பிரதமர் அலுவலகம்
இந்திய பிரதமர் மியான்மர் நாட்டுக்கு (செப்டம்பர் 5 - 7, 2017) மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்திய - மியான்மர் கூட்டறிக்கை
Posted On:
06 SEP 2017 10:25PM by PIB Chennai
1. மியான்மர் குடியரசின் அதிபர் மேன்மைமிகு ஹிடின் கியாவ் விடுத்த அழைப்பை ஏற்று, இந்தியக் குடியரசின் பிரதமர் திரு. நரேந்திர மோடி, மியான்மர் நாட்டில் தனது முதலாவது அரசுமுறை சுற்றுப்பயணத்தை 2017 செப்டம்பர் 5 முதல் 7 ஆம் தேதி வரையில் மேற்கொண்டார். இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான உயர்நிலை கருத்துப் பரிமாற்றங்களின் தொடர்ச்சியின் ஓர் அங்கமாகவும், அதிபர் ஹிடின் கியாவ், அரசின் ஆலோசகர் டாவ் ஆங் சான் சூ கீ ஆகியோர் கடந்த ஆண்டு இந்தியாவில் மேற்கொண்ட வெற்றிகரமான அடுத்தடுத்த பயணங்களைத் தொடர்ந்தும் இந்தப் பயணம் அமைந்திருக்கிறது.
2. 2017 செப்டம்பர் 5 ஆம் தேதி, நே பியி டா நகரில் உள்ள அதிபரின் மாளிகையில் பிரதமர் மோடிக்கு அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. மியான்மர் அதிபரை அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவரை கவுரவிக்கும் வகையில் அரசாங்க விருந்துக்கு அதிபர் ஏற்பாடு செய்திருந்தார். 2017 செப்டம்பர் 6 ஆம் தேதி, பிரதமர் திரு. மோடி தலைமையிலான இந்தியக் குழுவினர், மியான்மர் அரசின் ஆலோசகர் டவ் ஆங் சான் சூ கீ தலைமையிலான குழுவினருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான, நட்புறவான உறவுகளைப் பிரதிபலிக்கும் வகையில், கனிவான, சுமுகமான, ஆக்கபூர்வமான சூழ்நிலையில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதன்பிறகு, அரசு ஆலோசகர் மற்றும் இந்தியப் பிரதமர் முன்னிலையில், சுகாதாரம், கலாச்சாரம், திறன் வளர்த்தல், கடல்சார் பாதுகாப்பு, முக்கிய நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பு போன்ற துறைகளில் மியானமர் மற்றும் இந்தியாவுக்கு இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, பரிமாறிக் கொள்ளப்பட்டன. அதன்பிறகு கூட்டாக செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது.
3. நே பிய் டா நகரில் தனது அரசு முறை நிகழ்ச்சியைத் தவிர, பகன் மற்றும் யாங்கூனில் உள்ள வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். பகனில், அவர் இந்திய தொல்லியல் பாதுகாப்புத் துறையினரின் கைதேர்ந்த வழிகாட்டுதலின் பேரில் இந்திய மற்றும் மியான்மர் தொல்லியலாளர்களால் மீட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வரும், புனித மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அனந்த கோவிலுக்குச் செல்கிறார். யாங்கூனில் தியாகிகள் நினைவிடத்தில் ஜெனரல் ஆங் சானுக்கு மரியாதை செலுத்துகிறார். மேலும் போக்யோக் ஆங் சான் அருங்காட்சியகத்தையும், பிற முக்கிய இடங்களையும் அவர் பார்வையிடுகிறார். யாங்கூனில் அவர் தங்கியிருக்கும்போது, இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
4. மியான்மர் அதிபரும், அரசு ஆலோசகரும் முறையே 2016 ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் மேற்கொண்ட மிகவும் வெற்றிகரமான பயணங்களுக்குப் பிறகு ஏற்பட்ட வளர்ச்சிகள் குறித்து, பேச்சுவார்த்தையின் போது இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். தற்போது நடைபெற்று வரும் அதிகாரப்பூர்வ பரிமாற்றங்கள், பொருளாதார, வர்த்தக மற்றும் கலாசார உறவுகள் பற்றி அவர்கள் ஆய்வு செய்தனர். கிழக்கத்திய நாடுகளை நோக்கிய முன்னேற்றப் பாதையில் செயல்படுதல் மற்றும் அயலாருக்கு முதல் உரிமை என்ற இந்தியாவின் நடைமுறைக்கு ஏற்ற கொள்கைகளுக்கும் மியான்மரின் சுதந்திரமான, தீவிரமான மற்றும் அணி-சாரா வெளிநாட்டுக் கொள்கைகளுக்கும் இடையில் உள்ள நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் தனிப்பட்ட முறையில் மக்களுக்கு இடையில் உள்ள பரிமாற்றங்கள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. இரு நாடுகளின் மக்களும் பரஸ்பரம் பயன் பெறும் வகையில், இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்தவும், தீவிரமானதாக ஆக்கவும் புதிய வாய்ப்புகளைக் கண்டறிவது என அவர்கள் உறுதி ஏற்றுக் கொண்டனர். அமைதி, கூட்டாக வளம் பெறுதல், இந்தப் பிராந்தியத்திலும், இதற்கு அப்பாற்பட்டும் வளர்ச்சியை ஏற்படுத்துதல் ஆகிய பொதுவான விருப்பங்களை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
5. அமைதியை நோக்கியும், தேசிய அளவில் ஒத்திசைவை ஏற்படுத்தும் வகையிலும் மியான்மர் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இந்தியப் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். மியான்மர் அரசு தற்போது மேற்கொண்டுள்ள அமைதி நடவடிக்கைகளை அவர் பாராட்டினார். மியான்மரில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் இருப்பது இந்தியாவுக்கு உயர் முன்னுரிமையான விஷயம் என்று அவர் குறிப்பிட்டார். மியான்மரில் ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்தி, ஜனநாயக கூட்டாட்சி குடியரசை உருவாக்குவதற்கு, மியான்மர் அரசுக்கு தொடர்ந்து இந்தியா ஆதரவு அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார்.
