பிரதமர் அலுவலகம்

நிதி ஆயோக் அமைப்பு ஏற்பாடு செய்த “மாற்றத்துக்கான சாதனையாளர்கள்” நிகழ்ச்சியில் இளம் தலைமை செயல் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார் பிரதமர்

Posted On: 22 AUG 2017 7:13PM by PIB Chennai

தில்லியில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் மையத்தில் (பிரவாசி பாரதிய கேந்திரா) , நிதி ஆயோக் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த “மாற்றத்துக்கான சாதனையாளர்கள் – அரசு மற்றும் வர்த்தகர்களிடையேயான ஒத்துழைப்பின் (G2B partnership) மூலம், இந்தியாவை மாற்றியமைத்தல்” நிகழ்ச்சியில், இளம் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்த நிகழ்ச்சியில், இளம் தொழில்முனைவோருடன் கடந்த வாரத்தில் கலந்துரையாடிய பிரதமர், இன்று இரண்டாவது முறையாக உரையாற்றினார்.

இளம் தலைமை செயல் அதிகாரிகள், 6 குழுக்களாக, இந்தியாவில் தயாரிப்போம்; விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குதல்; உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு; நாளைய நகரங்கள்; நிதித்துறையை சீரமைத்தல்; 2022-ம் ஆண்டில் புதிய இந்தியா ஆகிய கருத்துருக்கள் அடிப்படையில், பிரதமர் முன்னிலையில், செயல் விளக்கம் (presentation) அளித்தனர்.

தலைமை செயல் அதிகாரிகள் அளித்த செயல் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்த புதிய யோசனைகள் மற்றும் புத்தாக்க முயற்சிகளுக்கு பிரதமர் வரவேற்பு தெரிவித்தார். மேலும், நாட்டின் நலனுக்காக பயனுள்ள கருத்துகளை தெரிவித்ததற்காகவும், யோசனைகளை உருவாக்குவதற்காக நேரத்தை செலவிட்டதற்காகவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்த செயல் விளக்கங்களை, அரசின் முக்கிய முடிவுகளை எடுக்கும் குழு, தீவிரமாக கவனித்துக் கொண்டதாகவும், செயல் விளக்கம் அளிக்கப்பட்ட ஒவ்வொரு விவகாரத்திலும் 360 டிகிரி கோணத்தில் தெளிவாக இடம்பெற்றுள்ள கருத்துகள், கொள்கைகளை உருவாக்குவதில் நிச்சயம் பயனளிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.

ஆளுமையில் மக்களின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமான அம்சம் என்று பிரதமர் தெரிவித்தார். அதேபோல, அரசுடன் தலைமைச் செயல் அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கை என்ற இந்த முயற்சியானது, நாட்டுக்காகவும், மக்களின் நலனிலும் தலைமைச் செயல் அதிகாரிகளின் பங்களிப்பை அதிகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை நினைவுகூர்ந்த பிரதமர், சுதந்திரத்துக்காக அனைத்து இந்தியர்களையும், ராணுவ வீரர்களையும், அவர்களது சொந்தப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டவாறே மகாத்மா காந்தி தயார்படுத்தியதாக தெரிவித்தார். எனவே, சுதந்திரப் போராட்டத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு மகாத்மா காந்தி உதவியதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று, வளர்ச்சியும், மக்கள் இயக்கமாக மாற வேண்டியது கட்டாயம் என்று பிரதமர் தெரிவித்தார். இதற்கான உணர்வை நாம் உருவாக்க வேண்டும். இதில், 2022-ம் ஆண்டுக்கான இந்தியாவை உருவாக்குவதில், நமது பங்களிப்பு இலக்கை நாம் அனைவரும் நிர்ணயிக்க வேண்டும். நீங்கள் தான் எனது குழு. இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்ல நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்று தலைமைச் செயல் அதிகாரிகளிடம் பிரதமர் கூறினார்.

