பிரதமர் அலுவலகம்

‘பிரகதி’ மூலம் பிரதமர் கலந்துரையாடல்

Posted On: 27 SEP 2017 5:37PM by PIB Chennai

முன்முயற்சிமிக்க ஆட்சிமுறை, குறித்த நேரத்தில் அமல்படுத்தல் ஆகியவற்றுக்கான தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் அமைந்த பன்முகத் தன்மை மிக்க மேடையான பிரகதியின் மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது 22வது கலந்துரையாடலை இன்று நிகழ்த்தினார்.

 

இதற்கு முன் நிகழ்ந்த பிரகதியின் 21 கூட்டங்களில் ரூ. 8.94 லட்சம் கோடி மொத்த மூலதனம் கொண்ட 190 திட்டங்கள் பற்றிய ஒட்டுமொத்த பரிசீலனை நடைபெற்றது. 17 துறைகளில் பொது மக்களின் குறைகளை தீர்ப்பது குறித்தும் அவற்றில் பரிசீலிக்கப்பட்டது.

 

இன்று நடைபெற்ற 22வது கூட்டத்தில் வங்கித் துறை தொடர்பான முறையீடுகளைக் கையாள்வது தீர்ப்பது ஆகியவை குறித்த முன்னேற்றத்தை பிரதமர் பரிசீலித்தார். ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரூபே டெபிட் அட்டைகளின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்வதற்கான வழிகளைக் கண்டறியுமாறு பிரதமர் நிதிசார் சேவைகளுக்கான செயலாளரை கேட்டுக் கொண்டார். இந்தக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ள காப்பீட்டு ஏற்பாடுகள் மூலம் ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்கள் பெற்றுள்ள நிவாரணம் குறித்து பிரதமருக்கு விளக்கப்பட்டது.

 

ரயில்வே, சாலைகள், மின்சாரம், நிலக்கரி, வாயு குழாய் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் 9 கட்டமைப்புத் திட்டங்களின் முன்னேற்றத்தை பிரதமர் பரிசீலித்தார். இந்தத் திட்டங்கள் தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம், மணிப்பூர், மிசோரம், கேரளா, தமிழ்நாடு,த்திஸ்கர், ஜார்க்கண்ட், தில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் இத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியா-மியான்மர் நட்புறவுப் பாலம் குறித்தும் பரிசீலிக்கப்பட்டது. இத்திட்டங்களின் மொத்த மதிப்பீடு ரூ.37,000 கோடியாகும்.

 

ஹிருதய் (தேசிய பாரம்பரிய நகர வளர்ச்சி மற்றும் மேம்படுத்தல் திட்டம்), மாற்றுத் திறனாளிகளுக்கான சுகம்யா பாரத் அபியான் (இந்தியாவில் அணுகுதல் குறித்த பிரச்சாரம்) ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்தும் பிரதமர் பரிசீலனை மேற்கொண்டார்.

 

அரசு இணைய வழிச் சந்தை வசதியை மத்திய அரசின் பல துறைகளும் பயன்படுத்தி வந்த போதிலும், இதுவரை பத்து மாநிலங்கள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டியுள்ளன என பிரதமர் குறிப்பிட்டார். இந்த இணையவழி சந்தை வசதியானது கொள்முதலின் வேகத்தை அதிகரிப்பதோடு, வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர் மேலும் அது உள்ளூர் அளவிலான தொழில் முனைவுக்கும் உதவி செய்வதாக அமைகிறது என்றும் குறிப்பிட்டார். இந்த வசதியை முடிந்த அளவிற்குப் பயன்படுத்தி, சேதாரத்தையும், தாமதத்தையும் குறைக்கவும் முயற்சிக்குமாறு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

ஜிஎஸ்டியைப் பொறுத்தவரையில் நாடுமுழுவதிலுமுள்ள வர்த்தகர்கள் சாதகமாக இருப்பதோடு புதிய வரிவிதிப்பு ஏற்பாட்டை ஏற்றுக்  கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்ட பிரதமர், அவர்களுக்கு வழிகாட்டுதல்தான் தேவைப்படுகிறது; அதை வழங்கினால் அவர்களின் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றும் குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இதன் மூலம் சிறு வர்த்தகர்கள் இந்தப் புதிய முறையை அணுகவும், மேற்கொள்ளவும் வழிவகுக்க முடியும் என்று மாநில தலைமைச் செயலாளர்களை அவர் கேட்டுக் கொண்டார். வியாபாரத்திற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள சிறு வர்த்தக நிறுவனங்கள் ஜிஎஸ்டி வலையத்துடன் பதிவு செய்து கொள்ள வேண்டியதின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். புதிய பாதையை உருவாக்கக் கூடிய இந்த முடிவின் மூலம் சாதாரண மக்களும் வியாபாரிகளும் பயனடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை ஊக்கப்படுத்த தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மிகக் குறைவான அளவில் மட்டுமே ரொக்கப் பணத்தை கையாளும் சமூகத்தை நோக்கிச் செல்ல பாடுபட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

 

****



(Release ID: 1504310) Visitor Counter : 119


Read this release in: English