் தின்கர்ஜியைத் தோற்றுவித்தது. தின்கர் கூறினார்:

‘Arti Liye To Kise Dhoondhta Hai Moorkh, Andh-Shraddha Ke Khilaf Chot Panhuchate The’

‘Arti Liye To Kise Dhoondhta Hai Moorkh, Mandiro, Raj Prasado Mein, Tahkhano Mein’

‘Are Devata Kanhi Sadko Par Gitti Tod Rahe, Devata Milenge Kheto Mein, Khalihano Mein’.

இன்று தொடங்கப்படும் திட்டங்களுக்காகக் கற்களை உடைக்கும் தொழிலாளர்கள் நமது அதிர்ஷ்டத்தைச் செதுக்கும் கடவுளர் ஆவர். தின்கர்ஜியின் கனவுகளை நனவாக்கும் முக்கிய நடவடிக்கையை இந்திய அரசு எடுத்து வருகிறது.

சகோதர, சகோதரிகளே, இந்த மண்தான் பகவான் பரசுராமர் தவம் இருந்த இடம். கங்கா நதியின் கரையில் அமைந்துள்ள புனித சிமரியா கரையின் சிறந்த வரலாற்றை யாராலும் மறக்க முடியாது. அங்க தேசம், மகத தேசம், மிதிலை தேசம் ஆகிய மூன்று நாடுகளின் சங்கமமாக இந்த இடம் அமைந்திருந்தது. வாய்ப்பு கிடைத்தபோது, இந்தப் புனிதமான சிமரியா கரையை மிகுந்த மரியாதையுடன் தலைதாழ்த்தி வணங்குகிறேன். இந்த இடம்தான் தீரம் மிக்க பாபா சவுஹர்மாலின் மண் ஆகும். இந்த இடத்திற்குச் சிறிது தொலைவில் ஆண்டுதோறும் சவுஹர்மாலின் நினைவாக கண்காட்சி நடத்தப்படுகிறது. இங்கு ஏராளமானோர் குவிகிறார்கள். நானும் தலைதாழ்த்தி இந்தப் புனித மண்ணை வணங்குகிறேன்.

எனது அருமை பீகார் மாநில சகோதர, சகோதரிகளே, நான் பார்த்த வரையில், எங்கு கண்டாலும் மக்களின் வெள்ளம்தான். இந்த விழா நடைபெறும் கொட்டகைக்கு உள்ளே இருப்பவர்களை விட வெளியே இரண்டு, மூன்று மடங்கு பேர் இருக்கிறார்கள். கடும் வெயிலில் இருக்கிறார்கள். மேலும், நீண்ட நேரம் அவர்கள் வெயிலில்தான் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு வாடினாலும் பெரிய அளவில் அவர்கள் எனக்கு ஆசி வழங்க இங்கே குவிந்திருக்கிறார்கள். உங்களைத் தலைதாழ்த்தி வணங்குகிறேன். உங்களை வரவேற்கிறேன்.

எனினும், என் அன்பு பீகார் மாநில சகோதர சகோதரிகளே, இந்திய அரசு், மாநில அரசும் மக்களாகிய நீங்கள் படும் கஷ்டங்கள் வீணாவதற்கு அனுமதிக்காது என்பதை உறுதிபடக் கூறுகிறேன்.

நாடு பிற்போக்கான பாதையில் செல்வதற்குக் காரணமான சிந்தனை உடையவர்களும் நம் நாட்டில்  இருக்கிறார்கள்.

சில வகையான அரசியல்வாதிகளைப் பற்றி நான் படித்திருக்கிறேன். யாராவது சாலை அமைப்பதைப் பற்றிப் பேசினால் உடனே, “சாலை அமைப்பதற்கான என்ன தேவை? கார் வைத்திருப்போருக்குத்தான் சாலைகள் தேவை, நமக்கு எதற்காகத் தேவை?” என்று பேசுவார்கள்.

