பிரதமர் அலுவலகம்

இந்திய ஐரோப்பிய யூனியன் 14ஆவது உச்சி மாநாட்டின்போது (அக்டோபர் 6, 2017) பிரதம மந்திரி வெளியிட்ட செய்திக் குறிப்பின் தமிழாக்கம்

Posted On: 06 OCT 2017 6:49PM by PIB Chennai

மேதகு பெருமக்களே, அதிபர் டஸ்க் அவர்களே, அதிபர் ஜுங்க்கர் அவர்களே,

மரியாதைக்குரிய பேராளர்களே,

ஊடக நண்பர்களே,

இந்திய – ஐரோப்பிய யூனியன் 14ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள அதிபர் டஸ்க் மற்றும் அதிபர் ஜுங்க்கர் ஆகியோரை வரவேற்பதில் நான் பேருவகை கொள்கிறேன்.

ஐரோப்பிய யூனியனுடன் பல்முகமான கூட்டினை வைத்துக் கொள்வதை இந்தியா பெரிதும் மதிக்கிறது. நமது ராஜதந்திர கூட்டிணைவுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். 1962ஆம் ஆண்டில் ஐரோப்பிய பொருளாதார சமூகத்துடன் ராஜீய உறவை ஏற்படுத்திக் கொண்ட முதல் சில நாடுகளில் இந்தியா என்பது குறிப்பிடத் தக்கது.

ஐரோப்பிய யூனியன் எங்களுடன் நீண்டகால வர்த்தக உறவைக் கொண்ட கூட்டாளியாகும். மேலும், அந்தக் கூட்டு அந்நிய நேரடி முதலீட்டில் மிகப் பெரிய ஆதாரங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் என்ற வகையில் நாம் எல்லோரும் இயல்பான கூட்டாளிகளாகவே இருக்கிறோம். நமக்குள் பகிர்ந்துகொள்ளும் ஜனநாயக விழுமியங்கள், சட்டம், அடிப்படை உரிமைகளுக்கு அளிக்கும் மரியாதை, பன்முகக் கலாசாரத் தன்மை ஆகியவை நமது நெருங்கிய உறவுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு திசைகளில் செலுத்தும் தொலைநோக்குப் பார்வைகளையும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கமைவினையும் நாம் பகிர்ந்து கொள்கிறோம்.  கடந்த ஆண்டு பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற 13 ஆவது உச்சி மாநாட்டைத் தொடர்ந்து நமது உறவுகள் சீராக வேகம் பெற்று முன்னேறி வருகின்றன.

நண்பர்களே,

இந்த உச்சி மாநாட்டின் விரிவான நிகழ்ச்சி நிரலில் இன்று மேற்கொண்ட பயனுள்ள விவாதங்களுக்காக அதிபர் டஸ்க் அவர்களுக்கும் அதிபர் ஜுங்க்கர் அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய – ஐரோப்பிய யூனியன் உறவைப் பல்வேறு துறைகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளோம். இந்த உறவை பரஸ்பர நம்பிக்கை, புரிதலின் அடிப்படையில் விரிவானதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்குவதற்குத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்

கடந்த உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் கடந்த ஆண்டு அறிவித்த 2020ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சி நிரல் குறித்தும்   நாம் இன்று ஆய்வு செய்துள்ளோம்.

நமது பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் பயங்கரவாதத்தை முறியடிக்க இணைந்து செயல்படுவது என்றும் இசைந்துள்ளோம். இந்த விஷயத்தில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது மட்டுமின்றி பன்முகத்தன்மை வாய்ந்தததாகவும் அமைய ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் அதிகரிப்போம்.

தூய்மையான மின்சக்தி, பருவமாற்றம் ஆகிய விஷயங்களில் 2015ஆம் ஆண்டு பாரிசில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டைச் செயல்படுத்துவதில் நாம் அனைவரும் உறுதி பூண்டிருக்கிறோம். நாம் பகிர்ந்துகொண்ட விஷயங்களில் பருவமாற்றம் குறித்த பிரச்சினை, பாதுகாப்பான, மலிவான, நீடித்த மின்சக்தி முக்கிய இடம் பெற்றுள்ளன. புதுப்பிக்கத் தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதற்கான செலவைக் கட்டுப்படுத்துவதில் பரஸ்பர ஒத்துழைப்பு மேற்கொள்ள மீண்டும் உறுதி பூண்டுள்ளோம்.

பொலிவுறு நகரங்களை மேம்படுத்துவதிலும், நகர்ப்புறக் கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதிலும் ஐரோப்பிய யூனியனுடன் கொண்டுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வோம்.

இந்திய ஐரோப்பிய யூனியன் இடையில் சிவில் விமானப் போக்குவரத்து குறித்த பரந்துபட்ட உடன்பாடு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது குறித்து நான் பெரிதும் மனநிறைவு பெற்றுள்ளேன். இது நமது வான்வழிப் போக்குவரத்தினை அதிகரித்து, இரு தரப்பு மக்களுக்கு இடையிலான தொடர்பை விரைவுபடுத்தும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றிலும் ஆய்வு மற்றும் புத்தாக்கத்திலும் நாம் மேற்கொண்டுள்ள ஒத்துழைப்பு மிக முக்கியமானது. இந்த விஷயத்தில், நம் நாடுகளின் இளம் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் நம் நாடுகளுக்குச் சென்று வருவது தொடர்பாக இன்று இறுதி செய்யப்பட்ட உடன்பாட்டைப் பெரிதும் வரவேற்கிறேன்.

இந்தியாவில் வளர்ச்சித் திட்டங்களுக்காக ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் (European Investment Bank) நிதியுதவியைப் பெறுவது தொடர்பான உடன்பாடுகளில் கையெழுத்திட்டதும் வரவேற்கத் தக்க செயலாகும்.

சர்வதேச சூரிய சக்தி திட்டத்தைச் செயல்படுத்தும் கூட்டணி அமைப்பில் (International Solar Alliance) இடம்பெற்றுள்ள நாடுகளில் சூரியசக்தி தொடர்பான திட்டங்களுக்கும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளதை நான் பாராட்டுகிறேன்.

வர்த்தகத்தை வலுப்படுத்துவதிலும் முதலீட்டை அதிகரிப்பதிலும் மேலும் உறவை வலுப்படுத்தும் வகையில்  ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து செயல்படுவது என்று நாங்களும் உறுதி பூண்டுள்ளோம்.

மேதகு தலைவர்களே,

உங்களது தலைமைக்கும் இந்திய ஐரோப்பிய யூனியனுடன் ராஜீய கூட்டினை வலுப்படுத்துவதற்காக நீங்கள் செலுத்தும் பங்களிப்புக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது அடுத்த இந்திய வருகை இதுப் போல் சுருக்கமாக அமைந்துவிடாது என்பது எனது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஆகும்!

நன்றி,

மிக மிக நன்றி.

***


(Release ID: 1505250) Visitor Counter : 149


Read this release in: English