விவசாயத்துறை அமைச்சகம்

ரபி பருவ வேளாண்மை குறித்த தேசிய மாநாடு – 2017-18

Posted On: 20 SEP 2017 6:17PM by PIB Chennai

ரபி பருவ இயக்கத்துக்கான வேளாண்மை குறித்த தேசிய மாநாடு – 2017-18, புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இம்மாதம் 19-20 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மாநாட்டை மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. ராதா மோகன் சிங் தொடக்கி வைத்தார். இந்த துறைக்கான இணை அமைச்சர்கள் திரு. ஜி. எஸ். ஷெக்காவாத், திருமதி. கிருஷ்ணா ராஜ் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர், வேளாண் ஆராய்ச்சி மற்றும் பொறியியல் துறை செயலாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை தலமை இயக்குநர், வேளாண் உற்பத்தி ஆணையாளர்கள், முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள், மாநில வேளாண் துறை இயக்குநர்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை விஞ்ஞானிகள் மற்றும் சம்பந்தப்பட்டத் துறைகள், மத்திய அரசு அமைப்புகள், மாநில அரசு அமைப்புகள் ஆகியவற்றின் அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

     மாநாட்டில் தொடக்க உரையாற்றிய திரு ராதா மோகன் சிங் 2016-17 –ல் மிக உயரிய உற்பத்தி அளவான 275 மில்லியன் டன் உணவு தானியங்கள் மற்றும் 32 மில்லியன் டன் எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்து சாதனை புரிந்த மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் சாதனையைப் பாராட்டுவதாகக் கூறினார். சமீபத்திய மற்றும் நான்காவது, முன்கூட்டிய மதிப்பீடுகள் அடிப்படையில் இந்த விவரங்களை அவர் தெரிவித்தார். 2016-17 –ல் பயறு வகை உற்பத்தியில் 22.95 மில்லியன் டன் என்ற உயர் அளவை எட்டியுள்ளதாகவும் இதற்கு முந்தைய சாதனை 2013-14 –ல் உற்பத்தி செய்யப்பட்ட 19.25 மில்லியன் டன் என்றும் அவர் கூறினார். 2017 கரீப் பருவத்தில் நாட்டின் கிழக்குப் பகுதியிலும், சில மேற்கு பகுதி மாநிலங்களிலும் பெய்த பலத்த மழை                                                                                                                      காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலமை குறித்து கவலை தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் ரபி பருவத்தில் கூடுதல் நிலப்பரப்பில் காலத்துடன் விவசாயப் பணிகளை மேற்கொள்ள இடுபொருட்கள் விநியோகத்தை உறுதி செய்யுமாறு மாநிலங்களை வலியுறுத்தினார்.  

     விவசாயத்திற்கு அரசு அளித்துள்ள உறுதி மொழிகளை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார். நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. 62,376 கோடி ஒதுக்கி இருப்பது இத்துறைக்கு அளிக்கப்படும் முன்னுரிமைக்கு அத்தாட்சி என்று அமைச்சர் கூறினார். நீர்ப் பாசனம், இயற்கை விவசாய மேம்பாடு, அனைத்து விவசாயிகளுக்கும் மண்வள அட்டை வினியோகம், விவசாயிகளுக்கு, குறிப்பாக கடன் பெறாத விவசாயிகளுக்கு காப்பீடு வசதி, மின்னணு தேசிய விவசாய சந்தைத் திட்டத்தை வலுப்படுத்துதல், தோட்டக்கலை, பால்பண்ணை / கால்நடை வளர்ப்பு /  மீன்வளர்ப்பு போன்ற துறைகள் மேம்பாடு, ஆகியவற்றிற்கு முக்கிய கவனம் செலுத்துவது அரசின் நோக்கம் என்றார். பிரதம மந்திரி விவசாய மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், பரம்பராகாட், விவசாய முன்னேற்றத் திட்டம், மண்வள திட்டம், வேப்பெண்ணெய் தடவிய யூரியா, மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் போன்ற அரசின் புதிய திட்டங்கள் 2022 –ம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் இலக்கை அடைய உதவும் என்று திரு. ராதா மோகன் சிங் கூறினார். விவசாயிகளைத் திறன்பட சென்றடையும் வகையில் விவசாயி கால்சென்டர், தூர்தர்ஷன் விவசாயி அலைவரிசை ஆகியவற்றையும் தகவல் தொழில்நுட்பத்தையும் பயன் படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய விவசாயத் துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

     வேளாண் கூட்டுரவு மற்றும் விவசாயிகள் நலத்துறையின் முக்கிய திட்டங்களின் சாதனைகளை திரு. ராதா மோகன் சிங் கோடிட்டுக் காட்டினார். பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த மாநில அரசுகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தரமான விதைகளையும் இதர இடுபொருட்களையும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

     இடுபொருட்களை வழங்குதல், ஆதரவு சேவைகள் அளித்தல் மூலம் சம்மந்தப்பட்ட அமைச்சகங்களும் துறைகளும் நெருங்கி ஒத்துழைத்து தேசிய இலக்கான விவசாயிகளின் வருமானத்தை 2022 –க்குள் இரட்டிப்பாவதை அடைய உதவுமாறு அமைச்சர் கேட்டு கொண்டார்.

