விவசாயத்துறை அமைச்சகம்
தேசிய பால்பண்ணை வளர்ச்சி வாரியம் (என்.டி.டி.பி.) வழங்கும் தரச்சான்றானது, பாதுகாப்பும் தரமும் நிறைந்த பால் மற்றும் பால் பொருட்களை கூட்டுறவு நிறுவனங்களிடம் இருந்து பெறுவதைக் குறிக்கிறது. – திரு. ராதா மோகன் சிங்
பால் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடம் போட்டியைத் தூண்டும் வகையிலும், அதிவிருப்ப தரச்சான்றாகவும் என்.டி.டி.பி-யின் சான்று விளங்குகிறது.
பால் மற்றும் பால் பொருட்கள், பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து நுகர்வோரை சென்றடையும் வரை போதுமான அளவு மற்றும் சரியான தரத்தில் கிடைப்பதை மேம்படுத்துவது இந்த தரச் சான்றின் நோக்கமாக இருக்கிறது.
Posted On:
20 JUL 2017 1:05PM by PIB Chennai
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.ராதா மோகன் சிங், இன்று தேசிய பால்பண்ணை வளர்ச்சி வாரியத்தின் (என்.டி.டி.பி.) தரத்தைக் குறிக்கும் அடையாளச் சான்றினை புதுடெல்லி, கிருஷி பவனில் அறிமுகப்படுத்தினார். மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்திற்கான இணை அமைச்சர் திரு. சுதர்சன் பகத், கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன்பிடித் துறை செயலாளர் திரு.தேவேந்திர செளத்ரி, தேசிய பால்பண்ணை வளர்ச்சி வாரியத்தின் தலைவர் திரு.திலிப் ராத் போன்றவர்கள் விழாவில் கலந்துகொண்டார்கள். உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் மேலாண்மை திட்டத்தின் அடிப்படையில், தர மதிப்பீடு பெற்றவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 உற்பத்தி நிலையங்களுக்கு அமைச்சர் சான்றிதழ் வழங்கினார்.
அமைச்சர் பேசுகையில், தரத்தின் அடையாளமாகத் திகழும் என்.டி.டி.பி-யின் தரச்சான்றானது, பாதுகாப்பு குடை போன்று செயல்படும் என்று சொன்னார். மேலும் பாதுகாப்பான, தரமான பால் மற்றும் பால் பொருட்களை பால் கூட்டுறவு நிறுவனங்கள் உற்பத்தி செய்வதன் அடையாளமாக இது இருக்கும். சிறந்த தரத்தின் அடையாளமாக இந்த தரச்சான்று செயல்படுவதால், நுகர்வோரின அங்கீகாரச் சின்னமாகவும் இது திகழும் என்றார்.
அமைச்சர் பேசியபோது, ‘பால் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடம் போட்டியைத் தூண்டும் வகையில் அதிவிருப்ப அடையாளச் சின்னமாக என்.டி.டி.பி-யின் தரச்சான்று விளங்குகிறது. பால் கூட்டுறவு நிறுவனங்கள் மீது நுகர்வோருக்கு அதிக நம்பிக்கை ஏற்படுத்துவதற்கும் இந்த சான்று உதவி புரிகிறது’ என தெரிவித்தார். வேளாண் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ‘பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோருக்கு போதுமான அளவிலும் சரியான தரத்திலும் கொண்டுபோய் சேர்க்கும் இணைப்பாகவும் இது பயன்படும், தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறதே தவிர, கூடுதலாக வேறு வகையிலான பாதுகாப்பு மற்றும் தர மேலாண்மை நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது’ எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ‘தரத்திற்கான சான்று தரும் நடவடிக்கைகளை கவனிப்பதற்காக 11 உறுப்பினர்கள் அடங்கிய மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன்பிடித் துறையில் இருந்து உறுப்பினர்களும், பிராந்தியங்களின் பிரதிநிதியாக நான்கு கூட்டமைப்புகளும் இதில் பங்கு பெறுகிறது. மேலும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தில் (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) இருந்து மேலாண்மை குழுவில் ஓர் உறுப்பினரும், பால் பண்ணையிலிருந்து இரண்டு நிபுணர்களும் குழுவில் இடம் பெறுவார்கள். இந்தத் தரச்சான்று பெறுவதற்கு ஆர்வமுள்ள கூட்டமைப்புகள், கூட்டுறவு பால் பண்ணைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு பால்பண்ணைகளும் முன்வரலாம் என்று அமைச்சர் தெரிவித்தார். உணவுப் பாதுகாப்பு மற்றும் தர மேலாண்மை சோதனைக்கு உட்படும் பால் மற்றும் பால் பொருட்கள் மட்டுமே இந்த தரச்சான்று பெறுவதற்கு தகுதியுடையவை ஆகும்.