6. தங்கள் எல்லைப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலைகள் பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர். தங்கள் எல்லைகளுக்குள் நிகழ்ந்த பல்வேறு பயங்கரவாத மற்றும் தீவிரவாதிகளின் தூண்டுதலால்நிகழ்ந்த வன்முறைகள் குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர். இரு பிராந்தியங்களிலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பெரிய அச்சுறுத்தலாக பயங்கரவாதம் இருக்கிறது என்று கூறிய அவர்கள், எந்த வகையிலாக இருந்தும் வரும் பயங்கரவாதத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்புகள், அவர்களின் தொடர்பு அமைப்புகளுக்கு எதிரானதாக மட்டுமின்றி, பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அல்லது நிதி அளித்து ஊக்குவித்து, பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்கலுக்கு புகலிடம் தரும், பொய்யாக அவர்களைப் புகழ்ந்து பேசும் நாடுகளைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தைப் பதிவு செய்தனர். இந்தியாவில் சமீபத்தில் அமர்நாத் யாத்திரை சென்றவர்கள் மீது நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு மியான்மர் கண்டனம் தெரிவித்தது. எல்லைகள் தாண்டி ஊடுருவி நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் மியான்மர் கண்டனம் தெரிவித்தது. மியான்மர் பாதுகாப்புப் படையினர் ஏராளமானோர் உயிரிழந்த, வடக்கு ராக்கின் மாகாணத்தில் சமீபத்தில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. மனித உரிமைகளை மீறும் வகையில் பயங்கராதம் இருக்கிறது என்று இரு தரப்பிலும் ஒருமித்த கருத்து தெரிவிக்கப்பட்டது. எனவே பயங்கரவாதிகளை தியாகிகளைப் போல பெருமைப்படுத்திப் பேசக் கூடாது என்றும் கருத்து பதிவு செய்யப்பட்டது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் நேர்வுக்கு ஏற்ற மற்றும் பாரபட்சமான அணுகுமுறையை கையாளக் கூடாது என்று சர்வதேச நாடுகளுக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். இதுதொடர்பாக சர்வதேச பயங்கரவாதம் குறித்த விரிவான அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை விரைவாக இறுதி செய்து நிறைவேற்ற வேண்டும் என கூட்டாக அழைப்பு விடுக்கப்பட்டது.
7. எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு, பொது எல்லைப் பகுதியில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய நிலையில், இந்தியாவின் இறையாண்மை மற்றும் எல்லைப் பகுதி உத்தரவாத நிலை மீதான மரியாதையை மியான்மர் மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்திய அரசாங்கத்துக்கு எதிரான எந்தவொரு கலகம் விளைவிக்கும் கும்பலும் மியான்மர் தேசத்தை பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்ற கொள்கையை தீவிரமாக அமல் செய்வோம் எனவும் மியான்மர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோன்ற கொள்கையை இந்தியாவும் அமல்படுத்துவது குறித்து மியான்மர் நன்றி தெரிவித்துக் கொண்டது.
8. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே வரையறுக்கப்பட்டுள்ள எல்லையை பரஸ்பரம் மதிப்பது என்று இரு தரப்பிலும் உறுதி தெரிவிக்கப்பட்டது. மேலும், நிலுவையில் உள்ள எல்லை வரையறை குறித்த பிரச்சினைகளை இருதரப்பிலும் தற்போதுள்ள நடைமுறைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் கூடிய சீக்கிரத்தில் தீர்வு காண்பது என்றும் வலியுறுத்தப்பட்டது.
9. இரு நாடுகளின் அருகாமை பகுதிகளில் உள்ள பாதுகாப்பு சூழ்நிலைகள் குறித்தும் இரு தரப்பிலும் ஆய்வு செய்யப்பட்டது. கடல்சார் பாதுகாப்பில் நெருக்கமான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் சிறப்பு தேவை உள்ளதாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பரம் பயன்தரக் கூடிய மற்றும் ஆவமான ராணுவ ஒத்துழைப்பை வளர்ப்பது என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதுதொடர்பாக, மியான்மர் நாட்டு ராணுவப் படைகளின் தலைமை தளபதி அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட வெற்றிகரமான பயணம் பற்றி திருப்தி தெரிவிக்கப்பட்டது. குறித்த காலத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலமாக, முறைப்படுத்தப்பட்டுள்ள ஒத்துழைப்புடன், மனிதாபிமான உதவி, பேரழிவு நிவாரணம் போன்ற பாரம்பரியமற்ற கடல்சார் பாதுகாப்பு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்புக்கு இவை முக்கியமானவை என குறிப்பிடப்பட்டது.
