ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
நாட்டில் விற்பனையாகும் மருந்துகளின் தரம் குறித்து அரசு எடுக்கும் கடுமையான நடவடிக்கைகள்.
Posted On:
04 AUG 2017 10:37AM by PIB Chennai
நாட்டில் விற்பனை செய்யப்படும் மருந்து பொருட்களின் தரம் குறித்து மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக மத்திய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் மனுஷ் எல்.மண்டாவியா மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளின் தரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தேசிய மருந்துகள் சர்வே கடந்த 2014-16ம் ஆண்டுகளில் நடத்தப்பட்டதாகவும், அதில் 3 .16 சதவீத மருந்துகள் தரம் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த மருந்துகளின் தரம் குறித்து ஆய்வகங்களில் நடத்தப்பட்ட சோதனையிலும் அந்த மருந்துகள் தரத்துடன் இல்லை என்பது தெரியவந்துள்ளதாகவும், அதனை சம்பந்தப்பட்ட உரிமம் வழங்கிய மாநில அரசு அமைப்புகளுக்கு அனுப்பி சட்டப்பூர்வ மாதிரிகளை பெற்று சோதனைக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
நாட்டில் மருந்துகளின் தரத்தினை பராமரிக்க அரசு எத்தகைய உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்தும் அமைச்சர் மண்டாவியா விளக்கினார். அதன் விவரம் வருமாறு:
மருந்துகள் மற்றும் வாசனை திரவியங்கள் சட்டம் 1940- ல் உரிய திருத்தங்கள் செய்து மருந்துகள் மற்றும் வாசனை திரவியங்கள் திருத்தச்சட்டம் 2008 கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி போலியான அல்லது கலப்படத்துடன் கூடிய மருந்துகள் தயாரிக்கும் நிறுவனத்தின் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத, தண்டனைக்குரிய குற்றவழக்குகள் தொடர்ந்து தண்டிக்கமுடியும்.
மருந்துபொருள் கலப்படம் தொடர்பான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தற்போது 22 மாநிலங்களில் இத்தகைய தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் போலி மருந்துகள் தயாரிக்கும், உற்பத்தி செய்யும் நிறுவனங்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், மக்களிடம் அதுபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஒரு அமைப்பை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி போலி மருந்துகள் தயாரிப்பவர்கள் பற்றி உரிய அதிகாரிகளுக்கு தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் அல்லது பரிசு வழங்கப்படும். இதுதொடர்பான கொள்கை முடிவுகள் மற்றும் விளக்கங்கள் சி.டி.எஸ்.சி.ஒ. என்ற இணையதளத்தில் (WWW .CDSO.NIC.IN) பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
போலி மருந்துகளின் மாதிரிகள் மற்றும் தரமற்ற மருந்துகளை எடுத்து அவற்றை கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது அதிகபட்ச அபராதம் விதிப்பதற்கும் இந்த மருந்துகள் மற்றும் வாசனை திரவியங்கள் சட்டம் 2008ல் வழிவகை செய்யப்பட்டுள்ளது , இதுதொடர்பாக மாநில அரசுகளின் மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு பரிந்துரைத்து ஒரே சீரான நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மருந்துகளை மாதிரி எடுத்து சோதனையிடும் ஆய்வாளர்கள் அவற்றினை சோதனை செய்து தரத்தினை பராமரிக்கவும், தரமான மருந்துகள் நாட்டில் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சிடிஎஸ்சிஓ நிறுவனத்தில் 2008ம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை 111 ஆக இருந்த நிலையில் 2017ல் அது 510 ஆக அதிகரித்துள்ளது.
இதுபோல நாட்டின் மருந்துகள் பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கையும் நிலையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாநில அரசுகளின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பை 12வது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் மேலும் வலுவானதாகவும், திறமையாக செயல்படுத்தவும், சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது,.
பொருளாதாரத்திற்கான மத்திய அமைச்சரவை குழுவும், நாட்டில் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பை வலுப்படுத்த அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக மத்திய மாநில அரசுகள் ஆயிரத்து 750 கோடி ரூபாய் செலவிடுகிறது. இதில் 850 கோடி ரூபாய் மத்திய அரசின் நிதி பங்களிப்பாகும். மத்திய மாநில பங்களிப்பு நிதி என்கிற பட்சத்தில் அது 60:40 என்ற விகிதாச்சாரத்தில் இருக்கும். இதில் ஜம்மு காஷ்மீர் , இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் வடகிழக்குமாநிலங்களுக்கும் இது 90:10 என்ற விகிதாச்சாரத்தில் இருக்கும்.
===============
(Release ID: 1506191)
Visitor Counter : 157