பிரதமர் அலுவலகம்

மண் வள அட்டைகள் மற்றும் பிரதமர் பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆய்வு

Posted On: 21 AUG 2017 1:00PM by PIB Chennai

மண் வள அட்டைகள் மற்றும் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் ஆகிய விவசாயத்துறை சார்ந்த இரண்டு முக்கிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

மண் வள அட்டைகளை விநியோகிக்கும் முதல் சுற்று 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவு பெற்றுள்ளதாக பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது. மீத முள்ள மாநிலங்களில் சில வாரங்களுக்குள் நிறைவு பெற்று விடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த பிரதமர் மாதிரி வலையம் மற்றும் பல்வேறு மண் வள ஆய்வகங்களின் மாறுபாடுகள் குறித்து முறையான சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இதன் மூலம் பரிசோதனை அறிக்கைகளின் தரம் உறுதி செய்யப்படும் என்றார்.

மண் வள அட்டைகள் உள்ளூர் மொழிகளில் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அதன் மூலம் விவசாயிகளால் அவற்றை வாசிக்கவும் எளிதில் புரிந்து கொள்ளவும் முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

சமீபத்திய தொழில்நுட்பத்தை துரிதமாக பின்பற்ற வேண்டும் என்று ஊக்குவித்த பிரதமர், மண் வள பரிசோதனைகள் கைகளில் எடுத்துச் செல்லக்கூடிய கருவிகளின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். தொழில் துவங்குநர்கள் மற்றும் தொழில்முனைவோரை இந்த முயற்சியில் ஈடுபடுத்துவது குறித்து ஆராய வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.

பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் குறித்து பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு காரீப் பருவம் மற்றும் 2016-17ஆம் ஆண்டுக்கான ராபி பருவத்திற்கான காப்பீட்டு கோரிக்கைகள் ரூ700 கோடி அளவில் வழங்கப்பட்டுள்ளன என்றும் 90 லட்சம் விவசாயிகள் பலனடைந்துள்ளனர் என்றும் பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது.

சமீபத்திய தொழில்நுட்பங்களான ஸ்மார்ட்போன்கள், தொலையுணர்வுக் கருவிகள், செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் டிரோன்களை பயன்படுத்தி பயிர்க்காப்பீட்டுக் கோரிக்கைகளுக்கான தரவுகள் துரிதமாக திரட்டப்படுவதாகவும் பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது.

வேளாண்துறை அமைச்சகம், நிதி ஆயோக் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

***



(Release ID: 1500248) Visitor Counter : 128


Read this release in: English