இத்தகைய எதிர்மறைச் சிந்தனை உள்ள மக்கள் நாட்டைப் பாழாக்கியதை நாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இன்று, சாலை இல்லாத ஒரு கிராமத்துக்கு நீங்கள் பயணம் செய்தால், புகார் வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னைச் சந்தித்து, பிரதம மந்திரி கிராமச் சாலை வசதித் திட்டத்தின் கீழ் (Pradhanmantri Gram Sadak Yojna) தங்களது இடத்தில் சில சாலைகள் அமைக்கப்படவில்லை என்றும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கும்படியும் என்னிடம் கூறுகிறார்கள். கிராமங்களிலிருந்து மக்கள் என்னை வந்து சந்திக்கும்போதெல்லாம் பிரதம மந்திரி கிராமப்புறச் சாலை வசதித் திட்டத்தின் கீழ் சாலைகளை அமைக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றனர்.

சகோதர சகோதரிகளே, கடந்த மூன்று ஆண்டுகளில் நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம். பணிகளை அதிவேகப்படுத்தியுள்ளோம். அதனால், முன்பு எப்படி சாலைகளை அமைப்போமோ அதைவிட இரு மடங்கு சாலைகளை வெற்றிகரமாக அமைத்திருக்கிறோம். அதனால்தான், கிராமப்புற வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில், சாலைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனினும், கிராமப்புறச் சாலைகள் மட்டும் போதாது. அதிக அளவில் உள்ள நமது பொருளாதார மையங்களை நாம் இணைக்க வேண்டும். பொருளாதார மையங்கள் வளர்ச்சிக்கான மையங்களாகும். அந்த இடங்களில் பொருளாதாரம் தழைத்தோங்குகிறது. அத்துடன், இந்த இடங்களை உள்ளூர்ப் பகுதிகளுடனும் சாலைகளின் மூலம் இணைக்க வேண்டியிருக்கிறது.

இன்று, அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் பல ஆயிரம் கோடிகள் மதிப்பிலானவை. இந்தச் சாலைத் திட்டங்கள் ஏதோ வாகனங்கள் போய்வருவதற்காக அமைக்கப்பட்டவை அல்ல. அந்த இடத்தின் பொருளாதாரத்தை மாற்றுவதற்காக அச்சாலைகள் அமைக்கப்படுகின்றன. சாலைகளின் மூலம் வளத்தை அடைவதற்கும் அப்பகுதியை வளமானதாக மாற்றுவதற்கும் மேற்கொள்ளும் முயற்சிதான் இது.

சகோதர, சகோதரிகளே, நமது வாழ்க்கை முறைகள் கங்கையைச் சார்ந்து இருக்கின்றன.  கங்கைத் தாய் மட்டும் இல்லாதிருந்தால் இன்று என்ன மோசமான நிலை ஏற்பட்டிருக்கும் ! இருந்தாலும், கங்கையைப் பாதுகாக்க நாம் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவேயில்லை. அலட்சியமாக இருந்துவிட்டோம். கங்கையைப் பாதுகாப்பது, நமது எதிர்காலத் தலைமுறைகளைக் காப்பாற்றுவதற்குச் சமம். கங்கை நதியை நாம் தூய்மைப்படுத்தினால், அதன் நீரோட்டத்தை யாராலும் தடுக்க முடியாது. அதனால்தான், அரசு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழித்து கங்கையைத் தூய்மையாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இது வெறும் நதியின் பெயர் அல்ல. எல்லா நதிகளுக்கும் இதே போன்ற மரியாதை தரும் உணர்வுகளை வளர்த்துக் கொள்வோம். நதிகளைப் பாதுகாக்கும் முன்முயற்சிகள் எடுத்துக் கொள்ளப்படும். இந்தியாவின் எல்லா நதிகளையும் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.  இந்தியாவில் எதிர்காலத்தில் தண்ணீர்ப் பிரச்சினையைத் தவிர்க்க வேண்டுமானால், இதுதான் ஒரே வழி. இதை மிகுந்த அக்கறையுடன் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால்தான், எல்லா மாநிலங்களிலும் தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டது. கங்கோத்ரி முதல் வங்கக் கடல் வரையிலும் இந்த இயக்கத்துடன் தொடர்புள்ளதால் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கங்கை மாசுபடக் கூடாது என்ற பொறுப்பிலிருந்து விலகக் கூடாது என்பதற்கே முதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்நதியில் கழிவுநீர் கலப்பதையும் ரசாயனக் கழிவுகள் சேருவதையும் தடுப்பதற்கான பிரசாரம் தொடங்கப்பட்டது. இன்று பிகாரில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கற்கள் ஒரே சமயத்தில் நாட்டப்படுகின்றன. ஆகையால், வரும் காலங்களில் நாம் கங்கைத் தாயை அவளது தெய்வீகத் தன்மையைப் போற்றும் நிலை ஏற்படும். நமது கங்கைத் தாய் எப்படி இருக்க வேண்டும் என்று கனவு காண்கிறோமோ அப்படி அமைந்தால், நமது சத் பூஜையில் பெருமகிழ்ச்சி ஏற்படும். வித்தியாசமான தெய்வீக உணர்வும் ஏற்படும்.

