நிதி அமைச்சகம்

ஜிஎஸ்டியை உண்மையிலேயே "ஒரே நாடு, ஒரே வரி" எனும் லட்சியத்துக்கு உட்படுத்தும் வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலமும் இன்று ஜிஎஸ்டியுடன் இணைகிறது

Posted On: 08 JUL 2017 8:24PM by PIB Chennai

மத்திய ஜிஎஸ்டி சட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சட்டம் இரண்டின் அதிகார வரம்புகளை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கும் விரிவாக்கும் வகையில், மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு விரிவாக்கம்) அவசரச் சட்டம், 2017 மற்றும் ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி ((ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு விரிவாக்கம்) அவசரச் சட்டம், 2017 எனும் இரண்டு அவசரச் சட்டங்களை இந்தியக் குடியரசுத்தலைவர் இன்று பிரகடனப்படுத்தினார். இதன்மூலம், ஜம்மு-காஷ்மீர் மாநிலமும் ஜிஎஸ்டியை உண்மையிலேயே "ஒரே நாடு, ஒரே வரி" லட்சியத்துக்குட்படுத்தும் வகையில், ஜிஎஸ்டியுடன் இணைந்தது.


இதற்குமுன், ஜிஎஸ்டி ஜூலை 1, 2017 அன்று நள்ளிரவுமுதல் அமலாக்கப்பட்டது. ஆனால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு விதிகளின்படி அதனை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதற்கு இன்னும் சில சட்ட நடவடிக்கைகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது.


ஜூலை 6, 2017 அன்று குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்த இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தம் (ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குப் பொருத்தும்), 2017 சட்டத்துடன் ஜிஎஸ்டி நடைமுறையை ஏற்கும் வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முதல் கட்ட நடவடிக்கையை எடுத்தது. அதன் விளைவாக, ஜிஎஸ்டியை நாடெங்கும் அமலாக்க வழிசெய்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கான நூற்று ஒன்றாவது திருத்தச் சட்டம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கும் உரித்தானது. அதனைத் தொடர்ந்து, ஜூலை 7, 2017 அன்று அந்த மாநிலத்தின் சட்டமன்றம், மாநிலத்துக்குள்ளான சரக்குப் பரிமாற்றங்கள் மீது மாநில ஜிஎஸ்டி வரிவிதிக்கும் அதிகாரம் வழங்கும் ஜம்மு-காஷ்மீர் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மசோதா, 2017-வை நிறைவேற்றியது.

 

குடியரசுத்தலைவர், மத்திய ஜிஎஸ்டி சட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சட்டம் இரண்டின் அதிகார வரம்புகளை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கும் விரிவாக்கும் வகையில், மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு விரிவாக்கம்) அவசரச் சட்டம், 2017 மற்றும் ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி ((ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு விரிவாக்கம்) அவசரச் சட்டம், 2017 எனும் இரண்டு அவசரச் சட்டங்களும் உடனிணைந்து ஜூலை 8, 2017 முதல் செயல்பாட்டுக்கு வருவதற்காக, இந்தியக் குடியரசுத்தலைவர் பிரகடனப்படுத்தினார்.



(Release ID: 1502204) Visitor Counter : 113


Read this release in: English