10. ஏற்கெனவே ஆவணப்படுத்தப்பட்ட பரஸ்பர புரிதலை இந்தியாவும் மியான்மரும் பராமரிப்பது என்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வளர்ப்பது என்றும் இரு தரப்பிலும் உறுதி தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு மக்கள் மற்றும் பிராந்தியங்களின் நன்மை கருதி, வரக்கூடிய காலங்களில் நல்ல மற்றும் நம்பத்தகுந்த பக்கத்து நாடுகள் என்ற வகையில் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் நடந்து கொள்ளவும் உறுதி தெரிவிக்கப் பட்டது.
11. இரு தரப்பிலும் உயர்நிலை அளவில் தொடரும் பரிமாற்றங்களால் இரு தரப்பு உறவுகளில் உள்ள பிரச்சினைகளில் பரஸ்பர புரிதல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பது குறித்து இரு தரப்பிலும் திருப்தி தெரிவிக்கப்பட்டது. உயர் அரசியல் நிலையில் எடுக்கப்படும் முடிவுகள் சிறப்பாக அமல் செய்யப்படுவதற்காக, பாதுகாப்பு மற்றும் ராணுவம், வர்த்தகம் மற்றும் வணிகம், மின்சாரம் மற்றும் எரிசக்தி, எல்லை மேலாண்மை மற்றும் தொடர்பு வசதி போன்ற இலாகா சார்ந்த அளவில் அவ்வப்போது சந்திப்புகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அவர்கள் பாராட்டினர். இந்திய மற்றும் மியான்மர் நாடாளுமன்றவாதிகளுக்கு இடையில் நல்ல பரிமாற்றங்கள் நடந்திருப்பது குறித்து அவர்கள் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர். இதுபோன்ற கருத்துப் பரிமாற்றங்களை மேலும் மேம்படுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
12. மியான்மரின் சமூக பொருளாதார வளர்ச்சித் திட்டங்களில் இந்திய அரசு அளித்து வரும் உதவிகளுக்கு மியான்மர் தரப்பில் இதயம் நிறைந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் ஒத்துழைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இரு தரப்பிலும் ஆய்வு செய்யப்பட்டது. இவை மியான்மர் மக்களின் பயனுடன் நேரடியாக தொடர்புள்ள திட்டங்கள் என சுட்டிக்காட்டப்பட்டது. இவை விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. மனிதவள திறன்களை ளர்ப்பது மற்றும் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் மியான்மருக்கு ஆதரவு அளிப்பது என்பதில் பிரதமர் மோடி மீண்டும் உறுதி தெரிவித்தார். பகோக்கு மற்றும் மியின்கியானில் இந்திய உதவியுடன் தொழில் பயிற்சி மையங்கள் அமைப்பதில் ஆக்கபூர்வமான அனுபவங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டது. மோனிவா மற்றும் தாட்டோனில் இதுபோன்ற இரண்டு மையங்களை அமைப்பதில் இந்தியா ஆதரவு அளிப்பதற்கும், மியின்கியான் ஐ.டி.சி.க்கு ஐந்து ஆண்டுகளுக்கான விரிவான பராமரிப்புத் திட்டத்துக்கு உதவி அளிப்பதற்கும் மியான் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. யாங்கூனில் ஆங்கில மொழி பயிற்சி மையம் அமைப்பதற்கும், மியான்மர் - இந்தியா தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தை தரம் உயர்த்தவும் இந்தியா அளிக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மியான்மரில் ஏற்றதொரு இடத்தில் கோளரங்கம் அமைப்பது தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தைகளை தொடர்வது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. மியான்மர் இளைஞர்களிடையே அறிவியல் சிந்தனைகளை ஊக்குவிக்க உதவும் மதிப்புமிக்க பயிற்சி நிலையமாக இது இருக்கும் என்பதை அங்கீகரித்து இந்த முயற்சி மேற்கொள்ளப் படுகிறது.
13. ராகின் மாநிலத்தில் உள்ள சூழ்நிலை வளர்ச்சிக்கு உகந்ததாகவும் பாதுகாப்பு முக்கியத்துவமானதாகவும் உள்ளது என்ற கருத்தை இருதரப்பினரும் பகிர்ந்து கொண்டனர். இதுதொடர்பாக, கட்டமைப்பு மற்றும் சமூக பொருளாதாரத் திட்டங்களை, ஒட்டுமொத்த சமூக பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. குறிப்பாக இந்த மாநிலத்தில் கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் அது சார்ந்த செயல்பாடுகள், வேளாண் பதப்படுத்துதல், சமுதாய மேம்பாடு, சிறு பாலங்கள் கட்டுதல், சாலைகளின் தரத்தை உயர்த்துதல், சிறிய மின் உற்பத்தி திட்டங்கள், வாழ்வியல் தேவையை பூர்த்தி செய்யும் செயல்பாடுகள், பயிற்சி மையங்கள் அமைத்தல், வீடுகளில் கைவினைப் பொருள் தயாரித்தலை ஊக்குவித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கலாச்சார பாரம்பரியம் போன்ற துறைகளில் வளர்ச்சியை உருவாக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. ராகின் மாநில வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உதவி செய்ய இந்தியா முன்வந்துள்ளதற்கு மியான்மர் வரவேற்பு தெரிவித்தது. இதற்கான வழிமுறைகளை அடுத்த சில மாதங்களுக்குள் இறுதி செய்வது என்று இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
14. வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் கல்வியில், குறிப்பாக யெஜின் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான மேம்படுத்திய மையத்தை வேகமாக உருவாக்கி செயல்படுத்தியதிலும், வேளாண்மை ஆராய்ச்சித் துறையில் அரிசி உயிரி பூங்கா அமைத்ததிலும் ஒத்துழைப்பு அளித்தது குறித்து இருதரப்பிலும் திருப்தி தெரிவிக்கப்பட்டது. மியான்மரில் இருந்து வரும் மாணவர்களுக்கு வேளாண்மை அறிவியலில் முதுகலை பட்டம் மற்றும் ஆராய்ச்சிக் கல்வி அளிப்பதற்கு இந்தியா உதவி செய்வது குறித்தும் நன்றி தெரிவிக்கப்பட்டது. .