சகோதர, சகோதரிகளே, கடந்த சில நாட்களாக இந்திய ரயில்வே துறை கிழக்கு உத்தரப் பிரதேசம், பீகார் மக்களுக்காக முக்கியமான ரயில் போக்குவரத்தைத் தொடங்கியுள்ளது. தீபாவளி, சத் பூஜை ஆகிய விழாக்களின்போது, அது மகத்தான பலனைத் தரும். எக்ஸ்பிரஸ் மும்பையிலிருந்து கோரக்பூர் செல்லும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்தான் நாட்டின் முதலாவது ஏழைகளுக்கான எக்ஸ்பிரஸ் ரயிலாகும். சூரத்திலிருந்து பாட்னா ஜெயநகர் வரை செல்லும் இரண்டாவது அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயிலை சூரத் நகரில் ஒரு வாரத்துக்கு முன்புதான் கொடியசைத்து தொடங்கி வைத்தேன். இதன் மூலம் நாட்டின் பரம ஏழையும் எந்த முன்பதிவும் இல்லாமல் கடைசி நேரத்திலும் ரயில் பயணம் மேற்கொள்ள வசதி செய்திருக்கிறோம்.

அதைப் போல் மஹாமானா எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை பரோடாவிலிருந்து வாராணசி வரையில் இணைத்திருக்கிறோம். சூரத், பரோடா, அங்கிலேஷ்வர் ஆகிய இடங்களில் வேலை செய்வோரும் மகாராஷ்டிரத்தில் பணியாற்றுவோரும் தீபாவளி, சத்பூஜை ஆகிய பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கு வசதியாக தங்களது வீடுகளுக்குச் செல்லலாம். பிகாரையும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தையும் இணைக்கும் வகையில்,  அரசு கடந்த சில தினங்களாக இந்த முக்கியமான நான்கு ரயில் சேவையை வேகமாகத் தொடங்கியுள்ளது. இந்த சேவை உங்களுக்கு தீபாவளி, சத் பூஜை பண்டிகைக் காலங்களில் பெரிதும் பலனளிக்கும்.

சகோதர, சகோதரிகளே, பிகாரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் குறுகிய காலத்தில் மிகப் பெரிய கட்டுமானத்தை அமைக்கும் பணி குறித்து ஒரு விவரத்தை நிதின் கட்கரி அவர்கள் உங்களிடம் வெளியிட்டார். நிதின்ஜி கூறியது போல, ரூ.53,000 கோடி மதிப்பிலான சாலைப் பணிகள் மட்டும் தொடங்கியிருக்கும் அல்லது ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும். எத்தகைய அடிப்படைக் கட்டுமான வசதிகள் கிடைத்திருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.