வேளாண்மைத் துறையில் மதிப்புக் கூடுதல் நடவடிக்கைகளை உதாரணமாக குறிப்பிட்ட பிரதமர், விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குதல் போன்ற நோக்கங்களை நிறைவேற்றுவதில், எதிர்பார்த்த பலன் கிடைக்க பல்முனை கண்ணோட்டம் அவசியம் என்று வலியுறுத்தினார். உணவுப் பதப்படுத்துதல் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால்தான், வேளாண்மைத் துறையில் மிகப்பெரும் இழப்பு ஏற்படுவதாக தெரிவித்தார்.

மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு முடிவுகள் மூலம், அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். யூரியா கிடைப்பதை உறுதிப்படுத்தவும், உற்பத்தியை அதிகரிக்கவும், எரிவாயு கிடைக்கச் செய்தல், கூடுதல் உற்பத்திக்கு ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற அரசு மேற்கொண்ட முடிவுகளை பிரதமர் விளக்கமாக எடுத்துரைத்தார். இந்த நடவடிக்கையால், கூடுதலாக 20 லட்சம் டன்கள் அளவுக்கு யூரியா உற்பத்தி செய்யப்பட்டது. யூரியாவில் வேப்ப எண்ணெயை கலந்ததன் மூலம், மாபெரும் மாற்றம் ஏற்பட்டது என்று பிரதமர் கூறினார்.

இந்தியாவை குறைந்த ரொக்கம் கொண்ட சமூகமாக மாற்ற அரசு விரும்புவதாக பிரதமர் தெரிவித்தார். இதனை நிறைவேற்றுவதற்கான நிலையை ஏற்படுத்துவதற்காக அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று தலைமை செயல் அதிகாரிகளை பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இதேபோல, திருவிழாக் காலங்களில், காதிப் பொருட்களை, பரிசாக வழங்குவது ஆகியவற்றின் மூலம் ஊக்குவிக்க வேண்டும். இதனால், ஏழை மக்கள் பெருமளவில் பயனடைவார்கள் என்று அவர் தெரிவித்தார். வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், ஏழைகளையும் உள்ளடக்கும் வகையிலான, சூழ்நிலையை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

அரசுக்கு பொருட்களை வழங்குவதில், சிறு வர்த்தகர்களுக்கு இடையே வெற்றிகரமான போட்டியை ஏற்படுத்த முடியும் என்பதற்கு அரசின் மின்னணு சந்தையை (GeM) உதாரணமாக பிரதமர் கூறினார். அரசு மின்னணு சந்தை மூலம், இதுவரை ரூ.1,000 கோடி அளவுக்கு பரிவர்த்தனை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த அமைப்பில் 28,000 விநியோகஸ்தர்கள் தங்களது பங்களிப்பை செய்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

இந்தியர்கள், தங்களது சொந்த நாட்டுக்கு பெருமையைத் தேடித் தர வேண்டியது கட்டாயம் என்று பிரதமர் கூறினார். இந்தியாவிற்குள் சுற்றுலாப் பகுதிகளை ஊக்குவிக்கும் மனப்பான்மையை ஒவ்வொருவரும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல, தங்களது தொடர்பில் இருப்பவர்களிடையே சுற்றுலாவை ஊக்குவிக்கும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

கழிவுகளிலிருந்து பொருட்களை உருவாக்கும் தொழில்முனைவோரை உதாரணமாக குறிப்பிட்ட பிரதமர், இது தூய்மை இந்தியா மற்றும் தூய்மையான சுற்றுச்சூழல் என்ற இலக்குகளை நிறைவேற்ற உதவும் என்றார். நாட்டில் உள்ள மக்கள் எதிர்கொண்டுவரும் சிறுசிறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையிலான பொருட்களை வழங்குவதை தொழில்முனைவோரும், வர்த்தகர்களும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், பல்வேறு மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



(Release ID: 1500416) Visitor Counter : 145


Read this release in: English