15. மியான்மர் நீதித் துறை அதிகாரிகள், ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினருக்கு செயல்படுத்தப்படும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து இருதரப்பிலும் திருப்தி தெரிவிக்கப்பட்டது. மியான்மர் தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிலையம் மற்றும் தகவல் தொழில்நுட்ப திறன்கலை மேம்படுத்தும் இந்திய - மியான்மர் மையத்துக்கு ஆதரவு அளிக்கும் காலத்தை நீட்டிப்பு செய்ததற்காக இந்தியாவுக்கு மியான்மர் நன்றி தெரிவித்துக் கொண்டது. மியான்மர் தூதரக அதிகாரிகளுக்கு புதுடெல்லியில் உள்ள வெளிநாட்டு சேவை பயிற்சி நிலையத்தில் தொடர்ந்து இந்தியா பயிற்சி அளிப்பது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. கேந்திரிய இந்தி சன்ஸ்தானில் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு மியான்மர் தூதரக அதிகாரிகளுக்கு சேர்க்கை அனுமதி அளிக்க இந்தியா முன்வந்திருப்பதற்கும், ஐந்தாண்டு காலத்துக்கு இந்திய பயிற்சி நிலையங்களில் 150 மியான்மர் அரசு அதிகாரிகள் ஆண்டுதோறும் ஆங்கில மொழி பயிற்சி பெற உதவி செய்வதற்கும் மியான்மர் நன்றி தெரிவித்துக் கொண்டது.
16. மியான்மர் காவல் துறையில் பயிற்சி கட்டமைப்பின் தரத்தை மேலும் உயர்த்துதல் மற்றும் திறன் வளர்ப்புக்கான அவசியம் குறித்து பதிவு செய்யப்பட்டது. இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன், மியான்மரில் யாமெதினில் மகளிர் காவலர் பயிற்சி மையத்தை தரம் உயர்த்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கு இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். யாங்கூனில் காவல் துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி மையம் அமைத்துத் தருவதற்கு இந்தியா முன்வந்திருப்பதற்கு மியான்மர் வரவேற்பு தெரிவித்தது. இதற்கான நடைமுறைகளை கூட்டாக உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
17. இருதரப்பு மற்றும் பிராந்திய தொடர்பை மேம்படுத்தும் வகையில் மியான்மரில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்களுக்கு இந்தியா ஆதரவு அளிப்பதற்கு மியான்மர் நன்றி தெரிவித்தது. கலடன் பன்முக போக்குவரத்துத் திட்டத்துக்கும், மற்றும் இதர சாலை மற்றும் பாலங்கள் கட்டும் திட்டங்களுக்கு முழுமையான மானியத்துடனான திட்டங்களாக செயல்படுத்துவதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கலடன் பன்முக போக்குவரத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள கணிசமான முன்னேற்றத்துக்கு மியான்மர் நன்றி தெரிவித்தது. அந்தத் திட்டத்தில் சிட்வே துறைமுகத்துக்கும் பலெட்வா உள்ாட்டு நீர்வழி போக்குவரத்து முனையத்துக்கும் இடையிலான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு, ஆறு சரக்கு கப்பல் நிறுத்துமிடங்கள் மியான்மர் துறைமுக ஆணையம் மற்றும் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. மியான்மரில் உள்ள மற்ற சர்வதேச துறைமுகங்களில் கையாளப்படும் நடைமுறைகளைப் பின்பற்றி, துறைமுகத்தைப் பராமரிப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் பொறுப்பேற்கும் வகையில் இரு தரப்பாரையும் கொண்ட துறைமுக செயல்பாட்டு அமைப்பு ஒன்றை நியமிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தத் திட்டத்தின் இறுதிப் பகுதியாக பலெட்வா முதல் ஜோரின்புயி வரையில் சாலை அமைக்கும் திட்டம் கட்டுமான பணி நிலையில் உள்ள போதிலும், துறைமுகம் மற்றும் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து வசதி கட்டமைப்பா வணிக ரீதியில் பயன்படுத்தி, சுற்றியுள்ள பகுதிகளில் வணிக ரீதியான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு இது உதவியாக இருக்கும். சாலை அமைக்கும் பணி ஏற்கெனவே நடைபெற்று வருவது குறித்து இரு தரப்பிலும் திருப்தி தெரிவிக்கப்பட்டது. திட்ட அலுவலர்கள், கட்டுமானப் பொருட்கள், மற்றும் இயந்திரங்களை ஜோரின்புயி மற்றும் பலெட்வா எல்லைகளுக்கு இடையில் கொண்டு செல்வதற்கு வசி செய்து கொடுக்க ஒப்புதல் தரப்பட்டது. டாமு - கியிகோனே - கலேவா சாலையிலும், முத்தரப்பு நெடுஞ்சாலையில் கலெவா - யார்ஜியி பகுதியில் உள்ள சாலைளிலும் இருக்கும் பாலங்களை மறுகட்டுமானம் செய்யும் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.