நிதி அமைச்சகம்

மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியம் ஜிஎஸ்டி நடப்பின் கீழ் எளிதாக வர்த்தகம் செய்வதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் சிலவற்றை எடுத்தது; பல்வகையான சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரிவிகிதங்களை பயன்பாட்டாளர்கள் அறிய உதவும் வகையில், மத்திய நிதி அமைச்சர் திரு.அருண் ஜேட்லி "ஜிஎஸ்டி வரிவிகிதகாட்டி" மொபைல் செயலி ஒன்றைத் தொடக்கி வைத்தார்.

Posted On: 08 JUL 2017 1:43PM by PIB Chennai

தலைநகர் புதுதில்லியில், மத்திய நிதி அமைச்சர் திரு.அருண் ஜேட்லி, நேற்று தமது அறையிலிருந்தபடி "ஜிஎஸ்டி வரிவிகிதக் காட்டி" கைப்பேசிச் செயலி ஒன்றை, உடனடியாக ஆண்ட்ராய்ட் தளத்தில் கிடைக்கும் வகையில், தொடக்கி வைத்தார்; பின்னர் அது ஐஓஎஸ் தளத்திலும் கிடைக்கும். இந்த கைப்பேசிச் செயலி, பல்வகையான சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரிவிகிதங்களை உபயோகிப்பாளர்கள் அறிந்து கொள்ள உதவும். அதை, எந்த திறன் கைப்பேசியிலும் தரவிறக்கம் செய்து, உடனே புறஇணைய நிலையில் (ஆப்லைனில்) பயன்படுத்தலாம். ஒரு பொருளின் அல்லது சேவையின் பெயரை அல்லது அதன் அத்தியாயத் தலைப்பை நிரப்பி, அப்பொருளின் அல்லது சேவையின் ஜிஎஸ்டி வரிவிகிதத்தை உபயோகிப்பாளரே தீர்மானிக்க முடியும். அவ்வாறான தேடலின் விளைவாக, தேடல் கட்டத்துக்குள் இடப்பட்ட பெயருள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் அனைத்தையும் பட்டியலிட்டுக் காட்டும். உபயோகிப்பாளர், பட்டியலிலுள்ள விவரங்களைப் பார்த்து, தேடிய குறிப்பிட்ட உருப்படியின் மேல் சொடுக்கியதும், ஜிஎஸ்டி வரிவிகிதம், சரக்குகள் அல்லது சேவைகளின் விவரம், சீர்முறைப் பெயரிடல்களின் (எச்எஸ்என்) அத்தியாயத் தலைப்புகள் ஆகிய விவரங்களைக் கொண்ட ஒரு சாளரம் தோன்றும்.

உதாரணமாக, ஒரு உணவகத்தின் அல்லது காலணிக்கான ரசீதில் குறிப்பிடப்பட்ட ஜிஎஸ்டி வரிவிகிதத்தை எவரும் இதனோடு ஒப்பிட்டுச் சரிபார்த்துக்கொள்ளலாம். கலால் மற்றும் சுங்கம் வரி வாரியம், cbec-gst.gov.in எனும் ஒரு இணையத்தில், பரிமாற்றம் செய்த பல்வகையான சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரிவிகிதங்களை அறிந்து கொள்ள வரிசெலுத்துவோருக்கு உதவும் வகையில், "ஜிஎஸ்டி வரிவிகிதக் காட்டி" ஒன்றை வழங்கியுள்ளது. வரிசெலுத்துவோர் தமக்குண்டான மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி, யூனியன் பிரதேச ஜிஎஸ்டி வரிவிகிதங்கள் மற்றும் பரிமாற்றத்தின் மீதான நிவாரணத் தீர்வைகளைத் தேடிப்பெறலாம். சரக்குகள் மற்றும் சேவைகள் விவரங்கள் அல்லது மேலே சொல்லப்பட்ட எச்எஸ்என் அத்தியாயம் அல்லது பிரிவு அல்லது தலைப்பு எண் ஆகியவற்றின் அடிப்படையில் தேடுகை செய்யலாம்.

ஜிஎஸ்டி வரிவிகிதம் மீதான ஒரு உடனடி கணக்கீட்டுக் கருவியாகப் பயன்படுத்தும் நோக்கில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வரிசெலுத்துவோருக்கு மட்டுமல்ல, நாட்டிலுள்ள எந்த நுகர்வோருக்கும் சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரிவிகிதங்களைச் சரியாக அறிந்து உறுதிசெய்து கொள்ள உதவும்.

 



(Release ID: 1502201) Visitor Counter : 118


Read this release in: English