பிரதமர் அலுவலகம்

"நீடித்த வளர்ச்சிக்கான 2030 திட்ட அமலாக்கம்: மேம்பாட்டுக்கான விரிவான கூட்டு அமைத்தல்”: ஜியாமென் நகரில் (செப்டம்பர் 5, 2017) எழுச்சிபெறும் சந்தையும் வளரும் நாடுகளும் என்ற ‘பிரிக்ஸ்’ உரையாடலில் பிரதமர்

Posted On: 05 SEP 2017 11:00AM by PIB Chennai

மேதகு அதிபர் சி ஜின்பிங் அவர்களே, எனது மதிப்புக்குரிய பிரிக்ஸ் நாட்டு சக தலைவர்களே, மரியாதைக்குரிய தலைவர்களே,

இந்த நாளில் உங்களுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதில்  நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது நாடுகள் இந்தியாவுக்கு நெருக்கமான மதிப்பு மிக்க கூட்டாளிகள். பெருமிதம் கொள்கிறேன். ஒட்டுமொத்த நீடித்த வளர்ச்சியில் முதன்மையானவற்றை எட்டுவது தொடர்பாக எனது கண்ணோட்டங்களை உங்களுடன் பரிமாறிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்.  இந்த உரையாடலில் நம் அனைவரையும் இணைத்ததற்காக அதிபர் சி ஸின்பிங் அவர்களுக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு தலைவர்களே,

ஐ.நா. மன்றத்தின் 2030ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சித் திட்டம் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான 17 வகையான இலக்குகளும் வகுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அந்த இலக்குகளை அடைவதற்கான கூட்டுச் செயல்பாடு மேலும் வலுவடைந்துள்ளது. இந்தியாவில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு (SDG) குறித்து தேசிய அளவிலான சுதந்திரமான ஆய்வு கடந்த ஜூலையில் நிறைவு செய்யப்பட்டுவிட்டது. நமது மேம்பாட்டுக்கான திட்டம் “அனைவரும் இணைவோம், அனைவரும் வளர்வோம் (SabkaSaath,SabkaVikaas)” என்ற வாசகத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதாவது, கூட்டு முயற்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகும். நமது சொந்த மேம்பாட்டுக்காக  நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு ஒவ்வொன்றையும் மாநில அளவிலும், மத்திய அளவிலும் முறையாக வரைந்துள்ளோம்.

எங்களது நாடாளுமன்றமும் நீடித்த வளர்ச்சி இலக்குக்கான (SDG) விவாதங்களை முன்னெடுத்துள்ளது. நமது திட்டங்களும் இந்த முதன்மையான இலக்குகளை குறிப்பிட்ட காலத்தில் அடைவதற்காக  முடுக்கி விடப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, மூன்று அணுகுமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. வங்கிக் கணக்கில்லாதவர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்க உதவுதல், எல்லோருக்கும்” பயோமெட்ரிக்” அடையாள அட்டைகள் வழங்குதல், கைபேசி மூலமாக பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழியமைத்தல் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் நாடு முழுதும் 35 கோடி பயனாளிகள் அரசுத் திட்டங்களை முதல் முறையாக நேரடியாகப் பெற வகை செய்யப்பட்டுள்ளது.

மாண்புமிகு தலைவர்களே,

வலுவான சர்வதேச கூட்டினால் ஆதரிக்கப்படும் உள்நாட்டு முன்முயற்சிகள் குறித்து குறிப்பிட விரும்புகிறேன். இதில் பங்கேற்பதற்கு நாம் தயாராகவே இருக்கிறோம். இந்தியா தனது வளர்ச்சிக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே நேரத்தி்ல சக வளரும் நாடுகளுடன் பாரம்பரியமாக கூட்டினைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் நமது அனுபவங்களையும் வளங்களையும் பல்வேறு பிரிவுகளுடன் பகிர்ந்து வருகிறோம். உள்நாட்டு ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்துவது முதல் பொதுமக்களுக்கு உயர்தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவது வரையில் செய்துவருகிறோம்.  இந்த ஆண்டு தெற்காசிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தினோம். இது கல்வி, சுகாதாரம், தகவல் தொடர்பு, பேரிடரைச் சமாளித்தல் ஆகிய வளர்ச்சிக்கான இலக்குகளை  பங்கேற்கும் நாடுகள் அடைவதற்காக  அந்த செயற்கைக்கோள் உதவுகிறது. அரை நூற்றாண்டாக இந்தியாவின் முதன்மையான முன்முயற்சியில் உருவான இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டமைப்பு (ITEC) ஆசியா, ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, கரிபியன், பசிபிக் தீவுகள் ஆகிய மண்டலங்களில் உள்ள 161 சக நாடுகளுக்குப் பயிற்சியும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து மட்டும் மொத்தம் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்தியாவில் ஐடிஈசி நிறுவனத்தின் உதவித் தொகையில் பயிற்சி பெற்றனர். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது இந்திய – ஆசிய உச்சி மாநாட்டில் 54 ஆப்பிரிக்க நாடுகளின் பங்களிப்புடன் ஐடிஇசி உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி 50 ஆயிரம் பேருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் வழங்க முடிவு செய்தோம். இந்தியாவில் பயிற்சி பெற்ற ஆப்பிரிக்க சூரிய சக்தி வல்லுநர்கள்  ஆப்பிரிக்க நாடுகளில் ஆயிரக் கணக்கான வீடுகளில் ஒளியேற்றியிருக்கிறார்கள். ஆப்பிரிக்காவுடன் நாங்கள் வளர்த்து வந்த நல்லுறவின் விளைவாக ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி (African Development Bank) தனது ஆண்டுக் குழுக் கூட்டத்தை முதல் முறையாக ஆப்பிரிக்க கண்டத்துக்கு வெளியே, இந்தியாவில், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தியிருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் தண்ணீர், மின்சாரம், சாலைகள், மக்கள் நல்வாழ்வு, தொலை மருத்துவம், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை எங்களது கூட்டு வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றுகின்றன.  இவை அனைத்தும் எங்களது நட்பு நாடுகளின் தேவைகள், முன்னுரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு தலைவர்களே,

