நித்தி ஆயோக்

உலகத் தொழில் முனைவுத்திறன் உச்சி மாநாடு 2017 ஹைதராபாத்தில் நவம்பர் 28 முதல் 30 வரை நடைபெற உள்ளது.

Posted On: 03 OCT 2017 1:41PM by PIB Chennai

ஹைதராபாத்தில் உள்ள ஹைதராபாத் சர்வதேச மநாட்டு மையத்தில் நவம்பர் மாதம் 28 முதல் 30 –ம் தேதி வரை நடைபெற உள்ள உலக தொழில் முனைவுத்திறன் உச்சி மாநாடு (GES) 2017 –ஐ திட்டமிடுவது குறித்து மத்திய அரசின் உயர்நிலைக் குழுவும் அமெரிக்க அரசின் குழுவும் இன்று நித்தி ஆயோக்கில் சந்தித்து பேசின.

     இந்த உச்சி மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் அமெரிக்கக் குழுவுக்கு தலைமை ஏற்று வந்துள்ள அமெரிக்க அதிபரின் ஆலோசகர் திருமதி இவென்கா டிரம்ப் ஆகியோர் திறந்து வைக்க உள்ளனர்.

     உலகெங்கிலும் உள்ள வளர்ந்து வரும் தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள், ஆண்டுக்கு ஒருமுறை கூடும் சிறப்பான கூட்டமே ஜிஇஎஸ் ஆகும். தொடர்பு கட்டமைப்புகள், பயிற்சி அளித்தல், பயிலரங்குகள் மூலம் தொழில் முனைவோருக்கு தொழில் குறித்த கருத்துகள் உருவாக்குதல், பங்களிப்பை ஏற்படுத்துதல், நிதி பெறச் செய்தல், சமுதாயங்களை மாற்றி அமைக்க கூடிய புதுமையான பொருட்கள், சேவைகள் ஆகியவற்றை படைத்தல் முதலியவற்றில் அதிகாரம் அளிக்க ஜிஇஎஸ் உதவுகிறது. இந்த ஆண்டு உச்சி மாநாட்டில் மகளிர் தொழில் முனைவோர், தொழில் முனைவு திறனில் மகளிர் கொண்டு வரும் மிகப் பெரிய திறன் ஆகியன முக்கிய பொருளாக இடம் பெறும்.

     ஜிஇஎஸ் 2017 புதுமைப் படைப்பாளர்களுக்கு, குறிப்பாக, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் சூழலை உருவாக்கும். இதன் மூலம் அவர்கள் தங்கள் கருத்துகளை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியும். பொருளாதார வளர்ச்சி மற்றும் வளத்திற்கு பெரிய அளவில் உறுதி அளிப்பது, பெண்களுக்கான பிரதிநிதித்துவம் ஆகும். ஆனால், வளரும் நாடுகளிலும் வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் வர்த்தகத்தை உருவாக்க இவர்கள் பெரும் தடைகளை தாண்ட வேண்டியுள்ளது. இந்த ஆண்டின் முக்கிய நெறியான “முதலாவதாக பெண்கள், அனைவருக்கும் வளம்” என்பது தொழில் முனைவுத் திறன் சிறப்பை அதன் அனைத்து அம்சங்களிலும் கொண்டாடுவதாக அமைந்துள்ளது. ஜிஇஎஸ் 2017-ல் தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவு அடிப்படையிலான பெரிய தொழில்களின் தலைமை நிர்வாகிகள் உள்ளிட்ட, உலகெங்கிலும் இருந்து தொழில் முனைவு திறனில் பல்வேறு பின்னணி கொண்ட,  1600 –க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். உலகின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் 160 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்கிறார்கள். அவர்கள் இப்புவியின் பல்வேறு மண்டலங்கள், தொழில்கள், பல அளவுகள் கொண்ட வர்த்தகங்கள் ஆகியவற்றிற்கு பிரதிநிதிகளாக பங்கேற்க உள்ளனர். முதலீடு, தொடர்புக் கட்டமைப்பு, தொழில் போதனை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோருக்கு ஆதரவு அளிக்கும் அமைப்புகள் இதில் பங்கேற்பர். இளம் தலைமுறை மற்றும் மகளிர் தொழில் முனைவோருக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும். சமுதாயங்களை மேலும் வளமிக்கவையாகவும், பொருளாதாரப் பாதுகாப்பு மிக்கவையாகவும் மாற்றுவதில் அவர்களுக்கு உள்ள பங்கு வளியுறுத்தப்படும்.

     இந்திய அரசின் சார்பில் நித்தி ஆயோக் உச்சி மாநாட்டுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. உலகின் மிகச் சிறந்த தொழில் முனைவோருடன் கலந்து பேசி தொடர்பு வைத்து கொள்வதற்கு இந்திய தொடக்கநிலை நிறுவனங்களுக்கும், புதுமை படைப்பாளர்களுக்கும் நல்ல வாய்ப்பை இந்த உச்சி மாநாடு அளிக்கும் என்று நித்தி ஆயோக் முதன்மை நிர்வாக அலுவலர் திரு. அமிதாப் காந்த் தெரிவித்தார். இந்த உச்சி மாநாட்டை ஹைதராபாத்தில் நடத்துவதற்கு ஆதரவளித்த தெலுங்கான அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார். “உலகின் பழமையான நாகரிகமான இந்தியா உலகின் இதர நாகரிகங்களை ஜிஇஎஸ் 2017-க்கு வரவேற்கிறது, உடல்நல பராமரிப்பு, கல்வி, எரிசக்தி, பாதுகாப்பான குடிநீர், விவசாயம் போன்ற முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான அவசியம், இதற்கு புதுமை படைக்கும் தொழில் முனைவு திறனும் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்த உச்சி மாநாடு தொழில் முனைவோர் தலைச்சிறந்தவர்களுடன் கலந்து பேச சிறப்பான வாய்ப்பை அளிக்கிறது” என்று அவர் கூறினார்.