எதிர்காலத்தில் இணைப்பு ஏதும் இல்லாமல் வளர்ச்சிக்கான பயணத்திற்கு வழியே இருக்காது என்பதை நாம் அறிவோம். சாலைப் போக்குவரத்து இணைப்பு, ரயில் போக்குவரத்து இணைப்பு, இணையதள இணைப்பு, எரிவாயு இணைப்பு, மின்சார இணைப்பு, தூய குடிநீர் வழங்கும் குழாய் இணைப்பு ஆகியவை மிகவும் தேவையானவை. இத்தகைய இணைப்புகள் ஏழை மக்களுடன் தொடர்புடையவை. இவற்றில் நமது நிதின் கட்கரி அவர்களது தலைமையில் நீர்வழிப் போக்குவரத்துத் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நீர்வழிப் போக்குவரத்து இணைப்பை வெற்றிகரமாக செயல்படுத்தினால், நதிகளின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். பொருளாதாரத் துறையிலிருந்து வருவோர் கூட நதிகளை மதிப்பது, காப்பது ஆகியவற்றில் ஈடுபட வேண்டிய அவசியத்தை மறுக்க முடியாது. பரம ஏழைகளுக்கும் சரக்குகளை மலிவான விலையில் எடுத்துச் செல்வதற்கு நீர்வழிப் போக்குவரத்து உதவியாக இருப்பதால், நாட்டின் பொருளாதாரத் துறையில் இத்தகைய மாற்றம் வரப் போகிறது. இந்த நீர்வழிப் போக்குவரத்தினால், நமது தாய் நதியின் கரைகளில் சாத்தியமாகும்.

பிரிட்டிஷ் காலத்தில் இத்தகைய நீர்வழிப் போக்குவரத்து நடைமுறையில் இருந்தது. அப்போது மோகாமா நகரம் சிறிய கோல்கத்தா நகராக அறியப்பட்டது. அப்போது பெரிய அளவிலான பொருளாதார நடவடிக்கைகளுக்கும் போக்குவரத்துக்கும் மையமாகத் திகழ்ந்தது. இந்திய அரசு அந்தப் புகழை மீட்டெடுப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அத்தகைய  புகழை நாங்கள் எந்த வகையிலாவது மீட்டெடுப்போம்.

மின்சாரம் இல்லாத கிராமங்களில் மின்சாரம் வழங்குவதற்காக நாங்கள் மிகப் பெரிய இயக்கத்தைத் தொடங்கியிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மொத்தம் 18 ஆயிரம் கிராமங்களில் மின்சாரம் இல்லை. 1000 நாட்களுக்குள் நிறைவேற்றுவது என்ற கனவுடன் இதைத் தொடங்கியுள்ளோம்.  இன்னும் சில மாதங்கள் இருக்கின்றன. எனினும், இதுவரை 15 ஆயிரம் கிராமங்களுக்கு மின் இணைப்பை அளித்துவிட்டோம். மேலும் இரண்டரை முதல் மூன்று லட்சம் கிராமங்களுக்கு மின்சார வசதியை அளிப்பதற்காக வேகமாகச் செயல்பட்டு வருகிறோம்.

இத்துடன், பிரதமர் சவுபாக்கியா திட்டத்தையும் (Pradhanmantri Saubhagya Yojana) அண்மையில் தொடங்கியிருக்கிறோம். இத்திட்டத்தின் பலனை முழு அளவில் பீகார் மக்கள் பெற வேண்டும். இத்திட்டத்தின் கீழ் மின்சார வசதி இல்லாத வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும். குடிசையில் வசிப்போரும் மின்சார பல்பினைப் பெறுவர். முன்பெல்லாம் யாராவது மின்சார இணைப்பு வேண்டும் என்று கேட்டால்,  “மின் கம்பம் இருக்கிறது.  மின்சார இணைப்பைத் தரவேண்டுமானால், அப்பகுதியில் அங்கும் இங்கும் 10 மின்சாரக் கம்பங்களை நடவேண்டும். மின்சாரக் கம்பத்தின் மதிப்பு சுமார் ரூ. 30 ஆயிரம் இருக்கும். எனவே, ரூ. 30 ஆயிரம் செலுத்தினால், அதன் பிறகே மின்சார இணைப்பு தரப்படும்” என்று அரசு கூறி வந்தது. மக்கள் மின் இணைப்பைப் பெறவில்லை.

