பிரதமர் அலுவலகம்

பெலாரஸ் அதிபரின் அரசுமுறைப் பயணத்தின்போது பிரதமர் வெளியிட்ட ஊடக அறிக்கை (செப்டம்பர் 12, 2017)

Posted On: 12 SEP 2017 6:07PM by PIB Chennai

மேதகு அதிபர் அலெக்சாண்டர் லூகாஷென்கு அவர்களே,

நண்பர்களே,

ஊடக நண்பர்களே,

 

இந்தியாவுக்கு அதிபர் லூகாஷென்கு அவர்களை வரவேற்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவு ஏற்பட்டு, தற்போது 25 ஆண்டுகள் ஆனநிலையில் அவரது பயணம் அமைந்துள்ளது.

 

இதற்கு முன்னதாக, 1997 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் அதிபர் லூகாஷென்குவை இந்தியாவுக்கு வரவேற்கும் வாய்ப்புகளை நாம் பெற்றிருக்கிறோம். இந்தப் பயணத்தின்போது, இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை காணும் வாய்ப்பையும், அனுபவத்தையும் நீங்கள் பெறுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

 

இன்று நமது பேச்சுவார்த்தைகள், விரிவான வகையிலும், முன்னோக்கிய பார்வை கொண்டதாகவும் அமைந்திருந்தது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் நமது நல்லுறவை அவை வெளிப்படுத்தியுள்ளன. இருதரப்பு விவகாரங்கள், பிராந்திய மற்றும் சர்வதேச வளர்ச்சி குறித்து நாங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். நமது நல்லுறவின் கட்டமைப்பை மறுஆய்வு செய்தோம். இதனை மேலும் விரிவுபடுத்துவதற்கான யோசனைகள் மற்றும் முயற்சிகளையும் பரிசீலனை செய்தோம். ஒத்துழைப்புக்கான அனைத்து அம்சங்களிலும் நமது பரிமாற்றத்தை வலுப்படுத்த முடிவுசெய்துள்ளோம்.


நமது மக்கள் பயனடையும் வகையில், நமது ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தையும், ஆர்வத்தையும் அதிபர் லூகாஷென்குவிடம் நான் கண்டேன்.


இதன் இறுதியாக, பொருளாதார இணைப்புகளை விரிவுபடுத்த நாம் பணியாற்ற உள்ளோம். நமக்கு இடையே இயற்கையாகவே ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் தன்மையை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும்.

 

நமது நிறுவனங்களுக்கு இடையே பொருட்களை வாங்குவோர் – விற்பனையாளர் என்ற நிலையிலிருந்து, தீவிர ஒத்துழைப்பு உருவாக வேண்டும். மருந்துப் பொருட்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, கனரக இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் துறைகளில் அபரிமிதமான வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. கடந்த ஆண்டில், மருந்துப் பொருட்கள் துறையில் இந்திய நிறுவனங்கள் மூன்று கூட்டு முயற்சிகளை (joint ventures) மேற்கொண்டு சாதகமான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

 

டயர்கள், வேளாண்-தொழில் துறை இயந்திரங்கள், சுரங்க உபகரணங்கள் உற்பத்தியிலும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் உள்ளன. இதேபோல, கனரக கட்டுமான இயந்திரங்களில், இந்தியாவின் தேவை அதிகரித்து வருகிறது, தொழில் துறை ரீதியாக பெலாரஸ் பலம் பெற்று விளங்குகிறது.

 

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ், பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்களை கூட்டாக உருவாக்கவும், உற்பத்தி செய்யவும் நாங்கள் ஊக்குவிக்க உள்ளோம். பெலாரசில் குறிப்பிட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்காக, கடந்த 2015-ம் ஆண்டில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இந்தியா வழங்க முன்வந்த கடனை பயன்படுத்திக் கொள்வது குறித்த ஆலோசனையில் நாம் முன்னேற்றம் பெற்றுள்ளோம்.

