பிரதமர் அலுவலகம்

வாரணாசியில் தூய்மைப் பணியில் பிரதமர் பங்கேற்பு, பசுதான ஆரோக்ய மேளாவை பார்வையிட்டார், ஷாஹன்ஷாபூரில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்

Posted On: 23 SEP 2017 1:23PM by PIB Chennai
Press Release photo

பிரதமர் திரு. நரேந்திர மோடி, வாரணாசியில் ஷாஹன்ஷாபூர் கிராமத்தில் இரட்டைக் குழி கழிவறை கட்டும் பணியில் உடல் உழைப்பு தானம் செய்தார். கிராம மக்களுடன் அவர் கலந்துரையாடினார். கிராமத்தை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாததாக உருவாக்குவதாக மக்கள் உறுதியேற்றனர். கழிவறைக்கு ``இஜ்ஜத் கர்'' (கவுரவ இல்லம்) என பெயரிட்ட அவர்களின் உந்துதலை அவர் பாராட்டினார்.

கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பசுதான ஆரோக்ய மேளாவை பிரதமர் பார்வையிட்டார். அந்த வளாகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சுகாதாரம் மற்றும் மருத்துவ செயல்பாடுகள் பற்றி அவருக்கு விவரிக்கப்பட்டது. கால்நடைகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்வது, அல்ட்ரா சோனோகிராபி எடுப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இந்த நிகழ்ச்சியின் போது மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், பசுதான ஆரோக்ய மேளாவுக்கு வெற்றிகரமாக ஏற்பாடு செய்தமைக்காக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும், மாநில அரசுக்கும் பாராட்டு தெரிவித்தார். மாநிலத்தில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு பயன்தரக் கூடியதாக இந்தப் புதிய முயற்சி இருக்கும் என்று அவர் கூறினார். பால் உற்பத்தி அதிகரிப்பது மக்களுக்கு பொருளாதார பலன் கிடைக்க வழி வகுக்கும் என்றார் அவர். நாட்டின் பிற பகுதிகளைப் போல, பால் உற்பத்தித் துறையில் கிடைக்கும் லாபங்களை கூட்டுறவு அமைப்புகள் ஒன்று சேர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நல்ல நிர்வாகத்தில் மக்களின் நலனுக்குதான் முன்னுரிமை என்று கூறிய பிரதமர், 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாய வருமானங்களை இரட்டிப்பாக உயர்த்துவது என்ற வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்தினார். மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு கணிசமான பலன்களைத் தருவதாக அவர் குறிப்பிட்டார். நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் காண விரும்பிய இந்தியாவை 2022 ஆம் ஆண்டுக்குள் உருவாக்குவதில் ஒவ்வொருவரும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

``தூய்மை நமது பொறுப்பு'' என்ற எண்ணம், எல்லோரிடத்திலும் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஏழைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது, நல்வாழ்வை உறுதி செய்வதில் இது முக்கிய பங்காற்றும் என்றார் அவர். ஸ்வச்தா என்பது தனக்கு பிரார்த்தனை போன்றது என்றும், ஏழைகளுக்கு சேவை செய்வதற்கு தூய்மை என்பதும் ஓர் வழிமுறை என்றும் பிரதமர் கூறினார்.
 

 

*****


(Release ID: 1503879) Visitor Counter : 113


Read this release in: English