சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்கு மத்திய அமைச்சகத்திற்கு விருது

Posted On: 03 OCT 2017 12:20PM by PIB Chennai

மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் தூய்மை இந்தியா இயக்கத்தின் அமைச்சகங்களிடையிலான தூய்மை இருவார விழாவின் போது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்  சிறப்பாகப் பங்களித்தது என அறிவிக்கப்பட்டது. சுகாதார அமைச்சகம் தூய்மை இருவார விழாவை 2017 பிப்ரவரி முதல் தேதி தொடங்கி பிப்ரவரி 15 –ம் தேதி வரை கடைப்பிடித்தது. தூய்மை இந்தியா இயக்கத்தின் மூன்றாவது ஆண்டு விழா நாளான 2017 அக்டோபர் 2 –ம் தேதி அமைச்சகத்துக்கு விருது வழங்கப்பட்டது. அமைச்சகத்தின் சார்பில் அதன் செயலாளர் திரு. சி. கே. மிஸ்ரா விருதைப் பெற்றுகொண்டார்.

 

     தூய்மை இருவார செயல்பாடுகள் சுகாதார அமைச்சகத்தின் அலுவலகங்களிலும் மத்திய அரசு மருத்துவ மனைகளிலும் 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள பொது சுகாதார மையங்களிலும் நடைபெற்றன. இந்த நடவடிக்கைகள் தவிர பேரணிகள், தெரு நாடகங்கள், ஓவியப் போட்டிகள் போன்றவற்றின் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், பள்ளிக் குழந்தைகள், சமுதாயம் ஆகியவற்றின் பங்கேற்பையும், ஆதரவையும் பெறுதல், போன்றவற்றையும் அமைச்சகம் ஏற்பாடு செய்தது குறிப்பிடதக்கது. தூய்மை இயக்கத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கு இந்த செயல்பாடுகள் இன்றியமையாதவை என கருதப்படுகின்றன.

 

     தூய்மை இருவார விழாவின் போது அனைத்து மருத்துவ மனைகள் / கிளினிக்குகள் ஆகியவற்றில் கழிவுப் பொருட்களைப் பிரிப்பதற்கான தொட்டிகளை நிறுவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மருத்துவமனை வளாகங்களிலும், மருத்துவமனை வார்டுகளிலும் பெரிய அளவில் தூய்மை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு, சுத்தம், சுகாதாரம் ஆகிவற்றின் முக்கித்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோருடன் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் ஈடுபட்டனர்.

 

     சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு. ஜே.பி. நட்டா, 2017 பிப்ரவரி 15-ம் தேதி ஆய்வு மேற்கொண்டு சிறப்பு சுகாதார இயக்கத்தை முன்னின்று நடத்தினார். அத்துடன்      தூய்மை இருவார நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. அமைச்சர் ஊழியர்களுடன் நிர்மான் பவனில் தூய்மை செயல்பாடுகளில் பங்கேற்றார். அமைச்சகத்தின் பல்வேறு பகுதிகள் அலுவலக அறைகள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். அமைச்சகத்தின் பல்வேறு பகுதிகளில் தூய்மை இருவார விழாவின் போது பழைய, தேவையற்ற கோப்புகளும், ஆவணங்களும் அகற்றப்பட்டன.

 

     தூய்மை இருவாரத் திட்டம் 2016 ஏப்ரலில் தூய்மை நடைமுறைகள், தூய்மைக் குறித்த விஷயங்களுக்கு தீவிர கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டது. மத்திய அரசின் அமைச்சகங்கள் / துறைகள் இதில் ஈடுப்படுத்தப்பட்டன. இருவார விழா செயல்பாடுகளை திட்டமிடுவதற்கு உதவும் வகையில் அமைச்சகங்களுக்கிடையே ஆண்டு நாட்காட்டி ஒன்று முன்னதாகவே சுற்றுக்கு விடப்பட்டது. தூய்மை இருவார விழாவைக் கடைப்பிடிக்கும் அமைச்சகங்கள் தூய்மை சமிக்ஷா அமைப்பின் ஆன்லைன் கண்காணிப்பு அமைப்பின் மூலம் கண்காணிக்கப்பட்டன. செயல் திட்டங்கள், படங்கள், வீடியோப் படங்கள் ஆகியன இந்த கண்காணிப்பு அமைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு பகிர்ந்துக் கொள்ளப்பட்டது. தூய்மை இருவார விழா கடைப்பிடித்த அமைச்சகங்கள் தூய்மையான அமைச்சகங்கள் என கருதப்படும். இவை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் தரமான தூய்மை மேம்பாடுகளைக் கொண்டுவர வேண்டுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

******


 



(Release ID: 1504816) Visitor Counter : 226


Read this release in: English