மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

பள்ளிக்கூடங்களில் இடைநிற்றலை சரிசெய்தல்

Posted On: 31 JUL 2017 3:51PM by PIB Chennai

நாடு முழுவதும் தொடக்கநிலை கல்வியை ஒரே தரத்துடன் அளிக்கவும், குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வி சட்டம் (RTE) 2009 தின் குறிக்கோளை நிறைவேற்றவும்,  மாநில அரசாங்கங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகங்களின் கூட்டுமுயற்சியுடன் மத்திய அரசின் ஆதரவுடன் சர்வ சிக்ஷா அபியான் (SSA)  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்ட வடிவம் 6 முதல் 14 வயதுள்ள அனைத்து குழந்தைகளும் இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமையைத் தருகிறது. பள்ளிக்கு செல்லுதலையும் தொடக்கக் கல்வியை முடிப்பதும் இதில் அடங்கும்.  ஒவ்வொரு குடியிருப்பிலும் பள்ளிக்கூட வசதியை உறுதி செய்யும் வகையில், இதுவரை 2.06 லட்சம் ஆரம்ப பள்ளிகளுக்கு SSAயின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

2009 ஆம் ஆண்டின் RTE சட்டத்தின் பிரிவு 4,  பள்ளியை விட்டு விலகிய குழந்தைகளுக்கு, அவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கு அவர்களின் வயதிற்கேற்ற சிறப்பு பயிற்சி அளிப்பது பற்றி கூறுகிறது. பள்ளிக்கூடத்தில் சேராத காரணத்தாலோ அல்லது இடைநிற்றல் காரணமாகவோ, சில கல்வியாண்டுகள் படிப்பை இழந்த குழந்தைகள், உறைவிடத்தில் தங்கியோ அல்லது தங்காமலோ, சிறப்பு பயிற்சி பெறுவதற்கு உரிமை பெற்றவர்கள். தொடர்ந்து முறையான பள்ளியில், அவர்களது வயதிற்கேற்ற வகுப்பில் சேர்ந்து, மற்றவர்களைப் போலவே அவர்கள் கல்வி கற்கலாம்.

            கல்விக் குறித்த தகவல்களுக்கான,  ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு, ஆரம்பப் பள்ளிகளில் குழந்தைகளின் இடைநிற்றல் 2014-15ஆம் ஆண்டில் 4.13% சதவீதம் என்று கூறுகிறது. 2012-13 ஆம் ஆண்டில் 4.67% ஆக இருந்த இந்த சதவீதம், சீராக குறைந்து,  2013-14 ஆம் ஆண்டில் 4.34%  ஆக உள்ளது.

                குழந்தைகளின் இடைநிற்றலை குறைப்பதற்கு மற்ற அனைத்து வழிகளுடன், பின்வரும் நடவடிக்கைகளும்  அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ளன; பள்ளிக்கூடங்களின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை வலுப்படுத்துதல், முறையான பள்ளிக்கூடங்கள் இல்லாத குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு உறைவிட விடுதிள்,  கூடுதல் ஆசிரியர்களுக்கான ஏற்பாடு, ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியான, முறையான பயிற்சி மற்றும் குழந்தைகளுக்கு சீருடை மற்றும் இலவச புத்தகங்கள் ஆகியன அவை. கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா திட்டத்தின் கீழ்,  தாழ்த்தப்பட்ட மற்றும் அட்டவணை  இனத்தவர்,  இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மற்றும் சிறுபான்மை இனத்தைச் சார்ந்த பெண்களுக்கு, உறைவிடம் சார்ந்த நடுநிலைப் பள்ளிகள் அமைப்பது பற்றி கூறுகிறது. பள்ளியில் சேர்வதை ஊக்குவிக்கவும், அவர்களை பள்ளிகளில் தக்கவைப்பதை மேம்படுத்தும் நோக்கத்துடனும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 



            தரமான கல்வியின் மீது கவனம் செலுத்தும் வகையில், மொழிப்பாடங்கள் (ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் உருது), கணிதம், சூழலியல் கல்வி, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கு ஒவ்வொரு வகுப்பிற்கும் கற்றல் முறைகள், தொடக்க கல்வி வரையிலும் இறுதி செய்யப்பட்டு  அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச்ங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து குழந்தைகளும் தகுந்த கற்றல் நிலைகள் அடைவதை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் உறுதிசெய்வதற்கு இது வழிகாட்டியாக செயலாற்றும். இவை தவிர்த்து, SSAயின் கீழ், மாநில அரசுகளும் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகளும்,  கற்பித்தல் தரத்தை மேம்படுத்தும் வகையில் பலவகையான முறைகளைப்புகுத்துவது வரவேற்கப்படுகிறது: அவையாவன, கற்பித்தல் முறைகளில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி,  மாணவர்-ஆசிரியர் விகிதத்தை மேம்படுத்த கூடுதல் ஆசிரியர்கள் நியமணம், கல்வி வட்டம் மற்றும் பள்ளிகளின் தொகுப்பு வள மையங்கள் மூலம் ஆசிரியர்களுக்கு கல்விமுறை சார்ந்த உதவி, கற்பித்தல் மற்றும் கற்றலுக்கு உதவும் சாதனங்களின் உருவாக்கத்திற்காக பள்ளிகளுக்கு மானியங்கள் போன்றவை.

ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் இருக்கும் பிரச்சனை குறித்து மத்திய அரசு 2006 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இரண்டு ஆய்வுகளை நடத்தியது. இந்த இரண்டு ஆய்வுகளின்படி, ஆசிரியர்களின் ஒட்டுமொத்த வருகை தொடக்க பள்ளிக்கூட நிலையில் 81.7% இலிருந்து 84.3% ஆக உயர்ந்துள்ளது; ஆசிரியர்களின் வருகை மேம்பாட்டிற்காக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளில் இவையும் அடங்கும்:  பள்ளி நிர்வாகக் குழு/ பள்ளி நிர்வாக மேம்பாட்டுக் குழுக்கள்/கல்வி வட்ட வள மையங்கள்/பள்ளிகள் தொகுப்பு வள மையங்கள் மூலமாக ஆசிரியர்களின் வருகையை கண்காணித்தல். இவற்றுடன், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஒடிசா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஆய்வு அடிப்படையில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.

 

மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில்,  மனிதவளத் துறை மத்திய இணை அமைச்சர் திரு உபேந்திர குஷ்வாகா அவர்கள் இந்த விவரங்களை  தெரிவித்தார்.

********


 

 



 

 



(Release ID: 1502584) Visitor Counter : 70


Read this release in: English