மத்திய அமைச்சரவை

பணிக்கொடை வழங்கல் (திருத்த) மசோதா 2017- ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 12 SEP 2017 5:25PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பணிக்கொடை வழங்கல் (திருத்த) மசோதா 2017- ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தனியார் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் / CCS (ஓய்வூதிய) விதிகளின் கீழ் வராத அரசுக்கு கட்டுப்பட்ட தன்னாட்சி நிறுவனங்களில், பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக பணிக்கொடை வரம்பை அதிகபட்ச அளவுக்கு உயர்த்த இந்த மசோதா வகை செய்கிறது.

பின்னணி :

10 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு பணிக்கொடை வழங்கல் சட்டம், 1972 பொருந்தும். பணி ஓய்வு என்பது வயது முதிர்வால் ஏற்பட்டதாக இருந்தாலும் அல்லது உடல் ஊனம் காரணமாக ஏற்பட்டாலும் அல்லது உடலின் முக்கிய அங்கம் செயல் இழந்து போவதால் ஏற்பட்டாலும், பணி ஓய்வுக்குப் பிறகு தொழிலாளருக்கு சமூகப் பாதுகாப்பு கிடைக்கும் வகையில் இந்தச் சட்டம் பிரதானமாக உருவாக்கப்பட்டது. எனவே, தொழிலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் வருமானம் ஈட்டும் தொழிலில் உள்ளவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிக்கும் முக்கியமான சட்டமாக, பணிக்கொடை வழங்கல் சட்டம், 1972 உள்ளது.

இந்தச் சட்டத்தின் கீழ் தற்போது பணிக்கொடைக்கான அதிகபட்ச வரம்பு ரூ.10 லட்சமாக உள்ளது. மத்திய சிவில் பணிகள் (ஓய்வூதிய) விதிகள், 1972ல் பணிக்கொடை தொடர்பான விதிகளும் இதே போலத்தான் உள்ளன. 7வது மத்திய ஊதியக் குழு அமல் செய்யப்படுவதற்கு முன்பு CCS (ஓய்வூதிய) விதிகள், 1972-ல் வரம்பு ரூ.10 லட்சமாக இருந்தது. இருந்தபோதிலும், 7வது மத்திய ஊதியக் குழு அமல் செய்யப்பட்ட நிலையில், அரசு ஊழியர்களைப் பொருத்த வரையில், 1.1.2016-ல் இருந்து இப்போது இந்த வரம்பு ரூ.20 லட்சமாக மாறியுள்ளது.

எனவே, பணவீக்கம் மற்றும் தனியார் துறையில் பணியாற்றுபவர்களுக்கும் கிடைத்துள்ள ஊதிய உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பணிக்கொடை வழங்கல் சட்டம், 1972-ன் கீழ் வரும் ஊழியர்களுக்கு பணிக்கொடை தகுதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று அரசு கருதுகிறது. அதற்கேற்ப பணிக்கொடை வழங்கல் சட்டம், 1972 -ஐ திருத்தம் செய்வதற்கான நடைமுறைகளை அரசு தொடங்கியிருந்தது.



(Release ID: 1502604) Visitor Counter : 1261


Read this release in: English