சகோதர, சகோதரிகளே, எந்த ஒரு இந்தியக் குடும்பமும் 18ஆம் நூற்றாண்டில் இருந்த நிலையில் வாழக் கூடாது என்று முடிவு செய்துள்ளோம். மின்சார இணைப்பு கட்டணம் எதுவும் இல்லாமல் தரப்படும். ஒருவேளை  மின்சாரக் கம்பத்தை நடவேண்டும்  என்றால், அதை அரசாங்கமே நடும். மின்சாரக் கம்பிகளைப் பதிக்க வேண்டுமானால், அதை அரசு செய்யும். அதன் பின் மின்சாரத்தை அந்த வீட்டுக்கு அளிக்கும். முதல் இணைப்பு கட்டணம் எதுவும் இல்லாமல் வழங்கப்படும். அதனால், குடும்பத்தார் குழந்தைகளின் கல்வி, வாழ்க்கை பற்றி சிந்திக்கலாம். புதிய வழியில் சிந்திக்கலாம். மாற்றத்தை நோக்கிய திசையில் நகரலாம்.

சகோதர, சகோதரிகளே, இது இந்த அரசின் நூதனமான செயல்பாடாகும். நம்மை விமர்சிப்பவர்கள் கூட மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஒப்புக்கொள்ள வேண்டும். முந்தைய அரசு தேர்தல்களை மனத்தில் கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டும், பின்னர் அத்திட்டங்களையும் மக்களையும் மறந்துவிடுவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தது. இன்று ஒரு திட்டம் யோசனையில் உதித்தால் அதற்கான செயல்வடிவத்தை வகுக்கும் ஓர் அரசாங்கம் தில்லியில் உள்ளது. அத்திட்டங்களை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றுவதற்கான ஆதாரங்களைப் பெறுவதற்காக அரசு முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும். மூன்று கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு அளிக்கப்பட்டதை நீங்களே பார்த்திருப்பீர்கள். அந்த வாயு இணைப்புகள் ஏழை, பரம ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் எரிவாயு அடுப்பில் ரொட்டி தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் இரண்டு கோடி குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்பு தருவது எங்கள் கனவு. அதை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றுவோம். அதன் மூலம் ஏழைகளின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவருவோம்.

தூய்மைப் பணி இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம். இப்பணியில் ஈடுபட ஒவ்வொருவரையும் அழைக்கிறேன். கிராமங்களிலும் நகர்ப்புற குடிசைப் பகுதிகளிலும்  திறந்த வெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் வசிக்கும் நமது  தாய்மார்கள், சகோதரிகளை நினைத்துப் பாருங்கள் என்று அரசு ஊழியர்களும்,  படித்த இளைஞர்களும், வசதியான குடும்பத்தினரும் ஒரு கணம் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.  அவர்களுக்குக் கழிவறைகள் இல்லை. அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் சூரிய உதயத்திற்கு முன்பு இருட்டில் வீட்டிலிருந்து வெளியே புறப்படுகிறார்கள். சூரியன் எழுவதற்கு முன்பே, தங்களது காலைக் கடன்களைக் கழித்துவிட்டுத் திரும்புகிறார்கள். ஒருவேளை சூரியன் உதித்த பிறகு காலைக் கடனைக் கழிக்க வேண்டுமானால், பொழுது முடிந்து,  இருட்டும் வரையில் காத்திருக்கிறார்கள். தங்களது உடலை வருத்திக் கொள்கிறார்கள். அதுவரை அவஸ்தையைச் சகித்துக் கொள்கிறார்கள். பிறகே, கடன்களைக் கழிக்கிறார்கள். எனது ஏழைத் தாய்மார்கள், சகோதரிகளுக்கு எத்தனை பெரிய உடல்நலக் கேடு இது ? நமது தாய்மார்கள், சகோதரிகளின் நிலைதான் என்ன ? அதனால்தான், நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் கழிவறைகளைக் கட்டித் தரும் பொறுப்பில் மெத்தனம் காட்டக் கூடாது என்று நான் வலியுறுத்துகிறேன். இதை நேர்மையாக முன்னெடுத்துச் செல்லவேண்டும். நமது தாய்மார்கள், சகோதரிகளின் கண்ணியத்தின் மீது நமக்கு அக்கறை இருந்தால், அவர்களது உடல்நலத்தின் மீது கவலை இருந்தால், இது பூர்த்தி அடைவதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டாக வேண்டும்.

