மத்திய அமைச்சரவை
டாஹிசார் ரிமோட் ரிசீவிங் நிலையத்தில் மெட்ரோ பணிமனை அமைக்க AAI-க்கு உள்ள 40 ஏக்கர் நிலத்தை மும்பை மாநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்திற்கு (MMRDA) மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல். மும்பை, கோராய் என்ற இடத்தில் மாநில அரசுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலம் மாற்றாக பெறப்படும்
Posted On:
23 AUG 2017 4:11PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், டாஹிசார் RR நிலையத்தில் இந்திய விமான நிலையங்களின் ஆணையத்துக்கு (AAI) சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை, மும்பை மெட்ரோபாலிடன் பிராந்திய மேம்பாட்டு ஆணையத்துக்கு (MMRDA) மெட்ரோ பணிமனை அமைப்பதற்காக மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மும்பை கோராய் என்ற இடத்தில் உள்ள மாநில அரசின் 40 ஏக்கர் நிலம் இதற்கு மாற்றாக பெறப்படும். மும்பையில் மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற எம்.எம்.ஆர்.டி.ஏ.வுக்கு உதவும் வகையில் இந்த நிலப் பரிமாற்றம் அமையும்.
வழிமுறைகள் :
இந்த முன்மொழிவை பரிசீலிக்கும்போது, பின்வரும் வழிமுறைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது :
- 2016 - 17 ஆம் ஆண்டு முத்திரைக் கட்டணத்துக்கான ஆவணத்தின் அடிப்படையில் 40 ஏக்கர் நிலத்துக்கு வரும் கட்டண வித்தியாசமாக தீர்மானிக்கப்பட்ட ரூ.472.70 கோடியை அல்லது நிலம் ஒப்படைக்கும் போது உள்ள முத்திரைக் கட்டணத்தின் படியான தொகையை, இதில் எது அதிகமோ அதை, எம்.எம்.ஆர்.டி.அளிக்கும்.
- கோராய் என்ற இடத்தில் உள்ள நிலத்தை சமன்படுத்தி, சீர் செய்து மற்றும் எல்லா வகைகளிலும் எல்லைகளை வரையறை செய்து 40 ஏக்கர் நிலத்தையும் எம்.எம்.ஆர்.டி. ஒப்படைக்கும். கோரையில் உள்ள நிலம் தொடர்பாக அனைத்து ஆவணங்கள், வருவாய்த் துறை வரைபடங்களையும் உரிமைகள் பதிவேட்டில் AAI-யின் பெயருக்கு முறைப்படி எம்.எம்.ஆர்.டி. ஒப்படைக்க வேண்டும்.
- AAI-க்கு 24 ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு 40 ஏக்கர் நிலத்தை எம்.எம்.ஆர்.டி. அடையாளம் காண / வரையறை செய்ய வேண்டும். அருகாமையில் உள்ள நகர சாலையில் இருந்து தெளிவான அணுகுதல் / பாதை வசதியுடன் இதைச் செய்ய வேண்டும்.
- டாஹிசரில் முன்கூட்டியே தற்காலிக அடிப்படையில் 2000 சதுரமீட்டர் நிலத்தை AAI ஒப்படைக்கும்.
வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கான வாய்ப்பு :
இப்போதைய முன்மொழிவால் தொழில் திறன் உள்ள, ஓரளவு தொழில் திறன் உள்ள தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். மெட்ரோ கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள உற்பத்தித் தொழிற்சாலைகளிலும் வேலைகள் உருவாக்கப்படும். மெட்ரோ ரயில் பெட்டி பணிமனை செயல்படத் தொடங்கியதும், நேரடி / மறைமுக வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
பின்னணி :
மும்பையில் ஒட்டுமொத்தமான பொதுமக்கள் போக்குவரத்துத் திறனை மேம்படுத்தும் வகையில் பல கட்டங்களாக மும்பை மெட்ரோ ரயில் மாஸ்டர் பிளான் (146.50 கி.மீ.) திட்டத்தை மகாராஷ்டிர அரசு அமல் செய்கிறது. மும்பை மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு எம்.எம்.ஆர்.டி.வின் கீழ் மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் (MMRC) என்ற சிறப்பு நிறுவனம் உருவாக்கப் பட்டுள்ளது. டாஹிசரில் (E) இருந்து அந்தேரி (E) வரையிலான மெட்ரோ பாதையில் ரயில் பெட்டி பணிமனை ஒன்றை உருவாக்க MMRC திட்டமிட்டுள்ளது. ரயில்பெட்டி பணிமனை அமைக்க அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு பகுதி நிலம், அதாவது 17.47 ஹெக்டர் (சுமார் 44 ஏக்கர்) நிலம், AAI-க்குச் சொந்தமானதாக உள்ளது. ரிமோட் ரிசீவிங் நிலையம் அமைந்துள்ள டாஹிசரில் மொத்தம் சுமார் 64 ஏக்கர் நிலம் AAI-க்குச் சொந்தமானதாக உள்ளது. நிலத்தில் சில பகுதி ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது.
(Release ID: 1500573)