மத்திய அமைச்சரவை

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் செல்போன் கோபுரங்களை ஒரே தொகுப்பாக உருவாக்கி, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் முழு சொந்தமான தனி நிறுவனமாக உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 12 SEP 2017 5:12PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்.) நிறுவனத்தின் செல்போன் கோபுரங்களை ஒரே தொகுப்பாக உருவாக்கி, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு முழுமையாக சொந்தமான தனி நிறுவனமாக உருவாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தனிப்பட்ட துணை நிறுவனமாக உருவாக்குப்படுவதை அடுத்து, தொலைத்தொடர்பு கோபுர கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவதற்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு இதன் மூலம் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.

நாட்டில் இப்போது 4,42,000 செல்போன் கோபுரங்கள் உள்ளன. அவற்றில் 66,000 -க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்குச் சொந்தமானவை. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் செல்போன் கோபுர ங்களுக்கென சுதந்திரமான ஒரு நிறுவனம் உருவாக்கப்படுவதால், அதை குத்தகைக்கு விடுவது அதிகரித்து அதன் தொடர்ச்சியாக புதிய நிறுவனத்துக்கு அதிக வருவாய் கிடைக்கும்.

பின்னணி :

தொலைத்தொடர்பு கோபுர தொழில் தனிப்பட்ட தொழிலாக உருவெடுத்துள்ளது. கட்டமைப்பு வசதியைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகளை செம்மையாக பயன்படுத்திக் கொள்ள இது வகை செய்கிறது. பொருளாதார சிக்கனம் மற்றும் செல்போன் சேவைகளை அளிப்பதற்கான மூலதனச் செலவுகளைக் குறைப்பது ஆகியவற்றை எட்டுவதற்கான தேவையின் அடிப்படையில் இந்தத் தொழிலுக்கான முன்மாதிரி உருவாகியுள்ளது. பொதுவான கட்டமைப்பு வசதிகளை, அதாவது கோபுர கட்டமைப்பு, டீசல் ஜெனரேட்டர் செட்கள், பேட்டரி அலகுகள், மின்சார இடைமுக அலகு, ஏர்-கண்டிசன் வசதி போன்றவற்றை பகிர்ந்து கொள்வதற்கு தொலைத் தொடர்புத் துறையின் (DoT) கொள்கை அனுமதி அளிக்கிறது. தொலைத் தொடர்பு கட்டமைப்புத் தொழில் வளர்ச்சிக்கு இது உதவியாக உள்ளது.  தொலைத்தொடர்பு கோபுர கட்டமைப்பு நிறுவனம், அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை சொந்தமாக வைத்திருக்கும். தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அதே வசதியை உருவாக்க மீண்டும் செலவு செய்வதைக் குறைக்கவும், தங்களின் செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு (O & M) பணிகளுக்கான செலவுகளை சிக்கனப்படுத்தவும் இவற்றை இந்த நிறுவனம் குத்தகை அடிப்படையில் அளிக்கும். இதன் மூலம் லாபம் ஈட்டும் வாய்ப்பு அதிகரிக்கும்.

பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய சேவை அளிக்கும் நிறுவனங்கள்  அடிப்படை வசதிகளை சொந்தமாக வைத்திருக்கும் முன்மாதிரியான வசதிகளுடன்,  செல்போன் கோபுர துறையில் மூன்று வெவ்வேறு தொழில் முன்மாதிரிகளும் உள்ளன : -  சேவை அளிக்கும் நிறுவனங்களின்  கோபுர வசதி சொத்துகளை ஒரே தொகுப்பாக்கி துணை நிறுவனமாக உருவாக்கப்படும் நிறுவனங்கள், சேவை அளிக்கும் நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து சுதந்திரமான கூட்டு முயற்சி துணை நிறுவனங்களாக உருவாக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் குறிப்பிட்ட சேவை அளிப்பவர்களால் உருவாக்கப்படும், ஆனால் அதை உருவாக்குபவர் அந்த கோபுர நிறுவனத்தின் பிரதான குத்தகைதாரராக இருக்கும் வகையிலான சுதந்திரமான துணை நிறுவனங்களாக அமையும் நிறுவனங்கள்.

 

*****


 



(Release ID: 1502580) Visitor Counter : 138


Read this release in: English