சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

போலி மருந்துகள்

Posted On: 04 AUG 2017 1:14PM by PIB Chennai

நாட்டில் மருந்துகளின் தரத்தை உறுதி செய்வதில், மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பும் (CDSCO) மற்றும் மாநிலங்களில் செயல்படும் மருந்து தரநிலை கட்டுப்பாட்டு அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன;  நாடெங்கிலும் ஏராளமான மருந்துகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, மத்திய, மாநில அரசுகளின் ஆய்வகங்களில் பரிசோதனை உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன. ஒரு சில நேர்வுகளில், சோதிக்கப்பட்ட மாதிரிகள், தேவையான தரநிலையில் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு தரநிலையில் இல்லாத மருந்துகளின் விவரங்கள் உடனடியாக, சம்பந்தப்பட்ட மத்திய அரசு அல்லது மாநில அரசு கட்டுப்பாட்டு அமைப்பிற்கு தெரிவிக்கப்படுகிறது.

 

                    மருந்துகளின் தரம், பாதுகாப்புத்தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் எவ்வித சமரசமும் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. இதன் அடிப்படையில், பல தொடர் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. சட்ட விதிகளை மேலும் வலிமைப்படுத்துவது;  உற்பத்தியாளர்களுக்கும் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் பயிற்சி முகாம்கள் நடத்துவது மற்றும் பயிற்சி அளிப்பது; ஆபத்து விளைவிக்கும் அம்சங்கள் குறித்து ஆய்வுகள் நடத்துவது போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

 

                    மருந்துகள் மற்றும் அழகுப்பொருட்கள் சட்டம், 1940 மற்றும் விதிகள், 1945 கூறும்  விதிகளின் அடிப்படையில், நாட்டில் மருந்துகள் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் ஆகியன, உரிமம் வழங்கும் மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் அமைப்பின் வழி முறைப்படுத்தப்படுகின்றன. மருந்துகள் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான உரிமங்கள், மாநில உரிமம் வழங்கும் ஆணையத்தால் (SLA) வழங்கப்படுகின்றன. இந்த ஆணையம் சம்பந்தப்பட்ட மாநில அரசால் நியமிக்கப்படுகிறது. மேற்கூறிய சட்டம் மற்றும் விதிகளை மீறுவோர்மீது  குறிப்பிட்ட மருந்தினை திரும்பப் பெறுதல் உட்பட, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க மாநில உரிமம் வழங்கும் ஆணையங்கள் (SLA) சட்டரீதியாக அதிகாரமளிக்கப்பட்டுள்ளன.

 

மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில்,  சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை மத்திய இணை அமைச்சர் திரு ஃபாகன் சிங் குலாஸ்தி  அவர்கள் இந்த விவரங்களை  தெரிவித்தார்.


********



(Release ID: 1502587) Visitor Counter : 129


Read this release in: English