 

ஈரோஆசியா பொருளாதார ஒன்றியம் (EEU), சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து முனையம் போன்ற பல்துறை பொருளாதார நடவடிக்கைகளின் கீழ், பெலாரசுடன் இந்தியா இணைந்துள்ளது. ஈரோஆசியா பொருளாதார ஒன்றியத்துடன் தாராள வர்த்தக உடன்பாட்டை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தையை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

 

நண்பர்களே,

 

வலுவான ஒத்துழைப்புக்கு, கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு துறையாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் விளங்கி வருகிறது. இந்தத் துறையில், நீண்டகால கூட்டாளியாக பெலாரஸ் இருந்து  வருகிறது.

 

உலோகவியல் மற்றும் மூலப்பொருட்கள், சின்னஞ்சிறிய மூலப்பொருட்கள் (nano-materials), உயிரியியல் மற்றும் மருத்துவ அறிவியல், ரசாயனம் மற்றும் பொறியியல் அறிவியல் போன்ற துறைகளில் புத்தாக்கம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்தப் பணிகளில் நமது இளைஞர்களைப் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

 

பெலாரஸின் தொழில்நுட்பங்களை எடுத்துரைக்கும் வகையில், இந்தியாவில் தொழில்நுட்ப செயல்விளக்க மையத்தை அமைப்பதற்கான வாய்ப்புகளை நாங்கள் ஆய்வுசெய்து வருகிறோம்.

 

பெலாரசுடனான இந்தியாவின் ஒத்துழைப்பில், மற்றொரு பரிமாணமாக, வளர்ச்சி ஒத்துழைப்பு விளங்கி வருகிறது. இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத்  திட்டத்தில் தீவிரமாக பங்கேற்றுள்ள நாடாக பெலாரஸ் விளங்கி வருகிறது.

 

சர்வதேச அமைப்புகளில், பரஸ்பரம் பயனளிக்கும் விவகாரங்களில் நமது இரு நாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்புடனும், பொதுவான நிலைப்பாட்டுடனும் உள்ளோம்.

சர்வதேச அமைப்புகளில், ஒவ்வொருவருக்கும் பரஸ்பரம் ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை இந்தியாவும், பெலாரசும் தொடர்ந்து விரிவுபடுத்தும்.

 

நண்பர்களே,

 

அதிபர் லூகாஷென்குவும், நானும், நமது மக்களுக்கு இடையேயான கலாச்சார பரிமாற்றத்தின் நீண்டகால வரலாறு குறித்து விவாதித்தோம். இவை நல்லெண்ணத்தின் அடிப்படையில் உருவானது. இந்தியாவின் கலாச்சாரம், உணவு, திரைப்படம், இசை, நடனம், யோகா, ஆயுர்வேதா ஆகியவற்றின் மீது ஏராளமான பெலாரஸ் நாட்டவர்கள், தீவிர ஆர்வம் காட்டிவருவதை நான் அறிந்துகொண்டேன்.

 

சுற்றுலா மற்றும் மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்களை நாம் வலுப்படுத்துவதற்கு மிகப்பெரும் வாய்ப்புகள் இருப்பதை நான் காண்கிறேன். இதன்மூலம், நமது நல்லுறவில் வலுவான அடித்தளத்தை அமைக்க முடியும்.

 

இறுதியாக, நமது மதிப்புமிகுந்த விருந்தாளியாக இருப்பதற்காக அதிபர் லூகாஷென்குவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இன்றைய ஒருமித்த முடிவுகளை செயல்படுத்துவதில் வரும் நாட்களில் மற்றும் மாதங்களில் பெலாரஸுடன் இந்தியா நெருங்கிப் பணியாற்றும். இந்தியாவில் தங்கியிருக்கும் காலம், சிறப்பான அனுபவத்தை அளிக்க அதிபர் லூகாஷென்குவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

உங்களுக்கு எனது நன்றி.

****


(Release ID: 1502700) Visitor Counter : 127


Read this release in: English