 

இன்று, நாட்டில் ஐந்து கோடி குடும்பங்களுக்கு கழிவறைகளை அமைத்துத் தந்துள்ளோம். தூய்மைக்கான வசதிகள் எவ்வளவு தேவையோ அதில் 50 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள ஒரு நாட்டில் அதை கிட்டத்தட்ட 80 சதவீதமாக உயர்த்தி சாதித்துள்ளோம். ஆனால், இந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்த வேண்டும். எனவே, பீகார் மக்கள் தங்களது கிராமங்களில் இதை நிறைவேற்ற வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இன்று நாட்டில் இரண்டரை லட்சம் கிராமங்கள் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லை என்று அறிவித்துள்ளன. நமது கிராமங்கள், வட்டங்கள், மாவட்டங்களில் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்குவதற்கு முன்வரும்படி பிகாரையும் அழைக்கிறேன்.

மகாத்மா காந்திஜி சம்பரான் இயக்கத்தைத் தொடங்கிய மண்ணில், மகாத்மா காந்தி மிகப் பெரிய தூய்மை இயக்கம் தொடங்கிய மண்ணில், தற்சார்புக்கு மகாத்மா காந்தி அறைகூவல் விடுத்த மண்ணில் நாடு இன்று உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறது. நீங்களும் இதில் தலைமையேற்று நடத்துங்கள். அதைப் போல் பிகாரையும் உயர்த்துங்கள். மக்களாகிய உங்களது பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமாகாது. சவால்கள் அரசாங்கத்தின் நிதியால் மட்டுமே நிறைவேறிவிடாது. மக்கள் முடிவு செய்துவிட்டால், பணிகள் தாமாகவே நிகழ்ந்துவிடும். அதனால், மக்களாகிய உங்களை அழைக்கிறேன்.

எனது அருமை சகோதர, சகோதரிகளே, மிகப் பெரிய அளவில் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து, என்னை ஆசிர்வதித்துள்ளீர்கள். எனது நன்றியை மீண்டும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். கிழக்கு இந்தியாவின் மேம்பாட்டுக்காக இந்திய அரசு அர்ப்பணிக்கும்  என்று உறுதி கூறுகிறேன். நாங்கள் பின்பற்றி வரும் மாதிரி வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அது, கிழக்கு உத்தரப் பிரதேசமாகட்டும்,  பீகார் ஆகட்டும், மேற்கு வங்கமாகட்டும், அசாம் ஆகட்டும், ஒடிசா ஆகட்டும், அல்லது வடகிழக்குப் பகுதியாகட்டும் எல்லா மண்டலங்களுமே மிக உயர்ந்த இடத்தை அடையும். உங்களது பகுதியில் உரத் தொழிற்சாலையை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம். அதன் மூலம் நமது விவசாயிகள் பலன் அடையப் போகிறார்கள்.

இந்த வளர்ச்சிப் பணியில் நீங்கள் அனைவரும் இணைவீர்கள் என்ற இந்த ஒற்றை எதிர்பார்ப்புடன் என்னுடன் இணைந்து, உங்களது முழு ஆற்றலுடன் இந்த முழக்கத்தைக் கூறும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

“பாரத் மாதாகீ ஜெய்” (இந்தியத் தாய்க்கு வெற்றி)

“பாரத் மாதாகீ ஜெய்” (இந்தியத் தாய்க்கு வெற்றி)

“பாரத் மாதாகீ ஜெய்” (இந்தியத் தாய்க்கு வெற்றி)”

நன்றி.

***



(Release ID: 1506593) Visitor Counter : 309


Read this release in: English