பிரதமர் அலுவலகம்

‘நாவிகா சாகர் பரிக்கிரமா’ கடல் சாகசப் பயணக்குழுவினரை பிரதமர் சந்தித்தார்

Posted On: 16 AUG 2017 7:00PM by PIB Chennai

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ்.வி தரிணி பாய்மரக் கப்பலில் பயணித்து உலகைச் சுற்றி வரவுள்ள இந்திய கடற்படையின் ஆறு பெண் அதிகாரிகள் புது தில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தனர்.

      இந்தியாவைச் சேர்ந்த அனைத்து பெண்கள் குழுவினர் கடல் வழியே உலகை சுற்றி வரப்போவது இதுவே முதல் முறையாகும். இந்த குழுவினர் இந்த மாத இறுதியில் கோவாவில் இருந்து தமது பயணத்தைத் தொடங்குகிறார்கள். உலகத்தைச் சுற்றி வந்த பின்னர்,  அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் கோவா திரும்புகின்றனர். இந்தப் பயணத்திற்கு நாவிகா சாகர் பரிக்கிரமா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பயணம், ஐந்து கட்டமாக, ஃபெர்மன்டேல்(ஆஸ்திரேலியா), லிட்லேடன்(நியுசிலாந்து), போர்ட் ஸ்டான்லி(ஃபாக்லாந்து), கேப் டவுன் (தென் ஆப்பிரிக்கா) ஆகிய நான்கு துறைமுகங்களில் நின்று செல்லும்.

      55 அடி நீளம் உள்ள பாய்மரக் கப்பலான ஐ.என்.எஸ்.வி. தரிணி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இது இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.

      தாம் மேற்கொள்ள உள்ள கடற்பயணம் தொடர்பான விவரங்களை இந்த குழுவினர் பிரதமரிடம் விவரித்தனர். சாகசப் பயணம் சிறப்பாக அமைய, இந்த பெண்கள் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், அவர்களின் பயணம் தொடர்பான தகவல்களை அவ்வப்போது கேட்டுத் தெரிந்து கொள்ளப் போவதாகவும் குறிப்பிட்டார். உலகெங்கிலும் இந்தியாவின்   திறன்களையும், வலிமையையும் முன்நிறுத்துமாறு அவர் பயணக்குழுவினரை ஊக்குவித்தார். பயணத்தை வெற்றிகரமாக முடித்த பின்னர், தமது அனுபவங்களை எழுதுமாறும், பகிர்ந்து கொள்ளுமாறும் பிரதமர் அவர்களை கேட்டுக்கொண்டார்.

      லெப்டி. கமாண்டர் வர்திகா ஜோஷி தலைமையில் லெப்டினட் கமாண்டர்கள் பிரதிபா ஜாம்வால், பி. சுவாதி, லெப்டினன்ட்டுகள் எஸ். விஜயா தேவி, பி. ஐஸ்வர்யா, பாயல் குப்தா ஆகியோர் இந்த சாகசப் பயணக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.      



(Release ID: 1499948) Visitor Counter : 157


Read this release in: English