மத்திய அமைச்சரவை

கண்ட்லா துறைமுகத்தின் பெயரை தீன் தயாள் துறைமுகம் என பெயர் மாற்றம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 04 OCT 2017 12:15PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கண்ட்லா துறைமுகத்தின் பெயரை தீன்தயாள் துறைமுகம் என பெயர் மாற்றம் செய்வதற்கான நடைமுறைக்குப் பிந்தைய அனுமதியை வழங்கியது.

 

இந்தியாவில் பொதுவாக துறைமுகங்களின் பெயர்கள் அது இருக்கும் நகரம் அல்லது சிறுநகரத்தின் பெயரிலேயே வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. எனினும் சில சிறப்பான விஷயங்களில், முறையான ஆலோசனைக்குப் பிறகு அரசு கடந்த காலத்தில்  மகத்தான தலைவர்களின் பெயர்களையும் துறைமுகங்களின் பெயராக மாற்றி வைத்துள்ளது.

 

கண்ட்லா துறைமுகத்தை  “தீன்தயாள் துறைமுகம், கண்ட்லா” என பெயர் மாற்றம் செய்துள்ளதன் மூலம் இந்தியாவின் மகத்தான புதல்வர்களில் ஒருவரான பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா அவர்களின் மதிப்பிடற்கரிய பங்களிப்புகளை நன்றிமிக்க நமது நாடு நினைவு கூர்வதாக அமையும். இந்த நடவடிக்கை இந்த மகத்தான தலைவரின் பங்களிப்புகளை முழுமையாக அறிந்திராத குஜராத் மாநில மக்கள், குறிப்பாக இளைஞர்கள், தெரிந்து கொள்வதற்கு ஊக்கமளிக்கும்.

 

பின்னணி:

 

குஜராத் மாநிலத்தின் பல்வேறு பிரிவினரிடமிருந்தும், குறிப்பாக கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து, கண்ட்லா துறைமுகத்தின் பெயரை கண்ட்லா துறைமுகம் என்ற பெயரை “தீன்தயாள் துறைமுகம், கண்ட்லா” என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென கோரிக்கைகள் வந்தன.  பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா (25.9.1916 – 1.2.1968) நாட்டின் சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த பிரபலமான தலைவர் ஆவார். அவர் தனது வாழ்க்கை முழுவதையும் நாட்டின் சேவைக்காகவே செலவழித்தர். மக்களிடையே செயல்பட்ட அவர் அதே நேரத்தில் சமூகத்தின் ஏழைகள், தொழிலாளி வர்க்கத்தினரின் மேம்பாட்டிற்காகவும் தனது வாழ்க்கை முழுவதையும் அவர் அர்ப்பணித்து, தியாகம் செய்தார்.  சகிப்புத் தன்மை, ஒழுங்கு, சுயநலமின்மை, நாட்டின் சட்டத்திற்கு மரியாதை செலுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஜனநாயகத்தின் மதிப்பீடுகளை போற்றிய அவர் தனது செயல்பாடுகள் அனைத்தையுமே  ‘ஒருங்கிணைந்த மனிதாபிமான’ குறிக்கோள்களின் அடிப்படையிலேயே அமைத்துக் கொண்டவர் ஆவார். தன் வாழ்நாள் முழுவதிலுமே ஜனநாயகத்தை இந்தியமயமாக்குவதற்காகவும், மக்களின் கருத்துக்களை, சுயநலமின்மையை, நாட்டின் சட்டத்தின் மீதான மரியாதை ஆகியவற்றை மதிக்கவும் அவர் ஓய்வின்றிப் பாடுபட்டார். பொதுவாழ்க்கைக்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா எளிமை, நேர்மை, ஏழைகள், சமூகத்தின் அடித்தட்டில் உள்ளோருக்கான சுயநலமற்ற சேவை ஆகியவற்றுக்கான உதாரணமாகவும் திகழ்ந்தவர் ஆவார்.

 

அவரது பிறந்த தின நூற்றாண்டு செப்டெம்பர் 25,. 2017 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த மகத்தான தலைவரின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் பகுதியாக கண்ட்லா துறைமுகத்தை தீன்தயாள்  துறைமுகமாக பெயர் மாற்றம் செய்வது என முடிவெடுக்கப்படுமானால் அது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் எனவும் கருதப்பட்டது.

 


 

 

***


(Release ID: 1504855) Visitor Counter : 252
Read this release in: English