பிரதமர் அலுவலகம்

வருவாய் அறிவு சங்கக் கூட்டத்தில் வரி நிர்வாகிகளிடையே பிரதமர் உரை

Posted On: 01 SEP 2017 3:33PM by PIB Chennai

இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், புதுதில்லியில் வருவாய் அறிவு சங்கக் கூட்டத்தை துவக்கி வைத்து, மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி நிர்வாகிகளிடையே உரையாற்றினார்.

அலுவலர்கள் தங்களது செயல்திறனில், “அவசரத்தன்மை” மற்றும் “அளவிடுதல்” ஆகியவற்றை உள்ளடக்கி தங்களது பணி கலாச்சாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

சரக்கு மற்றும் சேவை வரியின் நன்மைகளை குறிப்பிட்ட பிரதமர், நாட்டில் பொருளாதார ஒருமைப்பாடு மற்றும் அமைப்பில் வெளிப்படத்தன்மை ஆகியவற்றைத் தவிர, இரண்டு மாதங்களில் மறைமுக வரி அமைப்பின் கீழ் மேலும் 17 லட்சம் புதிய வணிகர்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சரக்கு மற்றும் சேவை வரியின் அதிகமான பலன்களை அனைத்து வணிகர்களுக்கும் கிடைக்கும் வகையில், ரூ.20 லட்சத்திற்கும் குறைவான வருவாய் உடைய சிறு வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து வணிகர்களையும் நாம் சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பின் கீழ் பதிவு செய்ய வைக்க வேண்டும் என்றார் பிரதமர். இப்பிரிவினருக்காக தனியே ஒரு அமைப்பினை உருவாக்கிட அலுவலர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

2022-ம் ஆண்டு, நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்குள் நாட்டின் வரி நிர்வாகத்தை மேம்படுத்திட தெளிவான இலக்குகளை அலுவலர்கள் நிர்ணயிக்க வேண்டும் என்றார் பிரதமர். ஊழல்வாதிகளின் நம்பிக்கையை நொறுக்கும் வகையிலும், நேர்மையாக வரி செலுத்துவோரிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான காலத்தை உருவாக்கிட மத்திய அரசு பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக, மத்திய அரசு பணமதிப்பிழக்கச் செய்தல் நடவடிக்கை மற்றும் கருப்புப் பணம் மற்றும் பினாமி சொத்துக்களுக்கு எதிரான கடுமையான சட்டங்களின் செயல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

வரி நிர்வாகிகளிடையேயான பரிமாற்றங்கள் அதிகளவில் மனிதர்களிடையே நேரிடையாக நடைபெற வேண்டும் என்றார் பிரதமர். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி “இணைய-மதிப்பீடு” மற்றும் ரகசிய செயல்முறைகளுக்கு உந்துதல் அளிக்க வேண்டும் என்ற அவர், இதனால் சட்டத்திற்கு தடை போட நினைப்பவர்களின் கனவு நிறைவேறாது என்றார்.

திரு. நரேந்திர மோடி அவர்கள், வரி தொடர்பான தீர்ப்பு மற்றும் மேல்முறையீடுகள் அதிகளவில் நிலுவையில் இருப்பது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்தார். இவ்வழக்குகளில் முடங்கியுள்ள அதிகளவிலான பணம், ஏழைகளின் நல்வாழ்விற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர். வருவாய் அறிவுச் சங்க கூட்டத்தில், நிலுவைகளை குறைப்பதற்கான செயல்திட்டத்தை அலுவலர்கள் உருவாக்கிட கேட்டுக் கொண்டார்.

அறிவிக்கப்படாத வருவாய் மற்றும் சொத்தை கண்டறியவும், தீர்மானிக்கவும் அதிகாரிகள் புள்ளிவிபர பகுப்பாய்வு கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்றார் பிரதமர். ஒவ்வொரு ஆண்டும், அதிகாரிகளால் வரி வருவாயை உயர்த்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அமைப்பிற்கு வரவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்ற தொகை, கிடைக்கப் பெறுவதில்லை. “வரி உயர்த்தப்பட்டது ஆனால் கிடைக்கப்பெறவில்லை” என்பதற்கு காலஅளவீடு தீர்மானத்தை உருவாக்குவதுடன், நேர்மையானவர்கள், நேர்மையற்றவர்களின் தீயசெயல்களுக்கு தொடர்ந்து விலை செலுத்தக்கூடாததை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார் பிரதமர். இது தொடர்பாக, புள்ளிவிபர பகுப்பாய்வு மற்றும் விசாரணைப் பிரிவை வலுப்படுத்தும் வகையில் வரித் துறைகளில் உள்ள மனிதவள ஆதார மேலாண்மையை மொத்த மறுசீரமைக்கலாம் என்ற ஆலோசனையை அவர் வழங்கினார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் அறிவு சங்கக் கூட்டம், வரி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான உரிய உத்திகள் உருவாக்கும் என நம்புவதாக பிரதமர் தெரிவித்தார்.


(Release ID: 1501608) Visitor Counter : 119


Read this release in: English