     விவசாயிகள் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர், மாவட்டங்கள் மாநிலங்கள் இடையே விளைச்சல் வேறுபாடுகளை குறைக்கவும், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் வலியுறுத்தினார். மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தும் வகையில் விவசாயி மையங்களின் கட்டமைப்பை முழு அளவில் பயன்படுத்திக்கொள்ளுமாறும் திரு. சிங் கேட்டுக் கொண்டார்.

     2022 –ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் முக்கிய நோக்கத்துடன் நடைபெற்ற இந்த இரண்டு நாள் மாநாட்டில் கீழ்க்கண்ட முக்கிய தலைப்புகள் குறித்து குழு விவாதங்கள் நடைபெற்றன.

  1. மண்வள அட்டைத் திட்டம் – ஆய்வு மற்றும் மேம்பாடு.
  2. கடன்பெறாத விவசாயிகளுக்கு காப்பீடு அளித்தல், பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் வரும் நிலப்பரப்பும், பயிர்களும் மற்றும் சிறப்பான திறன் வளர்ப்புக்கு நவீன தொழில்நுட்ப பயன்பாடு.
  3. மின்னணு தேசிய வேளாண் சந்தை – மேம்பாட்டுக்கான கருத்துகள்.
  4.  ஒருங்கினைந்த பூச்சிக்கொல்லி நிர்வாகம் - நிலைத்த விவசாயத்திற்கான அனுகுமுறைகள்.
  5. வறட்சி மேலாண்மை.
  6. அறுவடைக்குப் பிந்தய நிர்வாக ஆய்வு மற்றும் நாட்டின் விலைமதிப்பு சங்கிலி.
  7. பின்தங்கிய மாவட்டங்கள் 30-ல் வறட்சி ஏற்படாமல் பாதுகாப்பு.
  8. விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்.

       ஒவ்வொரு குழுவுக்கும் மாநில அரசின் உயர் அதிகாரி ஒருவர் தலைமை தாங்கினார். இந்த அதிகாரிகள், மாநிலங்கள், உயர் அதிகாரிகள், இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை மற்றும் இதர நிபுணர்களை கலந்து ஆலோசித்து இந்த தலைப்புகளிலான பரிந்துரைகளை சமர்ப்பித்தனர். இந்த பரிந்துரைகள் மாநாட்டின் 2-ம் நாள் நடைபெற்ற முழு அளவு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கபட்டன.

இவை தவிர விவாதத்திற்கான சூழலை உருவாக்கும் வகையில் கீழ்க்கண்ட 9 பெரிய திட்டங்கள் குறித்த விவரங்களை இணைச்செயலாளர்களும் முதுநிலை அதிகாரிகளும் கணினி வாயிலாக வழங்கினார்கள்.

  1. கரீப் பருவ ஆய்வு மற்றும் ரபி பருவ எதிர்ப்பார்ப்புகள்
  2. விதைகள் தரக் கட்டுப்பாடு
  3. மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ.நாம்)
  4. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்
  5. மண்வள அட்டை
  6. இயற்கை விவசாயம்
  7. பிரதம மந்திரி விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம்
  8. தோட்டக்கலை / குளிர் தொடர் சங்கிலி
  9. தேசிய விவசாயிகள் மேம்பாட்டுத்திட்டம்

                மநாட்டின் போது மாநில அரசுகளுக்கு அவை சார்ந்த பிரச்சினைகளை எழுப்ப நேரம் ஒதுக்கப்பட்டது. இதனை பயன்படுத்திக் கொண்ட பல மாநிலங்கள் அரசின் பெரிய திட்டங்களின் பல்வேறு அம்சங்கள் குறித்து நல்ல கருத்துகளையும் தெரிவித்தனர். மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர், இணை அமைச்சர்கள், செயலாளர்கள் விவசாய கூட்டுறவு மற்றும் விவசாயிகளின் நலன் துறை இயக்குநர், வேளாண் ஆராய்ச்சி மற்றும் பொறியியல் துறை செயலாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை தலமை இயக்குநர் பல்வேறு மாநிலங்களின் உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்ற இந்த மாநாடு விவசாயம் சார்ந்த பலதுறை பிரசினைகள் குறித்து விவாதிக்க ஒரு சிறந்த மேடையாகவும் மாநில அரசுகள் எழுப்பிய பல்வேறு பிரசினைகளுக்குத் தீர்வு காண உதவியாகவும் அமைந்திருந்தது.

*******



(Release ID: 1503783) Visitor Counter : 342


Read this release in: English