ரிஹ் - ஹெடிம் சாலையின் பாதையை மாற்றி அமைப்பது குறித்தும் டி.பி.ஆர். கட்டுமானம் குறித்தும் இரு தரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போதுள்ள எல்.ஓ.சி.யின் கீழ், புடாவ் - மியிட்கியினா மற்றும் அலெதன்க்யவ் - அஹுன்மவ் சாலைகளை கட்டமைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள், மியான்மர் டி.பி.ஆர்.கள் அளித்த பிறகு எடுத்துக் கொள்ளப்படும். மியான்மர் கேட்டுக் கொண்டதன்பேரில், ரிஹ்கவ்டர் - ஜோ்கதார் பாலம்ம ற்றும் பிவேய்னு பாலத்துக்கான டி.பி.ஆர்.களை தயாரிக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
18. சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப் பட்டுள்ள திட்டங்களை இரு தரப்பினரும் ஆய்வு செய்தனர். யாங்கூன் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் சிட்வே பொது மருத்துவமனை ஆகியவற்றை தரம் உயர்த்தும் பணிகள் குறித்தும், மோனிவா பொது மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவு பெற்றது குறித்தும் திருப்தியுடன் தகவல் தெரிவிக்கப்பட்டது.நே பியி டா -வில் அதி நவீன மருத்துவமனையை உருவாக்குவதற்கான ஆலோசனைகளைத் தொடங்கவும் அவர்கள் ஒப்புதல் அளித்தனர். பரஸ்பரம் முடிவு செய்யப்படும் நடைமுறைகளின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள முன்னணி மருத்துவமனை குழுமங்களில் ஒன்றின் இணைப்புடன் இந்த மருத்துவமனை உருவாக்கப்படும் .
19. 2012 ஆம் ஆண்டில் சலுகையுடன் கூடிய கடனாக இந்தியா அளித்த 500 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை பயன்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து இரு தரப்பிலும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தக் கடன் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படும் திட்டங்கள், முக்கியமான துறைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவி செய்வதுடன், வேளாண்மை மற்றும் போக்குவரத்துத் துறையில் திறன்களை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது என்றும் அவர்கள் தீர்மானித்தனர்.
20. இந்த கட்டமைப்புத் திட்டங்களில் இருந்து முழுமயான பலன்களைப் பெறுவதற்கு, தொடர்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு நிறுவனம் சார்ந்த ஏற்பாடுகளை செய்வதற்கு முன்னுரிமை தர வேண்டும் என இரு தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, மோட்டார் வாகன போக்குவரத்துக்கு, பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் எல்லை கடந்து செல்வதற்கு வகை செய்யும் இருதரப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் குறிப்பிட்டனர்.
21. இந்தியாவுக்கும் மியான்மருக்கும் இடையில் மின்சாரம் மற்றும் எரிசக்தி வழங்கல் தொடர்பு வசதிகளை பெரிய அளவில் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பாரும் அடிக்கோடிட்டுக் காட்டினர். எரிசக்தி வளங்களைக் கண்டறிதல் மற்றும் உற்பத்தி என இரு துறைகளிலும் எரிசக்தி துறையில் இந்தியா பங்களிப்பு செய்திருப்பதை மியான்மர் வரவேற்றது. பெட்ரோகெமிக்கல்கள் மற்றும் பெட்ரோலிய பொருள்களுக்கான டெண்டர்களில் இந்திய நிறுவனங்கள் பங்கேற்பது, சந்தைப்படுத்தல் கட்டமைப்பு மற்றும் எல்.பி.ஜி. முனையங்கள் அமைப்பதில் இந்திய நிறுவனங்கல் பங்கேற்பதற்கு மியான்மர் அழைப்பு விடுத்தது. நிலப் பகுதி எல்லை வழியாக மியான்மருக்கு டீசல் வழங்குவதற்கு மியான்மரின் பரமி எரிசக்தி குழுமத்துடன் இந்தியாவின் நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையம் ஒப்பந்தம் கையெழுத்திட்டிருப்பதை இரு தரப்பினரும் பாராட்டினர். வடக்கு மியான்மர் பகுதி மக்களுக்கு மலிவான விலையில், அதிக நம்பகமான முறையில் பெட்ரோலியப் பொருள்கள் கிடைப்பது இதன் மூலம் உறுதி செய்யப்படும். மியான்மரில் பெட்ரோலிய பொருள்களை சேமித்து விற்பனை செய்வதில் இரு தரப்பினரும் கூட்டு முயற்சிகளில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டது. ஹைஸ்பீட் டீசலின் முதலாவது ஒதுக்கீடு 2017 செப்டம்பர் 4 ஆம் தேதி மியான்மருக்கு சென்று சேர்ந்தது.
