பிரதமர் அலுவலகம்

நானாஜி தேஷ்முக் 100ஆவது பிறந்த நாள் விழாவைப் பிரதமர் தொடங்கிவைத்தார்

Posted On: 11 OCT 2017 5:35PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புது தில்லி பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் (IARI) நடைபெற்ற நானாஜி தேஷ்முக் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார். அங்கு, “தொழில்நுட்பமும் ஊரக வாழ்க்கையும்” என்ற தலைப்பிலான கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். அக்கண்காட்சியில், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் மேற்கொண்டுவரும் செயல்பாடுகள், பயன்பாடுகள் மற்றும் அத்துறை மேற்கொண்டு வரும் திட்டங்கள், முன்முயற்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. கண்காட்சி அரங்குகளில் உள்ள புதிய கண்டுபிடிப்பாளர்கள், பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

அடுத்து, நானாஜி தேஷ்முக், லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோருக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அத்துடன், நானாஜி தேஷ்முக் நினைவு அஞ்சல் தலையையும் அவர் வெளியிட்டார்.

தற்சார்பு மற்றும் மனித முன்னேற்றத்துக்கான மேம்பாட்டு முன்முயற்சி (DISHA) நிறுவனத்தின் இணையதளத்தைத் தொடங்கிவைத்தார். இந்த இணையதளம் பல்வேறு அமைச்சகங்களின் திட்டங்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் சிறப்பாகச் செயல்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட கருவியாகும். இருபது அமைச்சகங்களின் 41 வகையான திட்டங்களின் புள்ளி விவரங்கள், தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து, கிராமப்புற குடிமக்களை மையமாகக் கொண்டு, அவர்களை வலுவானவர்களாக்கும் வகையில் “கிராம் சம்வாத்” என்ற கைப்பேசி செயலியை பிரதமர் தொடங்கிவைத்தார். பல்வேறு ஊரக வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கிராம மக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை ஊராட்சி அளவில் பெறுவதற்கான ஒற்றைச் சாளர முறைக்கு இந்த செயலி துணைபுரியும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் வளாகத்தில் 11 கிராமப்புற சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனங்களையும் தாவர உயிரியல் பற்றிய ஆய்வு நிறுவன வசதியையும் காணொலி மூலம் (டிஜிட்டல் வழி) பிரதமர் தொடங்கிவைத்தார்.

அதையடுத்து, 10 ஆயிரம் பேருக்கும் கூடுதலாக கூடியிருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். இக்கூட்டத்தில் பல்வேறு சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், ஊராட்சிகளைச் சேர்ந்தவர்கள், குடிநீர் சேமிப்புக்கு புதிய வழிமுறைகளைக் கண்டறிவோர், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் (Pradhan Mantri Awas Yojana) பயனாளிகள் இடம்பெற்றிருந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “இன்று இரண்டு மாபெரும் தலைவர்களின் பிறந்தநாள் ஆகும். ஒருவர் நானாஜி தேஷ்முக். மற்றொருவர் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண். இருவரும் தங்களது வாழ்க்கையை நாட்டின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்தவர்கள்” என்றார்.

“லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் இளைஞர்களிடையே மிகவும் புகழ் பெற்ற தலைவர். “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தின்போது, மகாத்மா காந்தியின் அறைகூவலால் உத்வேகம் அடைந்த லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண், டாக்டர் ராம் மனோகர் லோகியா ஆகிய இரு தலைவர்களின் நோக்கங்களும் விருப்பங்களும் ஓங்கி ஒலித்தன. லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் எப்போதும் அதிகாரத்துக்கு வர விரும்பியதே இல்லை. ஊழலுக்கு எதிராக முழு மூச்சில் போராடினார். நானாஜி தேஷ்முக்கும் கிராமப்புறங்களின் மேம்பாட்டுக்காகவும் கிராமங்கள் தற்சார்பு நிலையை அடைவதற்காகவும் வறுமை ஒழிவதற்கும் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டார்” என்று பிரதமர் புகழ்ந்துரைத்தார்.

பிரதமர் பேசுகையில், “மேம்பாட்டை அடைவதற்கான புதிய யோசனைகள் மட்டும் போதாது. அதற்கான முன்முயற்சிகள் உரிய நேரத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டும். மேம்பாட்டின் மூலம் கிடைக்கும் பலன்கள் யாருக்குப் போய்ச்சேரவேண்டுமோ அந்தப் பயனாளிகளுக்குப் போய்ச்சேர வேண்டும். முயற்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும். எடுக்கப்படும் முயற்சிகள் பயன்களைத் தருவதாக அமைந்திருக்க வேண்டுமே தவிர, பதில்களைத் தருவதாக அமைந்திருக்கக் கூடாது” என்று அறிவுறுத்தினார்.

“நகர்ப்புறங்களில் கிடைக்கும் வசதிகள் அனைத்தும், கிராமப்புறங்களிலும் கிடைக்க வகை செய்ய வேண்டும். ஜனநாயகத்தின் உண்மையான சாரம் மக்களையும் பங்குதாதர் ஆக்குவதும் நகர்ப்புற மக்களையும் கிராமப்புற மக்களையும் ஒருங்கிணைப்பதும்தான். அதற்கேற்ப அரசுடன் சீரான தொடர்பு மேற்கொள்ளப்பட வேண்டும்“ என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

போதிய சுகாதார வசதிகள் இல்லாமை கிராமங்களின் மேம்பாட்டுப் பயணத்திற்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று சுட்டிக் காட்டிய பிரதமர், “அதனால்தான், கிராமங்களில் எல்லாம் கழிவறைகளைக் கட்டுவதில் அரசு முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறது” என்றார்.
 

***



(Release ID: 1506589) Visitor Counter : 111


Read this release in: English