மத்திய அமைச்சரவை
அறிவுசார் சொத்துரிமைகள் (IPR) குறித்து இந்தியா ஸ்வீடன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
16 AUG 2017 4:13PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவுக்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான அறிவுசார் சொத்துரிமைகள் (IPR-கள்) விஷயத்தில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு (MoU) ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க பயிற்சித் திட்டங்கள் மற்றும் தொழில்நுணுக்க பரிமாற்றங்களில் கூட்டாக பணியாற்றலும், சிறந்த நடைமுறைகளை பரிமாற்றம் செய்து கொள்ளவும் பரவலான மற்றும் வளைந்துகொடுக்கக் கூடிய நடைமுறைகளை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துகிறது. அறிவுசார் சொத்துரிமைகளை நல்ல முறையில் பாதுகாக்கவும் இது வகை செய்கிறது.
விளைவு :
இரு நாடுகளிலும் தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கணிசமான பலன்கள் அளிக்கக் கூடிய வகையில் அறிவுசார் சொத்துரிமை சூழல்கள் மற்றும் புதுமை சிந்தனைகளில் உள்ள அனுபவங்களை இந்தியா பரிமாற்றம் செய்து கொள்வதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்திய மக்களைப் போன்று, பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் பலதரப்பட்ட அறிவுசார் சொத்துரிமை உருவாக்கங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையில் சிறந்த நடைமுறைகள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும். உலகளாவிய புதுமை சிந்தனையில் முக்கிய பங்காளராக மாறுவது என்ற இந்தியாவின் பயணத்தில் தடம் பதிக்கும் ஒரு நடவடிக்கையாக இது இருக்கும். தேசிய அறிவுசார் சொத்துரிமைக் கொள்கை 2016-ன் நோக்கங்களை மேலும் வலுப்படுத்துவதாகவும் இருக்கும்.
அம்சங்கள் :
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பின்வரும் துறைகளில் ஒத்துழைப்புக்கான செயல்பாடுகளை முடிவு செய்வதற்கு இரு தரப்பிலும் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கூட்டு ஒத்துழைப்புக் கமிட்டி (JCC) அமைக்கப்படும் :
- இரு நாடுகளிலும் பொதுமக்கள், தொழில் துறையினர் மற்றும் கல்வி நிலையங்கள் மத்தியில் அறிவுசார் சொத்துரிமை விழிப்புணர்வு குறித்த சிறந்த நடைமுறைகள், அனுபவங்கள் மற்றும் அறிவைப் பரிமாற்றம் செய்து கொள்வது;
- பயிற்சித் திட்டங்கள், நிபுணர்கள் பரிமாற்றம், தொழில்நுணுக்கப் பரிமாற்றங்கள் மற்றும் குறிப்பிட்ட துறையினரை சென்றடையும் செயல்பாடுகளில் கூட்டு முயற்சிகள்;
- அறிவுசார் சொத்துரிமை குறித்து தொழில்துறை, பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R & D) நிறுவனங்கள் மற்றும் சிறு குறு தொழில்முனைவோர்களுடன் (SME-கள்) அறிவுசார் சொத்துரிமை குறித்த சிறந்த நடைமுறைகள், அனுபவங்கள் மற்றும் அறிவை பரிமாற்றம் செய்து கொள்வது. இரு தரப்பாலும் தனியாக அல்லது கூட்டாக ஏற்பாடு செய்யப்படும் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் இது செய்யப்படும்.
- காப்புரிமைகள், டிரேட்மார்க்குகள், தொழிற்சாலை வடிவமைப்புகள், எழுத்துரிமைகள் மற்றும் பூகோள குறியீடுகள் குறித்த விண்ணப்பங்களை கையாள்வதிலும், அறிவுசார் சொத்துரிமைகள் பாதுகாப்பு, செயலாக்கம் மற்றும் பயன்பாடு குறித்த தகவல்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை பரிமாற்றம் செய்து கொள்வது.;
- நவீனப்படுத்தும் திட்டங்களை அமல்படுத்துதல் மற்றும் தானியங்கிமயமாக்கல், அறிவுசார் சொத்துரிமைகளில் புதிய ஆவணப்படுத்தல் மற்றும் தகவல் முறைமைகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பு;
- பாரம்பரிய அறிவு எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வது, சிறந்த நடைமுறைகளை பரிமாற்றம் செய்து கொள்வதில் ஒத்துழைப்பு. தகவல் தொகுப்புகள் பற்றிய பாரம்பரிய அறிவு மற்றும் தற்போதைய அறிவுசார் சொத்துரிமை முறைமைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தலும் இதில் அடங்கும்;
- டிஜிட்டல் சூழ்நிலையில், அறிவுசார் சொத்துரிமையில் வரம்பு மீறல்கள் தொடர்பான சிறந்த நடைமுறைகள் மற்றும் தகவல்களை, குறிப்பாக எழுத்துரிமை பிரச்சினைகளில் உள்ளவற்றை பரிமாற்றம் செய்து கொள்வது; மற்றும்
- சம்பந்தப்பட்ட தரப்பினால் பரஸ்பர புரிதலின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் ஒத்துழைப்புக்கான இதர செயல்பாடுகள்.
*****
(Release ID: 1500035)
Visitor Counter : 236