வேளாண் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ‘இந்த தரச்சான்று மூன்று வருடங்கள் செல்லுபடியாகும். தர மேலாண்மை மற்றும் உணவு பாதுகாப்புத் தரத்தின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் வகையில் தரச்சான்று வழங்கப்பட்டாலும், ஆண்டுக்கு ஒரு முறை தரத்தை உறுதிபடுத்துவதற்குத் தேவையான அடிப்படை பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றும் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 2016-ம் ஆண்டு தரச்சான்று வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதில் இருந்து, நாடு முழுவதுமுள்ள கூட்டுறவு நிறுவனங்களிடம் இருந்து என்.டி.டி.பி-க்கு 55 விண்ணப்பங்கள் வந்திருப்பதாக திரு.சிங் தெரிவித்தார். இந்தப் பட்டியலில் இருந்து 14 நிறுவனங்கள் முதல் இரண்டு கட்ட பரிசோதனை நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கின்றன. மீதமுள்ள 31 பால் பண்ணைகளில் எடுக்கப்படவேண்டிய முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு இந்த நிறுவனங்களுக்கு 6 முதல் 9 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தின் முயற்சிகளை எளிதாக்கவும் மற்றும் உறுதியாக்கவும் என்.டி.டி.பி. செயல்படுகிறது. மேலும் நாடு முழுவதும் உள்ள பால் பண்ணைகளில் மேற்கொள்ள வேண்டிய தர நடவடிக்கை குறித்த விரிவான வழிகாட்டி ஆவணங்களையும் அனுப்பிவருகிறது.
இந்த விழாவில் திரு. சுதர்சன் பகத் பேசுகையில், ‘இதில் பங்குபெறும் பால் பண்ணைகளின் செயல்பாட்டு நெறிமுறைகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கையானது முன் கண்காணிப்பு மற்றும் இறுதிக் கண்காணிப்பு என இரண்டு வழிகளில் செயல்படுத்தப்படும். முன் கண்காணிப்பு என்பது பொதுவாக கிராம அளவிலான கொள்முதல், உள்கட்டமைப்பு வசதி, பயிற்சி பெற்ற ஊழியர்கள் மற்றும் சில்லறை விற்பனை போன்றவற்றை உள்ளடக்கியது. இந்தக் கண்காணிப்பு நெறிமுறைகளில் 70% மதிப்பெண் பெறும் நிறுவனங்கள் மட்டுமே இறுதிக் கண்காணிப்புக்குத் தகுதி பெறுகின்றன. இறுதித் தகுதி கண்காணிப்பு மூன்று நிபுணர்களால் மேற்கொள்ளப்படும், இவர்களில் ஒருவர் வெளியில் இருந்து நியமிக்கப்பட்டவராக இருப்பார். இறுதி கண்காணிப்பில் பால் மற்றும் பால் பொருட்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மதிப்பீடு செய்யப்படுகிறது’’ என தெரிவித்தார்..
(Release ID: 1502940)
Visitor Counter : 124