பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

துணைச் செயலாளர்களின் நிறைவு நாள் நிகழ்வு: 2015ஆம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் பிரதமரிடம் விளக்கக் காட்சிகளை காண்பித்தனர்.

Posted On: 26 SEP 2017 4:57PM by PIB Chennai

2015ஆம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் துணைச் செயலாளர்களாக தங்களது நிறைவு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிரதமர் திரு. நரேந்திர மோடியின் முன்பாக செயல் விளக்கக் காட்சிகளை இன்று காண்பித்தனர்.

 

ஆட்சிமுறை பற்றிய பல்வேறு கருப்பொருட்களின் மீது தேர்ந்தெடுக்கப்பட்ட 8 செயல் விளக்கக் காட்சிகள் அதிகாரிகளால் உருவாக்கப்பட்டிருந்தன. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதமான வகையில் உதவியை வழங்குவது, தனிநபர்களின் கரியமில வாயு செலவை கணக்கெடுப்பது, நிதிசார் சேவைகளுக்குள் மக்களைக் கொண்டு வருவது, கிராமப்புற மக்களின் வருவாயை மேம்படுத்துவது, புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கிராமப்புற வளத்தைப் பெருக்குவது, பாரம்பரிய சுற்றுலா, ரயில்வே பாதுகாப்பு மற்றும் மத்திய ஆயுத காவல்படை ஆகியவை குறித்ததாக இந்த  விளக்கக் காட்சிகள் அமைந்திருந்தன.

 

இத்தருணத்தில் உரையாற்றிய பிரதமர் அரசின் இளநிலை அதிகாரிகளும் முதுநிலை அதிகாரிகளும் ஒருவரோடு ஒருவர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதில் நிறைய நேரத்தை செலவிட்டது குறிப்பிடத்தக்கதாகும் எனக் குறிப்பிட்டார். இளம் அதிகாரிகள் இத்தகைய கலந்துரையாடல்களிலிருந்து அனைத்து வகையான சாதகமான அம்சங்களையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ஜி எஸ் டி வரியை அமல்படுத்துவது, டிஜிட்டல் முறையிலான பரிமாற்றங்களை , குறிப்பாக பீம் கைபேசி செயலியின் மூலமாக, அதிகரிப்பது ஆகிய விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இளம் அதிகாரிகளை பிரதமர் கேட்டுக் கொண்டார்.


 

 

அவரவரது துறைகளில் அரசின் இணைய வழியிலான சந்தையை மேற்கொள்வதை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவர் அனைத்து அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டார். இந்த ஏற்பாடு இடைத்தரகர்களை அகற்றிவிடும்; அதன் விளைவாக அரசுக்கு பணம் சேமிப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொது இடங்களில் காலைக்கடன்களைக் கழிக்கும் முறையை அகற்றுவது, கிராமப்புறங்களுக்கு மின்சார வசதி போன்றவற்றுக்கான இலக்குகளை உதாரணமாக எடுத்துக் கூறிய பிரதமர், இந்த இலக்குகளை 100 சதவீதம் நிறைவேற்றுவதை நோக்கி செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். 2022ஆம் ஆண்டிற்குள் நமது நாட்டின் விடுதலைப் போராட்டத் தியாகிகளின் கனவான இந்தியாவை உருவாக்குவதை நோக்கி செயல்படுமாறும் அவர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். எளிமையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்துள்ள அதிகாரிகள் இளம் மாணவர்களை சந்தித்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இத்தகைய கருத்துப் பரிமாற்றம்தான் கருணைக்கு வழிவகுக்கிறது என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

இன்று அதிகாரிகளின் முக்கிய நோக்கம் என்பது நாட்டின், அதன் குடிமக்களின் நலனே ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார். குழு உணர்வோடு வேலை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளை வற்புறுத்திய அவர், தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் இத்தகைய குழுக்களை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
 

***

 

 

 

 



(Release ID: 1504299) Visitor Counter : 86


Read this release in: English