உள்துறை அமைச்சகம்

சென்னை விமான நிலையத்தில் சி.பி.ஆர்.என். அவசர நிலைமைக்கான பயிற்சித் திட்டம்.

Posted On: 18 SEP 2017 3:05PM by PIB Chennai

விமான நிலையங்களில் வேதியியல், உயிரியல், கதிரியக்கவியல், அணுப்பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் அச்சுறுத்தல்களை உள்ளடக்கிய சி.பி.ஆர்.என். அவசர கால நிலைமையை கையாளுவதற்கு விமான நிலையங்களின் அவசர கால பணியாளர்களின் தயார்நிலையை மேம்படுத்துவதற்கான அடிப்படை பயிற்சி திட்டத்தை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ.) நடத்தியது.

 

இந்த பயிற்சி திட்டம் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் அணு மருத்துவம் மற்றும் அது தொடர்பான அறிவியல் நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடத்தப்படுகிறது.

 

நமது விமான நிலையங்களில் சி.பி.ஆர்.என். பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய நடவடிக்கை இது என்று என்.டி.எம்.ஏ. உறுப்பினர் திரு. ஆர்.கே. ஜெயின் கூறினார். சி.பி.ஆர்.என். அவசர நிலையை கையாளுவதற்கு சிறப்பு திறன்களும் முயற்சிகளும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

 

சென்னை காமராஜ் விமான நிலையத்தில் இன்று தொடங்கிய இந்த பயிற்சி திட்டத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறையின் செயலாளரும் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் எஸ். கிரிஸ்டோபர் தொடங்கி வைத்தார்.

இந்தப் பயிற்சி திட்டத்தில் விளக்க உரைகளுடன் நேரடி செயல்முறை விளக்கம் உள்ளிட்ட களப் பயிற்சி இடம் பெற்றது. தனிநபர் பாதுகாப்பு கருவிகள் பயன்பாடு, அபாயம் விளைவிக்கும் பொருட்களைக் கண்டு பிடித்து செயலிழக்கச் செய்தல் ஆகியன பயிற்சியில் இடம் பெற்றுள்ளன. இந்த பயிற்சி திட்டத்தினால் விமான நிலைய அவசர காலப் பணியாளர்கள் சி.பி.ஆர்.என். அவசர நிலைமையைக் கையாள அறிந்து கொள்வதுடன் முதல் உதவி அளித்தல், தொடக்க கால உளவியல்-சமூகவியல் ஆதரவு அளித்தல் போன்றவற்றையும் அறிந்து கொள்கின்றனர். இந்த ஒரு வார பயிற்சியில் சி.பி.ஆர்.என். அவசர நிலைமையின் பல்வேறு அம்சங்களை குறித்து மொத்தம் 200 பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

 

“சிறிய சி.பி.ஆர்.என். தொடர்பான சம்பவம் கூட விமான நிலையத்தில் மக்களிடையே பதற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தக் கூடும், எனவே, உயர்நிலைப் பயிற்சி பெற்ற சிறந்த கருவிகளைக் கொண்ட அதிரடி நடவடிக்கைக் குழு வரும் வரை இத்தகைய சம்பவங்களில் விமான நிலைய அவசர நிலை பணியாளர்கள் உரிய வகையில் நடவடிக்கை எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.” என்று என்.டி.எம்.எ. உறுப்பினர் டாக்டர் டி.என். சர்மா தெரிவித்தார். நாடெங்கும் உள்ள விமான நிலையங்களில் திட்டமிடப்பட்டுள்ள இத்தகைய பயிற்சி திட்டங்களில் இது முதலாவதாகும்.

*******

 

 



(Release ID: 1503394) Visitor Counter : 100


Read this release in: English