22. மியான்மர் அரசால் அடையாளம் காணப்படும் மரபு சார்ந்த மற்றும் புதுப்பித்தக்க எரிசக்தி அடிப்படையிலான மின் உற்பத்தித் திட்டங்களை உருவாக்க, திட்டம் சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உதவிகள் அளிக்க ஆயத்தமாக உள்ளதாக இந்தியாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மியான்மரில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு ஏற்கெனவே இந்தியா அறிவித்துள்ள திட்டத்துடன், மியான்மரில் சூரியசக்தி கதிர்வீச்சு வள மதிப்பீடு நடத்தவும் இந்தியா முன்வந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் எரிசக்தி சிக்கன பயன்பாட்டு விஷயத்தில் ஒத்துழைப்புக்கான வழிமுறைகள் பற்றி இருதரப்பிலும் விவாதிக்கப்பட்டது. முக்கிய நகரங்களில் எல்.இ.டி. அடிப்படையிலான மின்சார சிக்கன திட்டங்களை அறிமுகம் செய்வதற்கு, இந்திய எரிசக்தி சிக்கன சேவைகள் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் தொழில்நுட்ப செயலாக்கத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு மியான்மர் நன்றி தெரிவித்தது. ந பியி டவ், பகோ பிராந்தியம் மற்றும் ரகினே மாநிலத்தில் மியான்மர் அரசால் அடையாளம் காணப்படும் கட்டடங்களிலும் இத் திட்டம் செயல்படுத்திக் காட்டப்படும். மின்சார வர்த்தகத்தில் தனது அனுபவங்களை இந்தியா பகிர்ந்து கொண்டது. இது தொடர்பாக மியான்மருடன் ஒத்துழைப்பு கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதில் விருப்பம் உள்ளதாகவும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மின்சாரம் குறித்த கூட்டு நெறிக் குழுவின் கூட்டத்தை விரைவில் நடத்தி இதுதொடர்பான விஷயங்களை விவாதிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. மற்ற அமைப்புகளின் கூட்டத்திலும் இவற்றை விவாதிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. சர்வதேச சூரியசக்தி ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்குவதற்கான விதிமுறை உருவாக்க ஒப்பந்தத்தில் சேர வேண்டும் என்ற இந்தியாவின் ஆலோசனை குறித்து கவனமாக ஆய்வு செய்வதாக மியான் உறுதி அளித்தது .
23. இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டில் தற்போதைய நிலவரம் குறித்து இருதரப்பிலும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. தற்போது துடிப்புடன் உள்ள இந்தச் சூழ்நிலையில், இன்னும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகத்தை ஊக்குவிப்பதைக் கருத்தில் கொண்டு அனைத்து வர்த்தகத் தடைகளையும் நீக்கி, சந்தைப்படுத்தல் வசதியை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. ஜூன் 2017ல் இந்தியாவில், புதுடெல்லியில் நடைபெற்ற 6வது மியான்மர் - இந்தியா கூட்டு வர்த்தகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர். எல்லைப் பகுதி வர்த்தகக் கமிட்டி மற்றும் எல்லைப் பகுதி ஹாட்கள் கமிட்டி கூட்டங்களை தொடர்ந்து நடத்தவும் ஒப்புக்கொண்டனர்.
24. தங்கள் நாட்டு ஜவுளித் துறையில், தரப்படுத்துதல், ஆய்வு செய்தல், தர பரிந்துரைகள் அளித்தல், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, மனிதவள மேம்பாடு மற்றும் திறன் வளர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கி வளர்ச்சி ஏற்படுத்தித் தருவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பை மியான்மர் நாடியதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்தது..
25. இருதரப்பு வர்த்தகத் தொகுப்பில் பருப்பு வகைகளுக்கு முக்கிய பங்கு இருப்பதை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இந்த வர்த்தகத்தில் மியான்மர் விவசாயிகளுக்கும், இந்திய நுகர்வோருக்கும் ஏற்படும் விளைவுகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, பல்வேறு வகையான பருப்புகளை இறக்குமதி செய்வதற்கு, அதிகபட்ச அளவுக்கு கட்டுப்பாடு விதித்து சமீபத்தில் இந்தியா உத்தரவிட்டது குறித்து மியான்மர் நாட்டு ஆலோசகர் கவலை தெரிவித்தார். இரு நாடுகளின் நட்புறவைக் கருத்தில் கொண்டும், இரு நாடுகள் மற்றும் மக்களின்நீண்டகால நன்மைகளைக் கருத்தில் கொண்டும், மியான்மரில் இருந்து அனைத்து இறக்குமதிகள் மீதும் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என இந்தியப் பிரதமரை அவர் கேட்டுக் கொண்டார். எதிர்காலத்தில் இரு நாட்டு மக்களின் நலன்களும் பாதுகாக்கப்படும் வகையில், நீண்டகால ஏற்பாடுகலை உருவாக்க வேண்டியது முக்கியம் என்று அப்போது இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.
