ஊரக வளர்ச்சி அமைச்சகம்
கிராம சபைக் கூட்டங்களில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பொதுமக்கள் பங்கேற்பு
Posted On:
03 OCT 2017 11:41AM by PIB Chennai
நாடெங்கும் கிராமப் பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பொதுமக்கள் பங்கேற்றனர். 2017 அக்டோபர் 1 –ம் தேதி முதல் 15 –ம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிராம நலன் மற்றும் தூய்மை இருவார நிகழ்ச்சின் தொடர்பாக மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், ஆகியவற்றின் பங்கேற்புடன் இந்த கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. கிராம சபைக் கூட்டத்தில் வயது வந்த அனைவரும் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் காலையில் குழந்தைகள் எழுச்சி ஊர்வலத்தை நடத்தினார்கள். கிராம சபைக் கூட்டங்களில் நாட்டில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 5 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் முழு அளவில் பங்கேற்றனர். இந்த கூட்டங்களின் போது பஞ்சாயத்துகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவற்றிற்கு செலவிடப்பட்ட தொகைகள் ஆகியவை குறித்த, முழு விவரங்களை வெளியிட்டனர்.
தூய்மை மற்றும் நலவாழ்வுக்கான சமுதாயத் தலைமையிலான தொடர்ந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தீன் தயாள் அந்த்யோதயா திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம், தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் இதர தேசிய மாநில திட்டங்களின் நிதி ஆதாரங்களை ஒருங்கிணைத்து பயன்படுத்துவதன் மூலம் இந்த முயற்சிகள் நடைபெறுகின்றன.
வீடுகளின் பொருளாதார நிலைமையை மேம்படுத்த இளைஞர்களின் திறன் மேம்பாடு திட்டங்கள் மூலம் வாழ்வாதாரத்தை பலதரப்பாக்கி மேம்படுத்துவதற்கு இந்த இருவார விழாவின் போது முயற்சிகள் எடுக்கப்பட்டன. பிரதமர் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட 4 லட்சத்து 55 ஆயிரம் வீடுகளில் கிரகபிரவேஷம் செய்யப்பட்டது. 2018 மார்ச்சில் முடிவடைய உள்ள சுமார் 51 லட்சம் வீடுகள் சார்ந்த கட்டுமானப் பணிகளை பார்வையிட பயனாளிகளும், பிறரும் அழைத்து செல்லப்பட்டனர். இதே காலத்தில் சமுதாய நலனுக்கான சிறந்த சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.
ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் அனைத்தும் தூய்மை கிராம வலைதள மேடை மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்த வலைதளத்தை பொதுமக்கள் http://swachhgram.nic.in என்ற முகவரியல் பார்க்கலாம். இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடுத்த சில நாட்களில் அது முடிவடையக் கூடும்.
<><><><><>
SNC
(Release ID: 1504817)
Visitor Counter : 189