     இது குறித்து கருத்து தெரிவித்த, அமெரிக்க அதிபர் மாளிகையின் தேசிய பாதுகாப்பு சபை முதுநிலை இயக்குநர் திருமதி ஜெனிஃபர் அராங்கியோ, “இந்த ஆண்டின் ஜிஇஎஸ் –ல் இந்தியாவுடன் இணைந்து செயலாற்றுவதில் அமெரிக்கா பெருமிதம் அடைகிறது. ‘மகளிர் முதலில், அனைவருக்கும் வளம்’ என்ற முதல் நெறியில் ஒன்று பட்டு செயல்பட உள்ள இந்த உச்சி மாநாடு மகளிருக்குப் பொருளாதார ரீதியில் அதிகாரம் அளித்தால் சமுதாயங்களும், நாடுகளும் வளரும் என்கிற டிரம்ப் நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை உணர்த்துகிறது. இந்தியதாவில் ஜிஇஎஸ்-யை நடத்துவது இரு நாடுகளுக்கும் இடையேயான விரிவான நிலைத்த நட்புறவைக் காட்டுகிறது. இதில் இணைந்து செயலாற்றும் இந்திய அரசுக்கு, அதன் ஆதரவு, ஆற்றல், விருந்தோம்பல் ஆகியவற்றிற்காக நன்றி.  அமெரிக்க தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள் உலகின் இதர பகுதிகளில் இருந்து வரும் தம்மைப் போன்றோருடன் இனைந்து பணியாற்றும் உயர் தாக்கம் கொண்ட உச்சி மாநாட்டு வாய்ப்பை எதிர் நோக்கி உள்ளனர்.”  என்று கூறினார்.

     தொழில் முனைவோர் உருவாக்கிய புதுமைகள், வேலைவாய்ப்பை உருவாக்குதல், உற்பத்தி திறன் மேம்பாடு, மக்களின் வாழ்க்கைதர மேம்பாடு ஆகியவற்றின் மூலம் உலகப் பொருளாதாரத்தை மாற்றி அமைத்துள்ளன. இந்த உச்சி மாநாடு 4 முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தும்: எரிசக்தி மற்றும் அடிப்படை வசதி, உடல்நலம் பேணுதல் மற்றும் உயிரி அறிவியல், நிதித் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம், ஊடகங்கள் மற்றும் பொழுதுப்போக்குத் துறைகள்.

     ஜிஇஎஸ் 2017 அலுவல் பட்டியலில் சிறு அமர்வுகள், முக்கிய வகுப்புகள், பயிலரங்குகள் இடம் பெற்றுள்ளன. மாநாட்டில் பங்கேற்பாளருடன் கலந்து பேசி தொடர்பு கட்டமைப்புகளை உருவாக்க 3 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஜிஇஎஸ் 2017-ல் முக்கிய இடம் பெறும் புதுமைத் தொழில்கள் மற்றும் இதர அம்சங்கள், குறித்து விவாத்திக்கும் வகையில் சிறு அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. முக்கிய வகுப்புகளில் குறிப்பிட்ட தலைப்புகளில் ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். பயிலரங்குகளில் நிபுணர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் இடையே குறிப்பிட்ட தலைப்புகளில் கருத்துப் பரிமாற்றமும், நேரடிப் பயிற்சியும் இடம் பெறும்.

     இந்த உச்சி மாநாடு குறித்து, ஆர்வத்தை ஏற்படுத்தவும், அக்கறை கொண்டோரின் கவனத்தை ஈர்க்கவும், பல்வேறு முகமைகளுடன் கூட்டாக ‘ஜிஇஎஸ் நோக்கி’ என்ற தொடர் நிகழ்ச்சிக்கு நித்தி ஆயோக்கும் அமெரிக்கத் தூதரகமும் திட்டமிட்டுள்ளன.

     உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக தொழிலியல் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை ஒத்துழைப்புடன், ‘இந்தியாவின் புதுமை படைப்பு ஆற்றல்’ என்ற நிஜநிகர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரக மேம்பாட்டு அமைச்சகம், பண்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், இந்தியாவின் பாரம்பரியம், சமுகத் தொழில் முனைவுத் திறன், கைவினைத் திறன் ஆகியனவும் காட்சிக்கு வைக்கப்படும்.

     மேலும், தகவல்களுக்கு www.ges2017.gov.in மற்றும் www.ges2017.org வலைதளங்களைக் காணவும்.

*****



(Release ID: 1504819) Visitor Counter : 399


Read this release in: English