26. எல்லை தாண்டிச் செல்வதை முறைப்படுத்துவது, இணக்கமாக எல்லை கடந்து செல்வதற்கு வசதி செய்தல், அதன் மூலம் இருதரப்பு வர்த்தகத்தையும், சுற்றுலாவையும் ஊக்குவிக்கவும் உதவும் வகையில் பேச்சு நடத்தி வெற்றிகரமாக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டிருப்பதற்கு இரு தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதை விரைவுபடுத்தும் வகையில் நடைமுறைகளை விரைந்து பூர்த்தி செய்யுமாறு மூத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்தியாவில் இம்பாலில் இருந்து மியான்மரில் மண்டலே நகருக்கு இடையில் இரு நாடுகளுக்கும் இடையில் பேருந்து சேவை தொடங்குவது குறித்த ஒப்பந்தத்துக்கு பேச்சு நடத்தி, விரைவில் முடிவை எட்டுவது என இரு நாடுகளின் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
27. இரு நாடுகளுக்கும் இடையில் விமானப் போக்குவரத்து வசதியை மேம்படுத்தினால், மக்களுக்கு இடையிலான தொடர்புகள் அதிகரிப்பதுடன், சுற்றுலா, வர்த்தகம் வளரவும், முதலீடுகள் அதிகரிக்கவும் உதவியாக இருக்கும் என இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. பகோக்கு விமான நிலையம் அல்லது காலே விமான நிலையத்தை இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் மேம்படுத்துவதற்கு மியான்மர் விமானப் போக்குவரத்துத் துறையுடன் (DCA), நெருக்கமாக ஒத்துழைப்பு செய்து இந்திய விமான நிலையங்களின் ஆணையம் ஒரு டி.பி.ஆர். (DPR) உருவாக்கிட இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். மியான்மர் விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவாறு இந்தியாவில் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க இந்தியா முன் வந்திருப்பதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. மியான்மரில் டாமு மற்றும் மண்டலே நகரங்களுக்கு இடையே ரயில்பாதை தொடர்பை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அந்தந்த அதிகாரிகளுக்கு தலைவர்கள் அறிவுறுத்தினர். இந்த இரு நகரங்களுக்கு இடையே ரயில் பாதை இணைப்பை உருவாக்குவதற்கான டி.பி.ஆர். தயாரிப்பதற்கான ஆய்வு நடத்த ஒரு குழுவை இந்தியாவில் இருந்து அனுப்பவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
28. சட்டவிரோதமாக ஆட்களைக் கொண்டு செல்லப்படுவதைத் தடுத்து மீட்பது, அவர்களுக்கு மறுவாழ்வுப் பணிகள் குறித்த, பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட நடைமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக சட்டவிரோதமாக ஆள்கள் அழைத்துச் செல்லப்படுதலைத் தடுப்பதில் ஒத்துழைப்பு குறித்த் புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதற்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். கூடிய விரைவில் அதை நிறைவு செய்ய வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தனர்.
29. இந்தியா மற்றும் மியான்மர் மக்களுக்கு இடையே நெருக்கமான பந்தங்களை மேலும் வலுப்படுத்துவதற்காக கலாச்சார விஷயங்களை மையப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் வலியுறுத்தினர். 2017 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்திற்கான கலாச்சார பரிமாற்றத் திட்டம் (CEP) கையெழுத்திடப்பட்டது குறித்து திருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும் மியான்மரின் எல்லைப் பகுதிகளுக்கும் இடையில் கலாச்சாரப் பரிமாற்றங்களை இத் திட்டம் அதிகரிக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். புதுடெல்லியில் உள்ள இந்திய தொல்லியல் கல்வி நிலையத்தில் அட்வான்ஸ்டு கல்விகள் பிரிவில் மியான்மர் தொல்லியலாளர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு இடங்கள் அளிக்கப்படும் என்று இந்தியா உறுதி அளித்தது.
30. புத்தகயாவில் உள்ள மியான்மர் மன்னர் மின்டன் மற்றும் மன்னர் பாக்யிடவ் கோவில்களை யும், பாறை சிற்பங்களையும் பாதுகாத்து பராமரிப்பதற்கு இந்திய தொல்லியல் பாதுகாப்பு அமைப்பு மேற்கொண்டுள்ள திட்டம் முன்னேற்றகரமான நிலையில் உள்ளது என்றும், டிசம்பர் 2017ல் அது நிறைவு பெறும் என்றும் இந்தியாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கோவில்கள் இந்திய - மியான்மர் கலாச்சார பாரம்பரியத்தில் முக்கிய அம்சங்களைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட மியான்மர் தரப்பார், இந்தியாவின் தகவலுக்கு வரவேற்பு தெரிவித்தனர்.
31. பகனில் மரபை பாதுகாத்து பராமரிப்பதுடன், சமூக பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா உதவி செய்வதற்கு மியான்மர் வரவேற்பு தெரிவித்தது. இந்தத் திட்டத்தில் முதன்மையானவற்றில், 92 பழங்கால பல அடுக்கு கோபுரங்கள் மற்றும் கட்டுமானங்களை இந்திய தொல்லியல் பாதுகாப்புத் துறை மூலமாக புதுப்பித்து பாதுகாப்பதும் அடங்கும். இதுதொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதற்கு இரு தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. இந்தியா - மியான்மர் ஒத்துழைப்புத் திட்டங்களின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும் மற்ற திட்டங்களில், ``பகன் ஹாட்'' என்ற மியான்மரின் கைவினை மையத்தை உருவாக்குதல், உணவு மற்றும் கலாச்சார செயல்பாடுகள், LED சார்ந்த தெருவிளக்கு வசதிகள், நீடித்த நீர் மேலாண்மைக்காக மழைநீர் சேமிப்பு, பகன் மக்களுக்கு வருமானத்துக்கான மாற்று வழிகள் குறித்த பயிற்சி அளித்தல், அடையாளம் காணப்படும் பள்ளிக்கூடங்களை தரம் உயர்த்துதல் ஆகியவையும் அடங்கும்.