இங்கு கூடியுள்ள நாடுகள் மனித சமுதாயத்தின் பாதி பிரதிநிதிகளாக அமைந்துள்ளன. நாம் எதைச் செய்தாலும் அது உலகில் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த உலகைச் சிறந்த உலகாக மாற்றுவது நமது மிக முக்கிய கடமையாகும். அதை படிப்படியாகவோ, பிரிக்ஸ் நாட்டுக் குழு மூலமாகவோ நிறைவேற்றுவோம்.  அடுத்த பத்தாண்டுகள் பொற்காலமாக அமையும் வகையில் பிரிக்ஸ் நாடுகள் மேற்கொண்டு வரும் உலக மாற்றத்துக்கான முனைப்புகள் குறித்து நேற்று பேசினேன். இந்த விஷயத்தில் எங்களது பத்து உன்னதமான அர்ப்பணிப்புக் கோட்பாடுகளின் சாதகமான அணுகுமுறை, கொள்கைகள், செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த மாற்றங்களை நிகழ்த்தலாம் என்று யோசனை கூறுகிறேன்.

அந்த அர்ப்பணிப்புக் கோட்பாடுகள்:

  1. பாதுகாப்பான உலகைப் படைத்தல்: பயங்கரவாத ஒழிப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய குறைந்தபட்ச விஷயங்களில் கட்டுக்கோப்பான  கூட்டான செயல்பாட்டின் மூலம் உருவாக்குதல்.
  2. பசுமையான உலகைப் படைத்தல்: சர்வதேச சூரியசக்தியைச் சார்ந்திருத்தல் உள்ளிட்ட முயற்சிகளின் மூலம்  பருவமாற்றத்தால் ஏற்படும் பாதிப்பைத் தடுத்து நிறுத்துதல்.
  3. திறனுள்ள உலகை அமைத்தல்: திறமை, பொருளாதாரம், திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பொருத்தமான தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் அளிப்பதன் மூலமும் இதை நிறைவேற்றுதல்.
  4.  அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய உலகத்தை உருவாக்குதல்: நமது மக்களை வங்கிநடைமுறைகளிலும், நிதி சார்ந்த நடைமுறைகளிலும் ஈடுபடுத்துவதன் மூலம் செயல்படுதல்.
  5. டிஜிட்டல் உலகை ஏற்படுத்துதல்: நமது உள்நாட்டுக்குள்ளும், வெளிநாடுகளுடனும் உள்ள டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்து இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம்
  6. திறன்மிகு உலகைத் தோற்றுவித்தல்: நமது பல கோடி இளைஞர்களுக்கு எதிர்காலத்திலும் பயன்படும் வகையிலான திறன்களை அளித்தல்
  7. நலமான உலகை அமைத்தல்: நோய்களை ஒழிக்க ஆய்வு மற்றும் அபிவிருத்தியில் ஒத்துழைப்பதன் மூலமும் எல்லோரும் எளிதில் பெறும்வகையில் சுகாதாரப் பணியை மாற்றியமைத்தல் மூலமும் இதை நிறைவேற்றுதல்.
  8. சமநிலை கொண்ட உலகை நிறுவுதல்:  எல்லோருக்கும் குறிப்பாக பெண்களுக்கும் சமமமான வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இதை செயல்படுத்துதல்
  9. ஒன்றிணைந்த உலகை உருவாக்குதல்: சரக்குகள், மனிதர்கள், சேவைகள் தங்கு தடையின்றி செல்வதற்கு வழியமைத்தன் மூலம் இதை அடையலாம்.
  10. நல்லிணக்கமுள்ள உலகைத் தோற்றுவித்தல்: சித்தாந்தங்கள்,  பழக்க வழக்கங்கள், பாரம்பரியம் ஆகியவை இயற்கையாகவும் நல்லிணக்கத்துடனும் கடைப்பிடிக்கப்படுவது.

 

இந்த குறிக்கோள்களின் மூலமும் அவற்றின் மீதான செயல்பாடுகளின் மூலமும் நம் சொந்த மக்களின் நலன்களை நிறைவேற்றுவதுடன், உலக சமுதாயத்தின் நலனுக்காக நாம் நேரடியாக  பங்களிப்புச் செலுத்தலாம். கூட்டுறவை மேம்படுத்தவும் ஒவ்வொரு நாட்டின் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பதற்கும் இந்தியா விருப்பமுள்ள, அர்ப்பணிப்புள்ள கூட்டாளியாக இருக்கத் தயாராக உள்ளது. இந்தப் பாதையில் நமது வளர்ச்சி அமையவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

“பிரிக்ஸ்” அமைப்பின் 2017ஆம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை ஏற்பதற்காகவும் க்ஸியாமென் நகரில் மனமார அளிக்கப்பட்ட வரவேற்புக்காகவும் விருந்தோம்பலுக்காகவும் அதிபர் சி அவர்களைப் பாராட்டுகிறேன். அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெறும் உச்ச மாநாட்டை ஏற்பாடு செய்வதற்காக அதிபர் ஸூமா அவர்களை வரவேற்பதுடன் அவருக்குஇந்தியாவின் முழு ஆதரவையும் அளிக்கிறேன்.

நன்றி,.

 

****


(Release ID: 1501894) Visitor Counter : 258


Read this release in: English