பிரதமர் அலுவலகம்

சீனாவில் ஜியாமென் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் அலுவல் கவுன்சில் கூட்டத்தில் உரையாடலில் பிரதமர் தெரிவித்த கருத்து (செப்டம்பர் 04, 2017)

Posted On: 04 SEP 2017 4:47PM by PIB Chennai

மேன்மைக்குரிய தலைவர்களே,

புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர் அவர்களே,

பிரிக்ஸ் அலுவல் கவுன்சில் உறுப்பினர்களே

பிரிக்ஸ் அலுவல் கவுன்சிலின் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அலுவல் கவுன்சிலில் நீங்கள் ஆற்றும் பணிகள், பிரிக்ஸ் பங்களிப்புத்தன்மையின் தொலைநோக்கு சிந்தனைக்கு நடைமுறை சாத்தியமான வடிவத்தை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நீங்கள் உருவாக்கியுள்ள பங்களிப்பு நிலைகள், பிணைப்புகள் தொடர்புகள் பிரிக்ஸ் அமைப்பின் ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் சக்தியை ஊட்டும் வகையில் அமைந்துள்ளன. கடந்த ஆண்டு கோவாவில் இதன் கூட்டம் நடைபெற்ற போது, புதிய வளர்ச்சி வங்கி (NDB) மற்றும் பிரிக்ஸ் அலுவல் கவுன்சிலுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இப்போது NDB உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஏற்படுவது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

மேன்மைகுரியவர்கள் மற்றும் நண்பர்களே,

உலகில் அதிக திறந்த பொருளாதார நாடுகளில் வேகமாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. வெளிநாட்டு நேரடி முதலீடு 40 சதவீதம் அதிகரித்து, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முதலீடு வருகை உயர்ந்திருக்கிறது. தொழில் செய்வதற்கு உகந்த நாடு என்பதற்கான உலக வங்கியின் குறியீட்டில் இந்தியா ஏற்றம் கண்டிருக்கிறது. அதேபோல, உலகளவில் போட்டித்தன்மைக்கான குறியீட்டில், கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் 32 இடங்கள் முன்னேறி இருக்கிறோம். கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரி, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை ஆகும். ஒரே முயற்சியில் 130 கோடி மக்களுக்கு ஒருங்கிணைந்த சந்தை உருவாக்கப் பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் நாட்டின் பொருளாதார அமைப்பை மாற்றி வருகின்றன. இந்தியாவை அறிவுசார்ந்த, தொழில்திறன் ஆதரவு பெற்ற, தொழில்நுட்பத்தால் உந்தப்படும் சமுதாயமாக மாற்றுவதில் அவை உதவி செய்கின்றன.

மேன்மைகுரியவர்கள் மற்றும் நண்பர்களே,

வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவித்தல், தொழில்திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல், கட்டமைப்பு வளர்ச்சி, சிறு மற்றும் குறு தொழில் துறை வளர்ச்சி, மின்னணு வணிகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்றவற்றில் முன்னுரிமை விஷயங்களுக்குப் பொருந்தும் வகையிலான செயல்பாடுகளை பிரிக்ஸ் அலுவல் கவுன்சில் செய்து வருவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆக்கபூர்வமான பல பரிந்துரைகள் உங்கள் ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் உருவாகியுள்ளன. பிரிக்ஸ் தகுதிப்படுத்தும் முகமையை உருவாக்குதல், எரிசக்தி ஒத்துழைப்பு, பசுமை நிதி, டிஜிட்டல் பொருளாதாரம் போன்றவற்றில் குறிப்பாக நீங்கள் பணியாற்றி வருகிறீர்கள். இலக்கை நோக்கிய உங்களின் முயற்சிகளுக்கு அரசாங்கங்கள் என்ற முறையில் நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என கூறி நான் நிறைவு செய்கிறேன். வணிகத்தை மேம்படுத்துவது மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு என்ற எங்களின் பொதுவான நோக்கத்தை அடையும் நெருக்கத்தில் எங்களை பிரிக்ஸ் அலுவல் குழு கொண்டு செல்வதையும் நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்.

நன்றி.



(Release ID: 1501736) Visitor Counter : 123


Read this release in: English