32. மியான்மர் தேசத்தவர்களுக்கு இ-விசா தவிர, மற்ற அனைத்து பிரிவுகளிலும் கிராட்டிஸ் விசா அளிக்க இந்தியா முடிவு செய்திருப்பதற்கு மியான்மர் மிகுந்த நன்றி தெரிவித்துக் கொண்டது.
33. பல்வேறு குற்றச் செயல்களுக்காக இந்தியாவில் தற்போது சிறைகளில் இருக்கும் மியான்மர் தேசத்தவர் 40 பேருக்கு சிறப்பு மன்னிப்பு அளிக்க இந்தியா முடிவு செய்திருப்பதற்கு மியான்மர் அரசு நன்றி தெரிவித்துக் கொண்டது. இந்த நல்லெண்ண நடவடிக்கைக்கு மியான்மர் மக்களும், அரசும், குறிப்பாக இந்திய சிறைகளில் இருந்து விடுவிக்கப்படும் நபர்களின் குடும்பத்தினரும் ஆழ்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
34. ஜனநாயகத்துக்கு ஆதரவு அளித்து வளர்ச்சியில் ஊடகங்களின் பங்காற்ற வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி தெரிவிக்கப்பட்டது. இந்திய பிரஸ் கவுன்சில் மற்றும் மியான்மர் பிரஸ் கவுன்சில் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது குறித்து இரு தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வரையறைக்கு உள்பட்ட செயல்பாடுகள், இரு தரப்பிலும் பத்திரிகையாளர்கள் பரிமாற்றத்தை ஊக்குவித்து, இந்தியா மற்றும் மியான்மரில் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சி பற்றிய நல்ல புரிதல்களை உருவாக்க உதவிகரமாக இருக்கும்.
35. இரு தரப்பு நலன்கள் குறித்த பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் உறுதியாக இருப்பதை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர். வர்த்தகம், போக்குவரத்து மற்றும் எரிசக்தி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பரஸ்பர ஆதாயங்களை சம அளவில் பகிர்ந்து கொள்வதை உறுதி செய்யும் வகையில் இதை செய்ய உறுதியளிக்கப்பட்டது. இரு நாடுகளிலும் உள்ள மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாதலை மேம்படு்துவதற்கு பிராந்திய / துணை பிராந்திய அளவில் பல்வேறு கூட்டு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து அவர்கள் பதிவு செய்தனர்.
36. ஐ.நா. மற்றும் பிற பன்னாட்டு அமைப்புகளில் நெருக்கமாக செயல்படுவது என்று இந்தியாவும்மியான்மரும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டன. பொதுவான அக்கறை கொண்ட பன்னாட்டு விஷயங்களில் தங்கள் நிலைப்பாடுகளில் ஒருங்கிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பிலும் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. வலுவான ஐக்கிய நாடுகள் சபை இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். பாதுகாப்புக் கவுன்சிலை விரைவில் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பாதுகாப்புக் கவுன்சிலை முழுமையாக சீரமைப்பதற்கு அரசுகள் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடத்துவதை ஆதரிப்பதில் உள்ள கடமைப்பாட்டை இருவரும் மீண்டும் உறுதிப்படுத்தினர். விரிவாக்கம் செய்யப்பட்ட மற்றும் சீரமைக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக ஆக வேண்டும் என இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு மியான்மர் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது. SDG-யின் 2030-ல் குறிப்பிடப் பட்டுள்ளவாறான விஷயங்களை வலுப்படுத்துவதற்கு, சர்வதேச அரங்கில் இணைந்து செயல்படுவதற்கும் மீண்டும் உறுதி தெரிவிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையும், அதன் சிறப்பு முகமைகளும் தங்கள் பணிகளை ஆற்றுவதில் நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் செயல்படுவதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
37. பலதரப்பு நிதி நிறுவனங்களை சீரமைத்தல் மற்றும் வலுப்படுத்துதல், சர்வதேச பொருளாதார முடிவெடுத்தலில் வளரும் நாடுகளின் கருத்துகள் கேட்கப்படுவதை மேம்படுத்துதல் ஆகியவற்றின் தேவை குறித்து இரு தரப்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது.
38. இந்தப் பிராந்தியத்தில் நல்ல அயலக நாடுகளுக்கு உதாரணமாக இருப்பது என்பதில் உறுதியான கடமைப்பாட்டை இந்தியாவும் மியான்மரும் தெரிவித்துக் கொண்டன. இரு நாடுகளும் ஒன்று சேர்ந்து முன்னேற வேண்டும் என வலியுறுத்தின. எனவே, இரு நாடுகளின் மக்களும் ஒன்றாக நல்லிணக்கத்துடன் வாழவும், பரஸ்பர ஆதாயம் பெற்று, ஒருவரை ஒருவர் சார்ந்த சூழலை உருவாக்கவும் பங்களிப்புகளை ஊக்குவிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
39. மியான்மரில் தங்கியிருந்த நாட்களில் தமக்கும் தமது குழுவினருக்கும் அளித்த கனிவான, கருணைமிக்க உபசரிப்பு அளித்தமைக்காக மியான்மர் அதிபருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
40. அரசு ஆலோசகர் டவ் ஆங் சான் சூ கி யை பரஸ்பரம் சவுகரியமான சமயத்தில் இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அந்த அழைப்புக்காக மியான்மர் அரசு ஆலோசகர் மிகுந்த நன்றி தெரிவித்துக் கொண்டார்.
(Release ID: 1502423)
Visitor Counter : 396